Advertisment

தமிழக மக்களுக்காக ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை கொண்டு வந்துள்ளோம்; மோடி

இந்தியாவின் வளர்ச்சியில் தமிழகத்தின் சிறந்த பங்களிப்பை காண முடிகிறது. அதேநேரம், தமிழகத்துக்கு முன்பை விட 3 மடங்கு அதிக நிதியை மத்திய அரசு செலவு செய்துள்ளது; திருச்சியில் பிரதமர் மோடி பேச்சு

author-image
WebDesk
New Update
Modi at Trichy

இந்தியாவின் வளர்ச்சியில் தமிழகத்தின் சிறந்த பங்களிப்பை காண முடிகிறது. அதேநேரம், தமிழகத்துக்கு முன்பை விட 3 மடங்கு அதிக நிதியை மத்திய அரசு செலவு செய்துள்ளது; திருச்சியில் பிரதமர் மோடி பேச்சு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

திருச்சி விமான நிலையத்தில் இரண்டாவது முனையம் ரூ.1112 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடந்தது. இந்த விழாவில் கலந்துகொண்டு புதிய முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி. திறப்பு விழாவில் பேசிய பிரதமர் மோடி, "எனது தமிழ் குடும்பமே உங்கள் அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துகள். இந்த ஆண்டில் எனது முதல் நிகழ்ச்சியே தமிழகத்தில் நடப்பதை பாக்கியமாக கருதுகிறேன். தமிழக மக்களுக்காக ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை கொண்டுவந்துள்ளோம். இந்தத் திட்டங்களால் தமிழகம் மேலும் வளர்ச்சியடையும். மேலும், துவங்கப்பட்ட திட்டங்களால் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகும்.

Advertisment

கடந்த ஆண்டின் இறுதியில் தமிழக மக்கள் அதிக வலிகளை அனுபவித்தீர்கள். மாநிலத்தில் அண்மையில் கனமழையால் உயிரிழப்பும், உடமைகள் இழப்பும் அதிகம் ஏற்பட்டன. இத்தகைய சூழ்நிலையில் மத்திய அரசு தமிழகத்துக்கு உறுதுணையாக இருந்து வருகிறது” என்றார்.

விழாவில் சமீபத்தில் மறைந்த தே.மு.தி.க நிறுவனர் விஜயகாந்துக்கு இரங்கல் தெரிவித்தார் பிரதமர் மோடி. இது குறித்து தொடர்ந்து பேசுகையில், "கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜயகாந்தை இழந்தோம். அவர் சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் `கேப்டன்' தான். திரைப்படங்களில் தன்னுடைய செயல்பாடுகள் வாயிலாக மக்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டிருக்கிறார் விஜயகாந்த். அரசியல்வாதியாக அவர் மக்கள் நலனை முன்னிறுத்தி வந்திருக்கிறார். அவருடைய மறைவுக்கு என்னுடைய இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவும் மிகவும் வேதனையை ஏற்படுத்தியது. சர் சி.வி.ராமன் போன்ற அறிஞர்களின் பங்கு நாட்டின் வளர்ச்சியில் அளப்பரியது. அந்த திறமைசாலிகளை உருவாக்கியது தமிழக மண். மேலும், திருவள்ளூவர், பாரதியார் போன்ற ஞானிகள் அற்புதமான இலக்கியங்களை படைத்துள்ளனர்.

நான் எப்போதெல்லாம் தமிழகம் வருகிறேனோ அப்போதெல்லாம் எனக்கு புதிய உத்வேகம் கிடைக்கிறது. எனக்கு ஏராளமான தமிழ் நண்பர்கள் உண்டு. அவர்களிடமிருந்து தமிழ் கலாசாராத்தை நான் கற்றுக் கொள்கிறேன். நான் எங்கு சென்றாலும் தமிழ்நாட்டின் கலாசாரம் குறித்து பேச மறப்பதில்லை. எனக்கு தமிழ் மொழி, தமிழ் கலாசாரம் குறித்து உற்சாகம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தமிழ் பண்பாட்டை பற்றி நான் பேசாத நாளே இல்லை. தமிழ் பண்பாடு உலகெங்கும் பரவ வேண்டும் என்ற விருப்பம் எனக்குள் உள்ளது. காசி தமிழ் சங்கமம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் தமிழை கொண்டு செல்கின்றன.

உலகின் தலைசிறந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது. அதேநேரம், இந்தியாவின் நவீன கட்டமைப்பில் முதலீடு அதிகரித்துள்ளதன் நேரடி பயன் தமிழகத்துக்கு கிடைத்து வருகிறது. அதேபோல் மத்திய அரசின் மேக் இன் இந்தியா' திட்டத்தின் சிறந்த தூதுவராகவும் தமிழகம் மாறி வருகிறது. திருச்சியில் தற்போது திறக்கப்பட்டுள்ள இந்த புதிய முனையத்தால் வளர்ச்சி பெருகுவதோடு, விமான நிலையத்தை மேம்படுத்தப்பட்ட சாலையுடன் இணைப்பதால் வெளிநாட்டினர் வருகையும் அதிகரிக்கும்.

தமிழகத்தில் ரயில் போக்குவரத்து மேம்படுத்தப்படுவதால் தொழில் வளர்ச்சியடையும். ஸ்ரீரங்கம், சிதம்பரம், மதுரை, ராமேஸ்வரம், வேலூர் ரயில் மூலம் இணைக்கப்படுகிறது. மாநிலத்தின் வளர்ச்சியே தேசத்தின் வளர்ச்சி என்பதே மத்திய அரசின் நோக்கம். அதை நோக்கியே மத்திய அரசு செயல்படுகிறது. பொருளாதாரம் மற்றும் கலாச்சாரம் மூலமாக இந்தியாவின் வளர்ச்சியில் தமிழகத்தின் சிறந்த பங்களிப்பை காண முடிகிறது. அதேநேரம், தமிழகத்துக்கு முன்பை விட 3 மடங்கு அதிக நிதியை மத்திய அரசு செலவு செய்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் மாநிலங்களுக்கு ரூ.120 லட்சம் கோடி நிதியை மத்திய அரசு அளித்துள்ளது. தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசு பெரும் நிதியை செலவு செய்து வருகிறது. தமிழக இளைஞர்கள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு உள்ளது. அவர்களிடம் இருக்கும் உற்சாகம்தான் வளர்ச்சியடைந்த இந்தியாவின் நம்பிக்கையாக மாறும்." என்றார் பிரதமர் மோடி.

முன்னதாக, இதே விழாவில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், "வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிதியை ஒதுக்க வேண்டும்" என கோரிக்கை வைத்து பேசிய நிலையில், அதற்கு பதிலாக பிரதமர் மோடியின் இந்தப் பேச்சு அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Mk Stalin Pm Modi Trichy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment