வாரிசு வளர்ச்சியில் மட்டுமே எதிர்க்கட்சிகள் கவனம்: தமிழகத்தில் மோடி பிரசாரம்

“நமது கவனம் நாடின் வளர்ச்சி மீது இருக்கிறது. எதிர்கட்சிகள் கவனம் அவர்களின் வாரிசுகளின் வளர்ச்சி பற்றி உள்ளது. ” என்று பிரதமர் மோடி கூறினார்.

pm narendra modi, pm modi speech in madurai, pm modi speech in nagarkovil, pm modi says our concentration on national development, pm modi says opposites concentration on their progeny development, பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம், மதுரை, நாகர்கோவில், தேர்தல் பிரசார மாநாடு, அதிமுக, பாஜக, முதல்வர் பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம், pm modi speech in election campaign at madurai and nagarkovil, bjp, aiadmk, cm edappadi k palaniswami, o panneerselvam

நாகர்கோவிலில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி, “நமது கவனம் நாடின் வளர்ச்சி மீது இருக்கிறது. எதிர்கட்சிகள் கவனம் அவர்களின் வாரிசுகளின் வளர்ச்சி பற்றி உள்ளது. அவர்களது கவனம் எல்லாம் அவர்களின் பிள்ளைகள், பேரக்குழந்தைகளின் வளர்ச்சிபற்றி உள்ளது. உங்கள் குழந்தைகளின் வளர்சிபற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை. ” என்று கூறினார்.

எதிர்க்கட்சிகள் கவனம் வாரிசுகளின் வளர்ச்சி பற்றி உள்ளது – பிரதமர் மோடி விமர்சனம்
தமிழக சட்டமன்றத் தேர்தலில் பிரசாரம் செய்ய தமிழக வருகை தந்த பிரதமர் மோடி, மதுரையிலும் நாகர்கோவிலும் தேர்தல் பிரசார மாநட்டில் பங்கேற்று பேசினார்.

பிரதமர் மோடி முதலில் மதுரையில் நடைபெற்ற தேர்தல் பிரசார மாநாட்டில் கலந்துகொண்டு பிரசாரம் செய்தார். இந்த பிரசார மாநாட்டில், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர்.

ம்துரை தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது: “அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே எதிர்வரும் என்ற சட்டசபைத் தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல. அது தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையே நடைபெறும் தேர்தல். மக்கள் சக்திக்கும் தீய சக்திகளுக்கும் இடையேயான தேர்தல். தமிழர்களுக்கு ஏற்றம் தந்த அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் பெரும் ஏமாற்றம் தந்த தமிழ் சமுதாயத்திற்கு என்றும் ஏமாற்றமே தந்த திமுகவுக்கும் இடையில் நடைபெறுகின்ற தேர்தல். இந்த தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றிய அம்மாவின் ஆட்சிதான் வேண்டும், வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்ட திமுக வேண்டாம் என்பதை தெளிவுபடுத்துகின்ற தேர்தல். ஒளிமயமான அம்மாவின் ஆட்சி தான் வேண்டும் இருள் மயமான திமுக வேண்டாம். அமைதிப் பூங்காவாக தமிழகத்தை உருவாக்கியுள்ள அம்மாவின் ஆட்சி தொடர வேண்டும் திமுக வேண்டாம் என்று எடுத்துக் காட்டும் இந்த தேர்தல்.

நிலங்களைப் பாதுகாத்து குடிமராமத்து செய்துவரும் அம்மாவின் நல்லாட்சி தான் வேண்டும். நில அபகரிப்பு செய்கின்ற பொள்ளாத திமுக வேண்டவே வேண்டாம் என்று உறுதி செய்கின்ற தேர்தல் இது.

அவர்கள் தமிழகத்திற்கு செய்த துரோகத்திற்கு பலனாகத்தான் கடந்த பத்தாண்டுகளாக திமுகவும் காங்கிரசும் வனவாசத்தை அனுபவித்து வருகிறது. தமிழக மக்கள் திமுகவை கைவிட்டுவிட்டார்கள். காங்கிரஸ் கட்சியை எப்போதோ கைகழுவி விட்டார்கள். பிரதமர் மோடி பல்வேறு முனைப்பான திட்டங்களால் இந்தியாவை வல்லரசு நாடுகளுக்கு இணையாக மாற்றியுள்ளார். பல்வேறு நாடுகளின் தலைவர்களால் பாராட்டப்பட்ட தலைவராக பிரதமர் மோடி விளங்கி வருகிறார்.

தமிழகத்திற்கு பிரதமர் மோடி ஏராளமான நன்மைகளையும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள திட்டங்களையும் அளித்துள்ளார். தமிழகம் மருத்துவக் கல்வியில் முன்னேற வேண்டும் என்பதற்காக 11 மருத்துவக் கல்லூரிக்கான அனுமதியை வழங்கியவர் பிரதமர் மோடி. 1500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டுவருவதற்கு உறுதுணையாக இருந்தவர் பிரதமர் மோடி.

தமிழக தாய்மார்கள் சகோதர சகோதரிகள் திமுகவுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டுமென்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். கடந்த பத்தாண்டுகளில் அம்மா அவர்களின் தொலைநோக்கு திட்டங்களால் இந்தியாவிலேயே பிற மாநிலங்களைவிட தமிழகம் பல துறைகளில் முதல் இடத்தில் வகிர்த்து வருகிறது வருகிறது என்பதை தெரிந்து கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.

நமது வருங்கால தலைமுறையினர் மகிழ்ச்சியாக வளமாக நலமாக இருக்க வேண்டுமென்றால் அம்மாவின் அரசு மீண்டும் தமிழகத்தில் அமைந்திட வேண்டும். அதிமுக வேட்பாளருக்கு எம்ஜிஆரின் வெற்றி சின்னமான இரட்டை இலை சின்னத்திலும் பாஜக வேட்பாளர்களுக்கு பிரதமர் மோடியின் வெற்றி சின்னமான தாமரை சின்னத்திலும் பாமகவுக்கு மாம்பழம் சின்னத்திலும் தமாகா மற்றும் தோழமைக் கட்சி வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்திலும் பெருவாரியான வாக்குகளை அளித்து அமோக வெற்றி பெறச் செய்யுமாறு வேண்டி கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறினார்.

இவரையடுத்து பேசிய முதல்வர் பழனிசாமி, “அம்மாவின் வழியில் தொடர்கின்ற சிறப்பாக செயல்படுகின்ற அரசு தொடர வேண்டும். இந்த கூட்டணி வலிமையான கூட்டணி; வெற்றிக் கூட்டணி; தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றன. பெரும்பான்மை இடங்களில் அதிமுக வேட்பாளர்களும் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்று மீண்டும் நாம் ஆட்சியைப் பிடிப்போம்.

ஏனென்றால், மத்தியில் மக்களுக்கு நன்மை செய்கின்ற பிரதமர் மோடி தலைமையிலான அரசு அமைந்துள்ளது. தமிழகத்திலே அம்மாவின் வழியில் அதிமுக அரசும் மத்தியிலும் மாநிலத்திலும் மக்கள் எண்ணத்தின்படி ஆளுகின்ற அரசு இருக்கின்ற காரணத்தினால் எல்லா திட்டங்களும் இன்றைக்கு மக்களின் இல்லம் போய் சேர்ந்து கொண்டிருக்கிறது.

நாடு ஏற்றம் பெற, தமிழகம் வளர்ச்சி பெற மத்திய அரசு பல்வேறு வகையில் உதவி புரிந்து கொண்டிருக்கிறது. பிரதமர் மோடி, கொரோனா வைரஸ் தொற்று பரவியிருந்த வேலையில் ஒரே ஆண்டில் இந்த கொடிய கொரோனா வைரசை குணப்படுத்தக்கூடிய தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் என்று அறிவித்தார். அதே போல, ஒரே ஆண்டில் இன்றைக்கு உலகமே வியக்கின்ற அளவில் கொரோனா வைரஸ் நோயை குணப்படுத்தக்கூடிய தடுப்பூசியை இந்திய நாட்டிற்கு வழங்கிய பெருமை இவரையே சாரும்.

வல்லரசு நாடுகள் இருக்கிறார்கள் அவர்கள்கூட கொரோனோ வைரஸ் பரவலை தடுப்பதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்க முடியாத சூழ்நிலையில், இந்தியாவின் பிரதமர் அவரது அயராத உழைப்பாலும் நம்முடைய மருத்துவ நிபுணர்களின் சாதனையாலும் பிரதமர் கொடுத்த ஊக்கத்தாலும் ஒரே ஆண்டில் கொடிய தொற்றுநோயான கொரோனா வைரஸ் தொற்றுநோயை குணப்படுத்தக்கூடிய தடுப்பூசி கண்டுபிடித்து இன்றைக்கு மக்களுக்கு தடுப்பூசி போடுவதை நாம் பார்க்கிறோம்.

எனவே, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றக்கூடிய ஆற்றல்மிக்கவர், திறன்மிக்கவர் பிரதமர் நரேந்திர மோடி என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார். இன்றைக்கு மத்திய அரசு நாம் கேட்கின்ற நிதியை அளிக்கிறார்கள். நாம் கேட்கின்ற திட்டங்களுக்கு அனுமதி அளிக்கிறார்கள். அதனால், நாம் கொடுக்கிற வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுகிறது.

இன்றைக்கு உள்கட்டமைப்பை பொறுத்தவரைக்கும் தமிழ்நாடு இந்தியாவிலேயே சிறந்து விளங்குகிறது. மேலும், சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக ஒரு லட்சத்து 5 ஆயிரம் கோடி ரூபாயை சாலை மேம்பாட்டுக்காக மத்திய அரசு ஒதுக்கி இருக்கிறது. இதனால், புதிய புதிய தொழில்கள் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.

2019 எனது தலைமையில் தொழில் முதலீட்டாளர் மாநாட்டை சென்னையில் நடத்தினோம். 3 லட்சத்து 500 கோடி ரூபாய் முதலீடு செய்ய தொழிலதிபர்கள் முன்வந்தார்கள். 304 புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த பணிகளும் இப்போது தொடங்கப்பட்டுவிட்டது.

இதற்குக் காரணம் உள்கட்டமைப்பு சிறந்து விளங்குகின்ற மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. அதனால், புதிய புதிய தொழில்கள் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. அதோடு தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது.

2006 முதல் 2011 வரை திமுகவின் ஆட்சியில் கடுமையான மின்வெட்டு இருந்தது. கடுமையான மின்வெட்டு காரணமாக தொழிற்சாலைகள் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.

அம்மா 2011ல் ஆட்சிப் பொறுப்பேற்கும்போது தெரிவித்தார், ‘நான் முதலமைச்சராகி மூன்று ஆண்டு காலத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவேன்’ என்று சொன்னார்கள். அதேபோல, மூன்று ஆண்டு காலத்தில் தடையில்லா மின்சாரத்தை வழங்கி தொழில் வளம் பெருக அடித்தளமிட்டார்கள்.

அதே வழியில் வந்த அம்மாவின் அரசால், இன்றைக்கு மின் மிகை மாநிலமாக தமிழகம் விளங்கி கொண்டிருக்கிறது. தொழில் வளமிக்க மாநிலமாக தமிழ்நாடு சிறந்து விளங்கிக்கொண்டிருக்கிறது. படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.

மாநிலத்தில் தொழில் வளம் பெருகும்போது பொருளாதார மேம்பாடு அடைகிறது. ஆக ஒரு நாட்டினுடைய வளர்ச்சி தொழிற்சாலையை மையமாக வைத்து இருக்கிறது. அதேபோல சட்டம் ஒழுங்கைப் பேணி காப்பதில் தமிழ்நாடு முதல் மாநிலமாக அமைதிப் பூங்காவாக இருக்கிறது. சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது. அதே நேரத்தில், தடையில்லா மின்சாரத்தை கொடுக்கின்றோம். அதேபோல தொழிற்சாலைகளை தொடங்குவதற்கு ஏராளமான சலுகைகளை தமிழ்நாடுஅரசு வழங்குகின்றது. இதன் மூலமாக புதிய புதிய தொழில்கள் தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன. இதனால், வேலைவாய்ப்பு பெருகுகிறத. தமிழகத்தை ஒரு வளமிக்க மாநிலமாக உருவாக்குவதற்கு அம்மாவினுடைய அரசு தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டிருக்கிறது என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதே திமுக ஆட்சியில் எந்த திட்டமும் தமிழகத்திற்கு கொண்டுவரப்படவில்லை. அது ஒரு குடும்ப கட்சியாக இருந்தது. வாரிசு அரசியல் செய்கின்ற கட்சி திமுக; அதை கட்சி என்று சொல்வதைவிட கார்ப்பரேட் கம்பெனி என்று சொல்லலாம். அந்த கம்பெனியிலே யார் வேண்டுமானாலும் பங்குதாரர்களாக சேரலாம். இங்கே இருந்த பல பேர் அந்த பக்கங்களில் சேர்ந்து அங்கே தேர்தலில் நிற்கின்றார்கள். அதை, நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். அது கட்சியல்ல குடும்ப கட்சி, கார்ப்பரேட் கம்பெனி. அது மக்களுக்கு சேவை செய்வது இல்லை.

அதிமுகவும் பாஜகவும் கூட்டணிக் கட்சிகளாக வலுப்பெற்று உள்ளன. இந்த கட்சிகள் மக்களுக்கு சேவை செய்கின்ற கட்சிகள். மக்களுக்கு உழைக்கின்ற கட்சிகள். இதன் மூலமாக நாடு வளரும் தமிழகமும் ஏற்றம் பெறும்.

ஆகவே வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்திலும் பாஜக வேட்பாளர்களுக்கு தாமரை சின்னத்திலும் பாமக வேட்பாளர்களுக்கு மாம்பழம் சின்னத்திலும் தமாகா மற்றும் தோழமை கட்சி வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்திலும் வாக்களியுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறினார்.

மதுரை தேர்தல் பிரசார மாநாட்டில் இறுதியாக பிரதமர் மோடி பேசியதாவது “தேசிய ஜனநாயக கூட்டணின் உடைய தலைவர்களே, பல்வேறு கட்சிகளைச் சார்ந்த தொண்டர்களே, மதுரையைச் சேர்ந்த சகோதர சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் வணக்கம். எல்லாம் இருக்கீங்களா? மதுரை வந்ததில் எனக்கு மிக்க மகிழ்சி. இந்த மண் மீனாட்சி அம்மனுடைய ஆலயம் அருள்புரிகின்ற மண் இந்த மண். நான் மீனாட்சி அம்மனையும் சுந்தரேஸ்வரரையும் தலை வணங்கி வழிபடுகிறேன். நேற்று எனக்கு மீனாட்சி கோயிலுக்கு செல்கிற அரிய ஒரு வாய்ப்பு கிடைத்தது. மிச்சமிருக்கிற என் வாழ்நாள் முழுவதும் அந்த ஆன்மீக நினைவுகளையே நான் அசைபோட்டுக்கொண்டிருப்பேன். அது அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு. இந்த மதுரை மண், புண்ணிய பூமியகாவும் வீர பூமியாகவும் விளங்குகிற இந்த மதுரை மண் அழகர் பெருமான் ஆலயம் இருக்கிற ஒரு மண். இங்கே கூடல் அழகர் கொலுவீற்றிருக்கிற மண் இந்த மண். திருப்பரங்குன்றத்திலே கொலுவீற்றிருக்கிற மண் இந்த மதுரை மண். மதுரை மண்தான் தமிழ் பண்பாட்டினுடைய நாகரிகத்தினுடைய தொட்டிலாக விளங்கிக்கொண்டிருக்கிறது. உலகத்தின் மிகப் பழமையான தொன்மையான தமிழ் மொழிக்கும் மதுரைக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருந்திருக்கிறது. மதுரை என்று சொன்ன மாத்திரத்தில் நம் நினைவுக்கு வருவது சங்கம் வளர்த்த மதுரை. தமிழ்ச் சங்கம் இங்கே இருந்தது என்பது நினைவுக்கு வருகிறது. தமிழ் இலக்கியங்கள் என்றாலே முழுவதுமாக ஞானம் நிறைந்த ஆழமானவை தமிழ் இலக்கியங்கள். அதனால் தான், தமிழ் இலக்கியத்தையும் பண்பாட்டையும் வளர்த்தெடுக்க வரும் அத்தனை பேரையும் நான் பாராட்டி வணங்குகிறேன். இந்த மதுரை மண் மகாத்மா காந்தியிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய மண்.

இந்த மண்ணில் இருந்து சொல்கிறேன். நான் எனது மரியாதையையும் வணக்கங்களையு செலுத்துகிறேன். மிகச் சிறந்த ஆளுமையான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா அவர்களுக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன். அச்சமன்ற மருது சகோதரர்கள் மருது பாண்டியர்களுக்கு எனது வணக்கங்களை செலுத்துகிறேன். துணிச்சல் நிறைந்த வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன். மரியாதைக்குரிய இமானுவேல் சேகரனார் அவர்களுக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன். ஒரு தீர்க்கதரிசியாக இருந்த வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன். அரசியலில் விற்பன்னராக, அரசியலில் தீர்க்க தரிசியாக இருந்த காமராஜருக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன். இந்த மண்ணைச் சேர்ந்த மிகச் சிறந்த அறிவுஜீவியான என்.எம்.ஆர்.சுப்புராமனுக்கு எனது மரியாதை செலுத்துகிறேன்.

நண்பர்களே இந்த மண்ணில் இருக்கக் கூடியவர்கள் வலிமையான மனமும் மிகப் பரந்த இதயமும் கொண்ட மக்கள். பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக எனது சொந்த மாநிலமான குஜராத்தில் இருந்து இங்கே வந்திருக்கிற சௌரஷ்டிர சமுதாய மக்கள் இங்கே இருக்கிறார்கள். அதே போல, தெலுங்கு பேசுகிற சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் பல ஆண்டுகளாக இங்கே இருக்கிறார்கள். இந்த மதுரையைப் பற்றி நினைக்கிறபோது ஒரே நாடு பெருமைமிகு நாடு என்பதன் வெளிப்பாடாகத்தான் இந்த ஒட்டுமொத்த மதுரையையும் நான் பார்க்கிறேன்.

நண்பர்களே தென் தமிழகம் என்றால், எம்.ஜி.ஆர் உடன் மிக நெருங்கி தொடர்புடையது தென் தமிழகம். மதுரைவீரன் என்று ஒரு திரைப்படம். யாராவது அந்த திரைப்படத்தை மறக்க முடியுமா? அதே போல, எம்.ஜி.ஆருக்கு திரைப்படங்களில் பாடல்களுக்கு குரல் கொடுத்தவர்களில் இந்த மதுரையைச் சார்ந்த டி.எம்.சௌந்தரராஜன் குரலை யாராவது மறுக்க முடியுமா? 1980ல் மத்தியிலே ஆண்ட காங்கிரஸ் அரசாங்கம், ஜனநாயகப் பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் அரசாங்கத்தை கலைத்தார்கள். திரும்பவும் தேர்தல் நடைபெற்றபோது, மதுரையின் மேற்கு தொகுதியில் இருந்து எம்.ஜி.ஆர் மறுபடியும் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது மட்டுமல்லாமல் மதுரை மக்கள் எம்.ஜி.ஆருக்கு பின்னால், ஒரு வலிமையான கற்பாறையாக நின்றார்கள். 1977, 80, 84-களில் எம்.ஜி.ஆர் தென் தமிழகத்தில் இருந்துதான் தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்றார். அவருடைய முழுமையான சமுதாயத்துக்கும் வளர்ந்த ஒரு சமுதாயத்திற்குமான ஒரு பார்வை இருக்கிறதே அது எப்போதும் நமக்கும் ஊக்கமும் உற்சாகமும் கொடுத்துக்கொண்டிருக்கின்ற ஒரு பார்வை.

நண்பர்களே எல்லோருக்குமான வளர்ச்சி, எல்லோர்களாலும் வளர்ச்சி என்கிற தேசிய ஜனநாயக் கூட்டணியினுடைய இந்த வளர்ச்சி இருக்கிறதே, அது 130 கோடி இந்தியர்களின் வாழ்க்கையில் ஒரு நேர்மறையான மாற்றத்தை உருவாக்கியிருக்கிறது. தமிழ்நாட்டில், குறிப்பாக தென் தமிழ்நாட்டில் நாங்கள் உள்கட்டுமானம், நீர்பாசனம், முதலீடு இது போன்ற விஷயங்களில் அதிக கவனமும் முக்கியத்துவமும் கொடுத்து வருகிறோம். சென்ற ஆண்டு நான் டெல்லி செங்கோட்டையிலே பேசும்போது, அரசாங்கம் 100 லட்சம் கோடி ரூபாயை அடுத்த தலைமுறை உள்கட்டுமானத்துக்காக செலவிடும் என்று கூறினேன். அது மாத்திரமல்ல, இப்போதைய தலைமுறை இந்தியர்கள் மாத்திரமல்ல, எதிர்காலத் தலைமுறையினரும் இதன் மூலம் அதிக பலன்பெறுவார்கள் என்று கூறினோம். அதே போல, இந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கையில், நிறைய பொருளாதார வழித்தடங்கள் அளிக்கப்பட்டிருக்கிறது. அது போன்ற ஒன்றுதன் மதுரை – கொல்லம் வழித்தடம். ரயில்வே கட்டுமானங்களுக்கு இதுவரை வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 2009ம் ஆண்டை ஒப்பிடும்போது 238 சதவிகிதம் அதிகமான அளவு ரயில்வே கட்டுமான திட்டங்கள் தமிழகத்திற்கு மட்டும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மிகப் பெரிய பெரிய திட்டங்கள் எல்லாம் இந்த 7 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. வரும் காலங்களில் நாம் இதைவிட அதிகமான மெட்ரோ, இதைவிட அதிகமான சாலைகள், இதைவிட அதிகமான ரயில்கள், விமானப் போக்குவரத்துகள் நாம் தமிழகத்திற்கு கொண்டுவர இருக்கிறோம்.

அதே போல, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நாடு முழுவதும் மின்னணு கட்டுமானங்களை உருவாக்குவதில் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. மிக அதிவேக பிராட்பேண்ட் சர்வீஸ் இந்தியா முழுவதும் எல்லா கிராமங்களிலும் அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு அமைச்சரவை பி.எம். வாணி என்கிற திட்டத்தை ஒப்புதல் கொடுத்து ஏற்றுக்கொண்டிருக்கிறது. அதன் மூலம், வைஃபை சேவை நாடு முழுவதும் கொண்டுவரப்படும் ஒரு சேவையாக இருக்கும். இவையெல்லாம் நாம் செய்வதன் மூலம் வர்த்தகம் செய்கின்ற வசதியும் வாழ்க்கை வசதியும் இன்னும் சுலபமாகும் என்பதுதான் இதில் இருக்கக்கூடிய குறிக்கோள். இது போன்ற உள்கட்டுமானங்களை வளர்ப்பதால், மிக அதிகமான சுற்றுலாப் பயணிகள் பல கம்பீரமான இடங்களுக்கு அதிகமாக வருவார்கள்.

நண்பர்களே இந்த மண் இறைவன் சுந்தரேஸ்வரரின் திருவிளையாடல்களால் நிரம்பபெற்ற மண். நமக்கு தெரிந்த அத்தனை திருவிளையாடல்களிலும் ஒரு முக்கியமான விஷயத்தைப் பார்க்கிறோம். அது தண்ணீருடன் இந்த பண்பாடு எப்படி சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதைப் பார்க்கலாம். தமிழ் பண்பாடும் இந்த மதுரை மண்ணும் நீருடன் இணைந்திருக்கிறதை நாம் பார்க்கிறோம். அதைப் போல, இந்தியா முழுக்க இந்த தண்ணீரை சேமிப்பதன் அவசியத்தை ஒட்டுமொத்த தேசமும் உணரத் தொடங்கியிருகிறது. அதற்காகத்தான் இந்த அரசாங்கம் ஜல்ஜீவன் என்ற திட்டத்தின் பெயரிலே, தண்ணீருக்காக ஒரு திட்டத்தை அறிவித்தோம். அதை அறிவித்தன் நோக்கம் 2024ம் ஆண்டுக்குள் இந்தியாவில் ஒவ்வொரு வீட்டிலும் குழாய்மூலம் குடிநீரை வழங்குவதுதான் இலக்காக வைத்திருக்கிறோம். அதனால், அந்த திட்டத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டில் மட்டும், 16 லட்சம் குடிநீர் குழாய் இணைப்புகள் இதுவரை கொடுக்கப்பட்டிருக்கிறது.

மத்திய அரசாங்கமும் மாநில அரசாங்கமும் இணைந்து நாம் இந்த மாநிலத்திலே நிறைய குடிநீர் திட்டங்களை தொடங்கியிருக்கிறோம். இந்த குடிநீர் திட்டங்கள் 24 மணிநேரமும் தடையில்லாத குடிநீர் வழங்கும் திட்டங்களாக இருக்கும். நான் ஆழமாக நம்புகிறேன். சுந்தரேஸ்வரர் அருள்பாலிக்கிற இந்த மண்ணிலே, எதிர்காலத்தில் வைகையில் எப்பொதும் இல்லாத அளவுக்கு தண்ணீர் ஓடும் என்று நான் நம்புகிறேன். சொட்டுநீர் பாசனம் கொட்டும் பயிர்கள் என்கிற அந்த திட்டத்தின் அடிப்படையில் நாம் விவசாயிகளுக்கு இன்னும் அதிகமான தண்ணீரைக் கொடுத்து, தண்ணீரை சேமித்து விவசாயிகளின் உற்பத்தியை பலமடங்கு உயர்த்துவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

நண்பர்களே தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நீங்கள் வாக்களிக்கிறீர்கள் ள் என்றால் இந்தப் பகுதிக்கு நாங்கள் அதிகமான தொழில் முதலீடுகளை கொண்டு வருகிறோம் என்று அர்த்தம். அதற்கு சரியான சூழலையும் இங்கே நாம் மிக அதிகமான தொழிற்சாலையையும் நிறுவ இருக்கிறோம் என்று அர்த்தம்.

பின்னர், விவசாயம் சார்ந்த பயிர்கல் எவையெல்லாம் என்று அறிந்து விவசாயிகளுக்கு மதிப்பு கூட்டு செய்து அவர்களை லாபம் அடையச் செய்யவும் அந்த பயிர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். குறிப்பாக உணவு பதப்படுத்தும் தொழில்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

தமிழ்நாட்டின் இளைஞர்கள் அதிக வேலை கொடுப்பவர்களாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் நல்ல திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். நாம் வர்த்தகத்தை மேலும் சுலம்பம் ஆக்குவதற்கு பல சீர்திருத்தங்களை மேற்கொண்டிருக்கிறோம். புதிய புதிய தொழில்களைத் தொடங்க வருபவர்களுக்கு எல்லாம் நாம் பெரிய அளவில் உதவி கொண்டிருக்கிறோம். ஒழுங்குமுறை வர்த்தகம் எல்லாம் தாராளமயம் ஆக்கப்பட்டிருக்கிறது. வரி என்ற பெயரில் வரி கொடுமை இருக்கக்கூடாது என்று நினைத்து வரிக் இக்கொடுமையை குறைத்துக் கொண்டிருக்கிறோம்.

இங்கே நான் ஜவுளிப் பூங்காக்களை பற்றி ஜவுளி துறையைப் பற்றி குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். நமது அரசாங்கம் ஜவுளித்துறைக்கு புதிய அதிக கடன்களையும் புதிய இயந்திரங்களையும் உருவாக்குவதற்கு ஊக்கம் அளிப்பதற்கு புதிய புதிய திட்டங்கள் அளித்திருக்கிறது. இங்கே ஜவுளிப் பூங்காக்கள் திட்டம் மிகப்பெரிய முதலீட்டில் வர இருக்கிறது. மித்ரா என்ற திட்டத்தின் கீழ் அடுத்து வரக்கூடிய மூன்று ஆண்டுகளில் 7 ஜவுளி பூங்காக்கள் தமிழகத்தில் வர இருக்கிறது என்பதை நான் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.

தமிழகத்தின் சகோதர சகோதரிகளே திமுகவுக்கும் காங்கிரசுக்கும் உண்மையிலேயே அவர்களுக்கு என்று சரியான திட்டங்களும் எதுவும் பேசுவதற்கு இல்லை. ஆனால், அவர்கள் பொய் சொல்வதில் இருந்து தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். மக்கள் முட்டாள்கள் இல்லை என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

காங்கிரசும் திமுகவும் தொடர்ந்து தங்களை இந்த தமிழ் பண்பாட்டின் பாதுகாவலர்களாக சித்தரித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மை என்ன தெரியுமா? நான் உங்களை 2011ம் ஆண்டுக்கு அழைத்துச் செல்கிறேன். அப்போது மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி காங்கிரஸ் அரசாங்கம் தான் டெல்லியில் ஆட்சி செய்து கொண்டிருந்தது. திமுகவுக்கு பெரிய பெரிய இலாக்காக்கள் எல்லாம் ஒதுக்கப்பட்டு மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தது. அதே ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிதான் தமிழகத்தில் இந்த ஜல்லிக்கட்டை தடை செய்தார்கள் என்பதை உங்கள் நினைவுக்கு கொண்டு வருகிறேன்.

ஒரு காங்கிரஸ் தலைவர் சொல்கிறார் அவர் மிகப்பெரிய சுற்றுச்சூழல் துறை பொறுப்பில் அமைச்சர், இந்த ஜல்லிக்கட்டு என்பது ஒரு காட்டுமிராண்டித்தனமான நடைமுறை என்று சொன்னார். ஜல்லிக்கட்டு காட்டுமிராண்டித்தனமான நடைமுறையா? அப்படி, தமிழ்நாட்டினுடைய ஜல்லிக்கட்டை, பல நூற்றாண்டுகளாக இருக்கக்கூடிய ஜல்லிக்கட்டை காட்டுமிராண்டித்தனமாக இருக்கிறது என்று சொன்னால் என்ன அர்த்தம். 2016இல் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியினுடைய தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜல்லிக்கட்டை முழுமையாக தடை செய்வோம் என்று சொல்லியிருக்கிறது. இதற்கு அவர்கள் தங்கள் நிலை குறித்து வெட்கப்பட வேண்டும்.

2016 – 17ல் தமிழகத்தின் சாதாரண மக்கள் இந்த ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்று சொன்னபோது, அவர்களின் மனவேதனை அந்த ரணம் எனக்கு புரிந்தது. அதனால்தான், அப்போது ஆட்சி செய்து கொண்டிருந்த அதிமுக ஆட்சி ஜல்லிக்கட்டை கொண்டுவருவதற்காக ஒரு சட்டத்தை கொண்டு வரும்போது நான் அதை உடனடியாக சரிசெய்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடக்க வேண்டும் என்பதற்காக முழுமையான முயற்சியை மத்திய அரசாங்கம் செய்தது என்பதை கூறிக் கொள்கிறேன்.

நண்பர்களே காங்கிரசும் திமுகவும் ஒரு விஷயத்தில் அவர்கள் மிகவும் பயிற்சி பெற்றிருக்கிறார்கள் நிபுணத்துவம் பெற்று இருக்கிறார்கள். அது வேலையை செய்யாமல் இருப்பது அடுத்தவர்கள் வேலை செய்தால் இட்டுக்கட்டி பொய் சொல்லும் விஷயத்தில் அவர்கள் மிகவும் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். அதற்கான ஒரு நல்ல உதாரணத்தை நான் இங்கு சொல்ல விரும்புகிறேன். பல ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி செய்த காங்கிரசும் திமுகவும் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வர வேண்டும் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வர வேண்டுமென்று நினைத்தது நமது அரசாங்கம் தான் என்பதை சொல்லிக் கொள்கிறேன். இந்த எய்ம்ஸ் மருத்துவமனை உலகத்தரமானது.” என்று கூறினார்.

இதையடுத்து, நாகர்கோயிலுக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கே பாஜக – அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பேசினார். நாகர்கோவிலில் பிரதமர் மோடி பேசியதாவது: “வணக்கம். தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், சகோதர சகோதரிகளே. நாகர்கோவிலுக்கு நான் வந்திருப்பதால் இந்த மண்ணின் நாஞ்சில் பொருணன், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, செண்பகராமன் பிள்ளை, அய்யா வைகுண்டர், தாணுலிங்க நாடார், கே.காமராஜர், மார்ஷல் நேசமணி ஆகியோரது மண்ணில் நான் நிற்கிறேன்.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், அருள்மிகு நாகராஜா கோவில், திருவள்ளுவர் சிலை, சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் ஆகியவை உலக மக்களை கவர்ந்துள்ளது.

இன்று புனித வெள்ளி ஜூசசின் தியாகத்தையும், அவர் எளியமக்களுக்கு ஆற்றிய பணியையும் நினைவுகூருகிறேன்.

உங்கள் ஆசிகளை நாடி நான் வரும்போது மக்களுக்கு நம்பிக்கை ஊட்டும் அரசாக வலுவான சாதனைகளை எடுத்துக்கொண்டு வந்துள்ளோம். தீர்க்கப்படாத பல சிக்கல் தீர்க்கப்பட்டுள்ளன.

ராமேஸ்வரம் தணுஷ்கோடி ரயில் நிலையம் 1964 ஆண்டு சேதமடைந்தது. ஐம்பது ஆண்டுகளாக அதை யாரும் கண்டுகொள்ளவில்லை. அதை சரி செய்ய நமது அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதுபோல சேதமான பாம்பன் பாலத்தையும் சரிசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம்.

மும்பை கன்னியாகுமரி இடையே புதிய பொருளாதார வழித்தடத்தை தொடங்கியிருக்கிறோம். தமிழகத்தில் சாலைகளை மேம்படுத்த ஒரு லட்சம் கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்துள்ளோம்.

நமது கவனம் நாடின் வளர்ச்சி மீது இருக்கிறது. எதிர்கட்சிகள் கவனம் அவர்களின் வாரிசுகளின் வளர்ச்சி பற்றி உள்ளது. அவர்களது கவனம் எல்லாம் அவர்களின் பிள்ளைகள், பேரக்குழந்தைகளின் வளர்ச்சிபற்றி உள்ளது. உங்கள் குழந்தைகளின் வளர்சிபற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை. டெல்லியின் மத்திய பகுதியில் ஒரு வம்சத்தின் நினைவுச் சின்னமாக அமைக்க பல ஏக்கர் இடத்தை எடுத்தார். ஆனால் நாங்கள் அப்துல்கலாம் நினைவிடத்தை ராமேஸ்வரத்தில் அமைத்தோம்.

கருணாநிதியின் தோளோடு தோள் சேர்ந்து பணியாற்றியவர்கள், மகுடம் சூட்டிகொண்டு வந்த இளவரசரை பார்த்து மன புழுக்கத்தில் உள்ளனர். தேசத்தின் மனநிலை தெளிவாக உள்ளது. தகுதி பார்க்காமல் உறவு என்ற நிலையில் பதவி கொடுப்பதால் மக்கள் எதிர்கட்சியினரை ஜனநாயக விரோதியாக பார்க்கிறார்கள். நம் நாட்டின் 356 சட்டப் பிரிவை காங்கிரஸ் பலமுறை பயன்படுத்தியுள்ளது. தி.மு.க, அ.தி.மு.க ஆட்சிகள் பலமுறை காங்கிரஸால் கலைக்கப்பட்டுள்ளது.

அனைவரும் இணைந்து, அனைவரின் நம்பிக்கையையும் பெற்று, அனைவரும் உயருவோம் என்பதுதான் எங்கள் சித்தாந்தம். எல்லா மக்களுக்கு உதவும் எண்ணம் அரசுக்கு உள்ளது. என்ன ஜாதி, இனம் என பார்க்காமல் அரசு உதவி செய்கிறது. ஈரானில் பாதுகாப்பு இல்லாமல் இருந்த நர்சுகளை மீட்டோம். பாதிரியார் அலெக்ஸிஸ் பிரேம் குமார் ஆப்கானிஸ்தானின் 18 மாதங்களாக பயங்கரவாதிகளால் பிடித்து வைக்கப்பட்டிருந்தார். அவர் உயிருடன் வருவார் என அவரது குடும்பத்தினருக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் அவர் பாதுகாப்பாக வீடு வந்தார். அவரது சகோதரியை தொலை பேசியில் தொடர்புகொண்டு அண்ணன் உயிரோடு இருப்பதாக சொன்னேன். நான் பேசியதையும், அண்ணன் உயிரோடு இருப்பதையும் நம்பும் மனநிலையில் அவர் இல்லை. அந்த அளவுக்கு பாதித்திருந்தார்.

மோதலில் நம்பிக்கை கொண்டவர்கள் மோதலை தொடர்ந்துகொண்டே இருக்கட்டும். அன்பில் நம்பிக்கைகொண்ட நாம் அன்பு செலுத்துவோம்.

கடந்த ஆண்டு கொரோனா தொற்று நோய் வந்தது. பல இந்தியர்கள் வெளிநாடுகளில் சிக்கினர். வந்தே பாரத் திட்டம் மூலம் அவர்களை பாதுகாப்பாக அழைத்து வந்தோம். தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 லட்சம் மக்களை அழைத்து வந்தோம். அவர்கள் என்ன ஜாதி, என்ன மதம் என பார்க்காமல் இந்தியர்களாகவே பார்த்தோம்.

இங்கு மூன்று முக்கிய அம்சங்கள் பற்றி பேச நினைக்கிறேன். செழிப்பான பண்ணைகள், வளமான தொழிற்சாலைகள், கடற்கரை மேம்பாடு ஆகியவைதான் நம் திட்டம்.

நம் ஆட்சியில் கொப்பரை தேங்காய்க்கான விலை கடந்த ஆட்சியைவிட அதிகம் வழங்குகிறோம். விவசாயிகளின் வருமானத்தை கூடியவிரைவில் இரட்டிப்பாக்க தீவிரமாக வேலை செய்து வருகிறோம். வணிக சமூகங்ககுக்கு, குறிப்பாக சிறு,குறு நிறுவனங்களுக்கு சிறப்பான உதவிகள் செய்து வருகிறோம். பாரம்பர்ய தொழில்களை ஊக்கப்படுத்துகிறோம். உள்ளூரில் தயாரிக்கப்படும் கைவினை பொருட்கள், பனை ஓலையில் செய்யப்படும் பொருட்கள், கோயில் ஆபரணங்கள் ஆகியவை நாஞ்சில் மண்ணின் சிறப்பு. இவை விரைவில் உலக அளவில் பிரபலமடைய போகிறது.

முந்தைய அரசு கடலோர பகுதியை பற்றி கவலைப்படவில்லை. கடற்கரையை அபிவிருத்தி செய்ய மூன்று அடிப்படை திட்டங்களை நாங்கள் வைத்துள்ளோம். துறைமுகம் சார்ந்த வளர்ச்சி, நவீன உள் கட்டமைப்பு வளர்ச்சி, புதிய துறைமுகங்களை அமைத்தல். நம் துறைமுகங்கள் வளர்ச்சியடையப்போகின்றன. நீல பொருளாதாரம் என்ற கடல் சார்ந்த பொருளாதாரத்துக்கு பெரும் முக்கியத்துவம் தருவதால் மீனவர்களின் வருவாய் அதிகரிக்கும். புதிய மீன்பிடி துறைதுறைமுகங்கள், மீன்களை இறக்கும் மையங்கள் அமைக்கப்படும். சென்னையில் புதிய துறைமுகம் அமைக்கப்படுகிறது. அதில் சிறந்த படகுகள், கடலில் போகும் உபகரணங்கள், கடல்பாசி வளர்க்கும் திட்டம் ஆகியவற்றை ஊகுவிக்கிறோம். மீனவர்களுக்காக 20 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மீனவர்களின் பாதுகாப்பே நம் அரசின் முன்னுரிமை. கடந்த சில நாட்களுக்கு முன்பு இலங்கையில் இருந்து 40 மீனவர்களையும் நான்கு படகுகளையும் மீட்டு வந்தோம். எந்த ஒரு மீனவரும், படகும் இப்போது இலங்கை அரசின் காவலில் இல்லை.

மூன்றாவதாக மீன் விற்க நிறைய தடைகள் உள்ளன. சிறந்த சாலை, உள்நாட்டு நீர்வழி போக்குவரத்து ஆகியவற்றின் தடைகளை நீக்க சாத்தியபடும் இடங்களில் சாலை நீர்வழிகளும் அமைக்கப்படும். மீனவர்கள் வாழ்க்கை எளிதாகவும், வளமாகவும் இருக்கும். மீனவர்களுக்கு மீன்பிடித்திட்டங்களும், உணவு பதப்படுத்தும் திட்டங்களும் அமைக்கப்படும். மீனவர்களுக்காக தனி அமைச்சகம் மூலம் மீனவர்களின் வளர்ச்சிக்காக இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

கூட்டத்துக்கு திரளாக வந்திருக்கும் உங்களுக்கு நன்றி. வரும் 6-ம் தேதி எங்களை ஆசீர்வதியுங்கள். என் தோழர் பொன்.ராதாகிருஷ்ணன் நாடாலூமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார். அவரை அன்றைய தினம் ஆசீர்வதியுங்கள். அவருடன் நாடாளுமன்றத்தில் பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். அவர் நாடாளுமன்றத்தில் உங்களின் குரலாக ஒலிக்கக்கூடியவர். எனவே அவரை வெற்றிப்பெற செய்யுங்கள்” என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Pm modi says our concentration on national development opposites on their progeny in election campaign at madurai and nagarkovil

Next Story
உதயசூரியனுக்கு வாக்கு கேட்ட சீமான்; வைரல் வீடியோSeeman asks vote to dmk udhayasuriyan, seeman, dmk, naam tamilar katchi, உதயசூரியனுக்கு வாக்கு கேட்ட சீமான், சீமான், வைரல் வீடியோ, நாம் தமிழர் கட்சி, Seeman asks vote to dmk udhayasuriyan video, tamil nadu assembly elections 2021
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com