மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, தூத்துக்குடியில் சலூன் கடையுடன் இணைத்து நூலகம் நடத்தி வரும் பொன்.மாரியப்பன் என்பவருடன் பேசினார். பொன்.மாரியப்பனின் இந்த முயற்சிக்கு பிரதமர் மோடி பொன்.மாரியப்பனுக்கு பாராட்டு தெரிவித்தார்.
பிரதமர் மோடி, ஒவ்வொரு மாதமும் மான் கி பாத் (மனதின் குரல்) என்ற வானொலி நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இந்த உரை நிகழ்ச்சிகளின் போது சாதனையாளர்களையும் சமூகத்திற்கு சிறந்த பங்களிப்பு அளித்து வருபவர்களையும் பாராட்டி வருகிறார். பிரதமர் மோடி, தூத்துக்குடியில் சலூன் கடையுடன் நூலம் நடத்திவரும் பொன்.மாரியப்பன் என்பவருடன் உரையாடி பாராட்டுதல் தெரிவித்தார்.
பொன்.மாரியப்பன், தூத்துக்குடியில் தனது சலூன் கடையின் ஒரு பகுதியில் நிறைய நூல்களை வைத்து நூலகமும் நடத்தி வருகிறார். அவருடைய சலூன் கடைக்கு வருபவர்கள் முடித்திருத்தம் செய்துகொள்வதுடன் நூல்களையும் படித்து பயனடைகின்றனர். சலூன் கடையில் வைக்கப்பட்டுள்ள நூலகத்தில் தான் கற்றதை மற்றவர்களுக்கு படிக்க வாய்ப்பு ஏற்படுத்தியுள்ளார். அதோடு, தனது கடையில் காத்திருக்கும் வாடிக்கையாளர் ஒரு புத்தகத்தை படிக்கிறார் என்றால், அவருக்கு பொன்.மாரியப்பன் சலூன் கட்டணத்தில் தள்ளுபடி சலுகையும் அளிக்கிறார். இது ஒரு உத்வேகம், அளிக்கும் முயற்சி என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி மாரியப்பனிடம் மான் கி பாத் நிகழ்ச்சியின் மூலம் உரையாடினார்.
மான் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பொன்.மாரியப்பனிடம் தமிழில் பேசியதாவது:
பிரதமர் மோடி: நாம் இப்போது தூத்துக்குடியில் இருக்கும் பொன்.மாரியப்பனிடம் பேசப்போகிறோம். வணக்கம் மாரியப்பன், நல்லா இருக்கீங்களா?
பொன்.மாரியப்பன்: மாண்புமிகு பிரதமர் அய்யா வணக்கம். நலமாக இருக்கிறேன்.
பிரதமர் மோடி: வணக்கம்.. வணக்கம்.. இந்த லைப்ரரி ஐடியா எப்படி வந்தது.
பொன்.மாரியப்பன்: நான் 8 ம் வகுப்பு வரைதான் படித்திருக்கிறேன். மேற்கொண்டு எங்கள் குடும்ப சூழல் காரணமாக படிக்க முடியவில்லை. எனக்கு படித்தவர்களைப் பார்க்கும்போது ஒரு வருத்தம் இருக்கும். நாமும் ஒரு நூலகத்தை உருவாக்கி வாழ்க்கையை படிக்க வேண்டும் என்பதற்காக நான் இந்த முயற்சியை எடுத்து செய்கிறேன். இதனால், இந்த முயற்சி எடுத்து இவ்வாறு செய்கிறேன்.
பிரதமர் மோடி: உங்களுக்கு எந்த புத்தகம் பிடிக்கும்.
பொன்.மாரியப்பன்: எனக்கு திருக்குறள் பிடிக்கும்.
பிரதமர் மோடி: உங்களுடன் பேசியதில் மகிழ்ச்சி. உங்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துகள்.
பொன்.மாரியப்பன்: எனக்கும் மாண்புமிகு பிரதமர் ஐயாவிடம் பேசியது ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது.
பிரதமர் மோடி: நல்வாழ்த்துகள்…
பொன்.மாரியப்பன்: நன்றிங்க ஐயா…
பிரதமர் மோடி: நாம் பொன்.மாரியப்பனுடன் சிறிது நேரம் பேசினோம். பாருங்கள் அவர் தனது சலூன் கடைக்கு வரும் ஆண்களின் முடிகளை திருத்தம் செய்வதோடு மட்டுமல்லாமல் அவர்களுடைய ஒளிமயமான வாழ்க்கைக்கும் உதவி செய்கிறார். திருக்குறளின் புகழ் பற்றி கேட்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நீங்களும் திருக்குறளின் புகழ் பற்றி கேட்டிருப்பீர்கள். இன்று திருக்குறள் அனைத்து மொழிகளிலும் கிடைக்கிறது. வாய்ப்பு கிடைத்தால் நீங்கள் அனைவரும் அவசியம் படியுங்கள்
இவ்வாறு தூத்துக்குடியில் சலூன் கடையுடன் இணைந்த நூலகம் நடத்திவரும் பொன்.மாரியப்பனுடன் பிரதமர் மோடி உரையாடினார்.