”தமிழில் பேசாதது வருத்தம் அளிக்கிறது என்றும் இனி நமோ செயலி மூலம் நான் பேசுவது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகும்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரியில் நடைபெற்ற பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் மோடி பேசியதாவது: ” தமிழகத்தில் குடும்ப ஆட்சியை அகற்ற பா.ஜ.க ஆட்சியை கொண்டு வர வேண்டும். நாட்டின் தென்கோடியான கன்னியாகுமரியில் இருந்து ஒரு அலை கிளம்பியிருக்கிறது. நாட்டை பிளவுபடுத்த நினைத்தவர்களை காஷ்மீர் மக்கள் தூக்கி எறிந்துவிட்டார்கள். தி.மு.க – இந்தியா கூட்டணி வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுக்க முடியாது. ஆட்சிக்கு வந்து கொள்ளையடிப்பதையே இலக்காக கொண்டுள்ளது தி.மு.க- காங்கிரஸ் கூட்டணி. தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி முற்றிலுமாக துடைத்தெறியப்படும். பா.ஜ.க ஆட்சியில் 5 ஜி கொண்டுவந்தோம். ஆனால் இந்தியா கூட்டணி 2ஜியில் ஊழல் செய்தார்கள். அதில் தி.மு.க முக்கிய பங்கு வகித்தது. நாங்கள் உதான் திட்டத்தை கொண்டுவந்தோம்.
அவர்கள் ஹெலிகாப்டரில் ஊழல் செய்தார்கள். கேலோ இந்தியா போட்டியை வெற்றிகரமாக நடத்தினோம். காமன்வெல்த் போட்டியில் காங்கிரஸ் ஊழல் செய்தது. தி.மு.க, காங்கிரஸில் பெண்களுக்கான அங்கிகாரம் இல்லை. கன்னியாகுமரி மக்களை பா.ஜ.க நேசிக்கிறது; திமுக காங்கிரஸ் கூட்டணி கன்னியாகுமரி மக்களை வஞ்சிக்கிறது; மீனவ மக்களின் நலனுக்காக மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது; தமிழ்நாட்டில் துறைமுக கட்டமைப்புகளை மேம்படுத்த மத்திய அரசு பல திட்டங்களை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ரூ.50,000 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலை பணிகள் நிறைவடைந்துள்ளது; ரூ.70,000 கோடி மதிப்பீட்டில் நெடுஞ்சாலை பணிகள் நடந்து வருகின்றன; ரயில்வே பணிகளுக்காக ரூ.6,300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ், தி.மு.க கூட்டணி முற்றிலும் அகற்றப்படும். தி.மு.க – காங்கிரஸ் செய்த தவறுக்கு கணக்கு கூற வேண்டும். இலங்கை கடற்பகுதியில் தி.மு.க – காங்கிரஸ் செய்த தவறுக்கு மீனவர்கள் கைது செய்யப்படுகின்றனர்.
உங்கள் அன்பிற்கு நான் என்ன திருப்பி தரப்போகிறேன் என்று தெரியவில்லை. தமிழில் பேச முடியாதது, எனக்கு மிகவும் கவலையாக இருக்கிறது. இனி நமோ செயலி மூலம் தமிழியில் உங்களுடன் பேசுவேன். இதை நீங்கள் எனக்காக கேட்ட வேண்டும்” என்று பேசினார்.
பொதுகூட்டம் முடிந்த பிறகு, மோடி பேசியது ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம், தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு, எக்ஸ் தளத்தில் வீடியோவாக வெளியாகும். மோடி கலந்துகொள்ளும் கூட்டத்தில் பேசும் எல்லா உரையையும் இனி ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் தமிழில் மொழிபெயர்க்கப்படும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். மேலும் மோடியின் பேச்சை தமிழியில் கேட்பீர்களா, அதை உறுதி செய்ய அனைவரும் போனில் உள்ள டார்ச் லைட்டை ஆன் செய்து காண்பிக்க வேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“