தமிழகத்தில் தனக்கு கிடைத்திருக்கும் ஆதரவால் தி.மு.க-வின் தூக்கம் தொலைந்து விட்டதாக மோடி சேலம் பொதுக் கூட்டத்தில் பேசி உள்ளார்.
பா.ஜ.க சார்பில் சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மோடி பேசியதாவது “ என் அன்பார்ந்த தமிழ் சகோதர, சகோதரிகளே வணக்கம். சேலம் கோட்டை மாரியம்மனை வணங்குகிறேன். தமிழ்நாட்டில் பா.ஜ.க-வுக்கும், எனக்கும் கிடைக்கும் ஆதரவை நாடே பார்த்துக்கொண்டிருக்கிறது; தமிழ்நாடு வளர்ச்சியடைய 400-க்கும் மேற்பட்ட இடங்களை வெல்ல வேண்டும். பா.ம.க-வின் வருகையால் தேசிய ஜனநாயக கூட்டணியின் கரம் வலுவடைந்துள்ளது; ராமதாஸின் அனுபவமும், அன்புமணியின் திறமையும் நமக்கு பலமாக அமையும். காங்கிரஸ் - தி.மு.க கூட்டணி இந்து மதத்தை திட்டமிட்டு தாக்குகிறது.
நேரம் கிடைக்கும்போது எல்லாம் இந்து மதத்தை தாக்கி வருகின்றனர். தமிழ்நாடு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே எனது இலக்கு. பெண்கள் தான் பா.ஜ.க-வின் பாதுகாப்பு கவசமாக இருக்கிறார்கள்.சுப்பிரமணிய பாரதி வழியில் நானும் பெண் சக்திகளை வழிபடுகிறேன். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை திமுகவினர் தொடர்ந்து இழிவுபடுத்தினர். 5வது தலைமுறையும் ஆட்சிக்கு வரவேண்டும் என தி.மு.க நினைக்கிறது.
காமராஜர் கொண்டுவந்த மதிய உணவுத்திட்டம் எனக்கு உத்வேகம் அளித்தது. காங்கிரஸ், தி.மு.க கூட்டணி சக்தியை அழித்துவிடுவோம் என்று கூறுவதை அனுமதிக்க முடியுமா?. இந்தியா கூட்டணி பலமுறை இந்து தர்மத்தை அவமதித்துள்ளது. வேறு எந்த மதத்தையும் இந்தியா கூட்டணி எப்போதும் குற்றம் சொன்னதில்லை. பிற மதங்களை பற்றி இந்தியா கூட்டணி ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை . ஆனால் இந்து மதம் குறித்து பேச இந்தியா கூட்டணி ஒரு விநாடி கூட தயங்கியதில்லை. நாடாளுமன்றத்தில் செங்கோல் வைத்ததை இவர்கள் அவமதித்தார்கள். செங்கோல் இங்கிருக்கும் இந்து சமய மடங்களை குறிக்கிறது என்பதால் அதனை அவமதித்தார்கள்.
தி.மு.க-வின் பெண்கள் விரோத நடவடிக்கைக்கு எதிராக ஏப்ரல் 19ல் பெண்கள் வாக்களிக்க வேண்டும். ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் தி.மு.க, காங்கிரஸ். தி.மு.க, காங்கிரஸின் ஊழலை பற்றி பேசினால் ஒரு நாள் போதாது. தமிழகத்தின் வளர்ச்சிக்காக லட்சக்கணக்கான கோடி நிதி வழங்கப்படுகிறது. உங்களுடைய சேவகனான இந்த மோடி, பெண்களின் நலனுக்காக பல நல திட்டங்களை கொண்டு வந்துள்ளேன். தமிழ்நாட்டில் 3.65 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் கிடைக்கிறது. மத்திய அரசு வழங்கும் நிதியை திமுக அரசு வீணடிக்கிறது. தமிழகத்தில் எனக்கு கிடைத்திருக்கும் ஆதரவால் தி.மு.க-வுக்கு தூக்கம் தொலைந்துவிட்டது. தமிழகத்தில் எனக்கு கிடைத்திருக்கும் ஆதரவை பற்றித்தான் நாடு முழுவதும் பேச்சாக இருக்கிறது.
சேலத்திற்கு பலமுறை வந்துள்ளேன், இன்று பழைய நினைவுகள் எனக்கு வருகின்றன. சேலத்தை சேர்ந்த ரத்தினவேல் எனக்கு தமிழ் கற்றுக்கொடுத்தார். ரத்தினவேல் இன்று நம்மிடையே இல்லை, அவரின் நினைவு மட்டுமே உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“