கொரோனா பரவல் காரணமாக, பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகை ரத்து செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் மோடி காணொலி வழியாக புதன்கிழமை மாலை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வழியாக பங்கேற்றார்.
பிரதமர் மோடி தமிழகத்தில் விருதுநகர், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், திருவள்ளூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், அரியலூர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைக்க ஜனவரி 12ம் தேதி தமிழகம் வருகிறார் என்று அறிவிப்பு வெளியானது. மேலும், தமிழக பாஜகவினர் மதுரையில் மோடி பொங்கல் நிகழ்ச்சி கொண்டாட ஏற்பாடு செய்து வந்தனர். மருத்துவக் கல்லூரிகள் தொடக்க விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், நாடும் முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக, பிரதமர் மோடியின் தமிழக வருகை ரத்து செய்யப்படுகிறது என்று அறிவிப்பு வெளியானது. அதே நேரத்தில், பிரதமர் மோடி ஜனவரி 12ம் தேதி தமிழகத்தில் விருதுநகர், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், திருவள்ளூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், அரியலூர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளை காணொலி வழியாக தொடங்கி வைப்பார் என்று அறிவிப்பு வெளியானது.
அதன்படி, பிரதமர் மோடி, தமிழகத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளை காணொலி வழியாக புதன்கிழமை மாலை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் காணொலி வழியாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
சென்னை பெரும்பாக்கத்தில் 70 ஆயிரம் சதுர அடி பரப்பில் ரூ.24 கோடி மதிப்பில் செம்மொழி தமிழாய்வு நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது. மின்னணு நூலகம் உள்ளிட்ட 12 பிரிவுகளுடன் கூடிய பிரம்மாண்ட கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் இந்த புதிய கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகளை திறந்து வைத்து தமிழக சகோதர, சகோதரிகளுக்கு எனது வணக்கம் என்று தனது உரையை தமிழில் தொடங்கிய பிரதமர் மோடி பேசியதாவது: நாடு முழுவதும் தற்போது 590 மருத்துவ கல்லூரிகள் உள்ளன; 22 எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிகள் நிறுவப்பட்டுள்ளன.ஏறக்குறைய 8 ஆயிரம் மக்கள் மருத்துவ மையங்கள் நாட்டில் உள்ளன. நாட்டில் மருத்துவ இடங்கள் 80 சதவீதம் அதிகரித்துள்ளன. உத்தரப் பிரதேசத்தில், ஒரே நாளில் 9 மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைத்தேன். ஒரே நாளில் 11 மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்படுவது தமிழ்நாட்டில்தான் முதல்முறை. எனது சாதனையை நானே முறியடித்துக்கொண்டிருக்கிறேன். மருத்துவமனைகள் எவ்வளவு முக்கியம் என்பதை கொரோனா உணர்த்தியுள்ளது. இந்தியாவில் தரமான மருத்துவ வசதிகள் உருவாக்கப்பட வேண்டும். மருத்துவ திட்டம் அடுத்த 5 வருடத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். செம்மொழி தமிழாய்வு நிறுவனம் திருக்குறளை பல மொழிகளில் மொழி பெயர்த்துள்ளது. திறமை வாய்ந்த தமிழர்களை நான் எப்போதுமே வரவேற்கிறேன்.
பனாரஸ் பல்கலை.யில் சுப்பிரமணிய பாரதிக்காக ஒரு இருக்கை உருவாக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலத்தவரும் தமிழை கற்றுக்கொள்ள இணையம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். ஐ.நா சபையில் தமிழில் பேசியதே என் வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணம். தொன்மையான தமிழ் மொழியின் வளமை மற்றும் கலாச்சாரத்தில் கவரப்பட்டுள்ளேன்.” என்று கூறினார்.
மருத்துவ கல்லூரிகள் திறப்பு விழாவில் பேசிய, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக்கல்லூரி என்பதே திமுகவின் குறிக்கோள். கிராமப்புற ஏழை எளிய மாணவர்களுக்கு மருத்துவ கல்வி கிடைக்க வேண்டும் என்பதே எங்களது கொள்கை. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும். மருத்துவப் படிப்பில் ஏற்கெனவே இருந்த நடைமுறையே பின்பற்ற வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
முன்னதாக, புதுச்சேரியில் தேசிய இளைஞர் விழாவை பிரதமர் நரேந்திர மோடி, புதன்கிழமை காணொலி வழியாக தொடங்கிவைத்துப் பேசினார். புதுவை கருவடிக்குப்பத்தில் ரூ.23 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள காமராஜர் மணிமண்டபத்தையும், புதுவை தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.122 கோடியில் தொடங்கப்பட்டுள்ள தொழில்நுட்ப மையத்தையும் திறந்து வைத்தார்.
காணொலி வழியாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவில் உள்ள இளைஞர்கள் உத்வேகத்துடன் செயல்படுவதைப் போலவே இந்தியாவும் உத்வேகத்துடன் செயல்பட்டு வருவதாக கூறினார். விவேகானந்தர் கூறியதைப்போல நாட்டை முன்னெடுத்துச் செல்வதில் இளைஞர்கள் பங்கு உள்ளது எனவும், அவரை இளைஞர்கள் முன்மாதிரியாகக் கொண்டு செயல்பட வேண்டும் என பேசினார்.
மகாகவி பாரதியாரையும் நினைவு கூர்ந்த பிரதமர் மோடி, நாட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வதில் இளைஞர்கள் முக்கிய பங்காற்றுகிறார்கள் எனவும், நாடே இளைஞர்கள் போல் உத்வேகத்துடன் இருக்கிறது என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, சிறு, குறு நடுத்தர தொழில்துறை தொழில்நுட்ப வளாகம் புதுச்சேரியில் தொடங்கப்பட்டுள்ளது என்றும் காமராஜர் மணிமண்டபம் இளைஞர்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ள உதவும் என்றும் கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.