வள்ளலாரின் 200-வது பிறந்தநாளையொட்டி சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகையில் வள்ளலார் சிலை திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், காணொலி வாயிலாகப் பேசிய பிரதமர் மோடி, “லோக்சபா , சட்டசபைகளில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான 33 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தை அவர் உயிருடன் இருந்திருந்தால் பாராட்டியிருப்பார் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.
வடலூரில் அறச்சாலை அமைத்து பசிப்பிணி போக்கியவர் வள்ளலார். ஆன்மீகத்தில் கடவுளை ஜோதி வடிவமாகவும் அன்பு வடிவமாகவும் கண்டவர். பசிப்பிணி போக்க வள்ளலார் ஏற்றிய தீ இன்றும் வடலூரில் அணையாமல் எரிந்துகொண்டிருக்கிறது.
வள்ளலாரின் 200-வது பிறந்தநாளையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் வள்ளலார் சிலை திறக்கப்பட்டது. வள்ளலார் சிலையை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் காணொலி வழியாகப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “லோக்சபா, சட்டசபைகளில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான 33 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தை அவர் உயிருடன் இருந்தால் பாராட்டியிருப்பார் என நம்புகிறேன்.” என்று கூறினார்.
மேலும், பிரதமர் மோடி பேசியதாவது: இளைஞர்கள், தமிழிலும் சமஸ்கிருதம், ஆங்கிலம் புலமை பெற வேண்டும் என வள்ளலார் விரும்பினார்.
9 ஆண்டுகளில் இந்தியாவில் கல்வி கட்டமைப்பு மாபெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. 3 தசாப்தங்களுக்கு பிறகு இந்தியா தேசிய கல்வி கொள்கையை பெற்றிருக்கிறது. இக்கொள்கை, முழு கல்வித்துறையிலும் சிறந்த மாற்றம் அடைய வைக்கும்.
அதில், புதுமை, சிந்தனை, ஆராய்ச்சி, வளர்ச்சி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
பல்கலைகழகங்கள், பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை கடந்த 9 ஆண்டுகளில் சாதனை அளவாக அதிகரித்துள்ளது. இளைஞர்கள் வட்டார மொழிகளில் பொறியியல் மற்றும் மருத்துவம் படிக்க இயலும். இதன் மூலம் இளைஞர்களுக்கு பல வாய்ப்புகள் உருவாகி உள்ளன.
வள்ளலார் காலத்திற்கும் முன்னதாகவே சிந்தித்தவர். சமூக சீர்திருத்தத்தை எடுத்து கொண்டால், கடவுளை பற்றிய வள்ளலாரின் பார்வை பல்வேறு மதங்கள், நம்பிக்கைகள் பிரிவுகள் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டவை. இவ்வுலகத்தின் ஒவ்வொரு அணுவிலும் கடவுளின் அம்சத்தை கண்டார். இன்று தெய்வீக பிணைப்பை மனிதர்களை அங்கீகரிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
அவரது போதனைகள் அனைவருடனும், அனைவரின் வளர்ச்சிக்காகவும், அனைவரின் நம்பிக்கையுடனும் அனைவரின் முயற்சியுடனும் கூடிய சமத்துவ சமுதாயத்தை வலியுறுத்துவதாகும்.
வள்ளலாருக்கு மரியாதை செலுத்தும் போது, இதற்கான எனது உறுதிப்பாடு மேலும் வலுவடைகிறது. இன்று அனைத்து லோக்சபா , சட்டசபைகளில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான 33 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தை அவர் உயிருடன் இருந்தால் பாராட்டியிருப்பார் என நம்புகிறேன்.
வள்ளலாரின் வார்த்தைகள், வாசிக்கவும், புரிந்து கொள்ளவும் எளிமையானவை. இதனால் சிக்கலான ஆன்மிக ஞானக்கருத்துகளை எளிய வார்த்தைகளில் வெளிப்படுத்த முடிகிறது.
ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற நமது ஒட்டு மொத்த சிந்தனைக்கு வலுசேர்க்க காலமும் இடமும் கடந்த நமது கலாசார பன்முகத்தன்மைக்கு பொது இழையாக திகழ்கின்ற பெரும் ஞானிகளின் போதனைகள் பெரிதும் உதவுகின்றன.
அன்பு, இரக்கம், நீதி ஆகியவற்றை வலியுறுத்தும் அவரது போதனைகளை நாம் பரப்புவோம். அவரது இதயபூர்வமான சிந்தனைகள் தொடர்பாக நாம் கடினமாக உழைப்போம். ஒருவரும் பட்டினியுடனும் இல்லாதிருக்க வேண்டும் என்பதை உறுதி செய்வோம். ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வி வழங்குவோம்.” என்று பிரதமர் மோடி பேசினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“