நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் இந்தாண்டு ஏப்ரல்- மே மாதங்களில் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் 2 நாள் பா.ஜ.க தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
இதில் பா.ஜ.க முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன், ராஜ்நாத்சிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், தேசிய நிர்வாகிகள், மாநில, மாவட்டத் தலைவர்கள், பல்வேறு அணிப் பிரிவுகளின் தலைவர்கள், தேசிய செயற்குழு நிர்வாகிகள் என 11,500 பேர் பங்கேற்றனர். தேர்தல் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இந்நிலையில் டெல்லியில் பா.ஜ.க தேசிய செயற்குழு கூட்டத்தில் தமிழகத்தில் சுற்றுப் பயணம் செய்தது குறித்து பிரதமர் மோடி பேசியதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "அயோத்தி ராமர் கோயில் செல்லும் முன் நான் ஒரு சாதாரண மனிதனாக, ஸ்ரீராமருடன் தொடர்புடைய கோயில்கள்- நாஸிக், குருவாயூர், லேபாக்ஷி, ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி சென்றேன்.
800 வருடங்கள் முன் எந்த மண்டபத்தில் கம்பர் தனது ராமயணத்தை அரங்கேற்றம் செய்தாரோ, அதே இடத்தில்,கம்பனின் ராமாயணத்தை கேட்க வாய்ப்பு எனக்கு கிட்டியது. அனுபவத்தை வர்ணிப்பது கடினம். அந்த உணர்ச்சி தனிதொரு உலகம். அது எனக்கு “ஒரே பாரதம் உன்னத பாரதம்” என்பதை நினைவூட்டியது" என்று மோடி பேசியதாக நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“