பாஜக கூட்டணிக்கு பழைய நண்பர்களை வரவேற்க தயாராக இருக்கிறோம் என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு பாரதிய ஜனதாக் கட்சியினரை தயார் படுத்தி வருகிறார். அதன் ஒரு கட்டமாக தமிழ்நாட்டில் கட்சியின் பூத் ஏஜெண்டுகளுடன் காணொளி காட்சி மூலமாக உரையாடி வருகிறார். ஏற்கனவே கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்ட நிர்வாகிகளுடன் ஒரு நாளும், தென் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகளுடன் ஒரு நாளும் இந்த உரையாடல் நடந்தது.
அடுத்தகட்டமாக அரக்கோணம், தர்மபுரி, கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி நிர்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுடன் டெல்லியில் இருந்தபடி நேற்று (ஜனவரி 10) உரையாடினார்.
தமிழில் ‘வணக்கம்’ என்று கூறிவிட்டு தனது பேச்சை தொடங்கிய அவர், தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்தார். பாஜக நிர்வாகிகள் எழுப்பிய கேள்விகளுக்கும் அவர் பதில் அளித்தார். நிர்வாகி ஒருவர், ‘அ.தி.மு.க., ரஜினிகாந்துடன் பாரதீய ஜனதா கூட்டணி அமைக்குமா?’ என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்து பிரதமர் மோடி கூறியதாவது: ‘நம்முடைய பழைய நண்பர்களை வரவேற்க நாம் எப்போதுமே தயாராக இருக்கிறோம். கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன.
தொலைநோக்கு பார்வைகொண்ட மறைந்த பிரதமர் வாஜ்பாய் 20 ஆண்டுகளுக்கு முன் இந்திய அரசியலில் கூட்டணி அரசை ஏற்படுத்தி புதிய கலாசாரத்தை உருவாக்கினார். பிராந்திய மக்களின் விருப்பங்களுக்கு அவர் முக்கியத்துவம் அளித்தார். அவருடைய அந்த கலாசாரத்தை தற்போதும் பாரதீய ஜனதா பின்பற்றி வருகிறது.
2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா தனிப்பெரும்பான்மை பெற்ற போதிலும் கூட்டணி கட்சிகளை மந்திரிசபையில் சேர்த்துக் கொண்டு ஆட்சி நடத்தி வருகிறது. ஆனால் காங்கிரஸ் பிராந்திய கட்சிகளை அவமதிப்பதோடு, மாநில மக்களின் நலன்களை பற்றி கவலைப்படுவது இல்லை.
பாரதீய ஜனதா கட்சியினர் எப்போதும் மக்களுடன் தொடர்பில் இருக்கவேண்டும். கூட்டணிகள் எப்படி இருந்தாலும், மக்களுடன் அமைக்கும் வலுவான கூட்டணிதான் வெற்றிக்கூட்டணியாக இருக்கும்.’ இவ்வாறு மோடி கூறினார்.
தமிழ்நாட்டில் பெரும்பாலான கட்சிகள் பாஜக.வுடன் இதற்கு முன்பு கூட்டணி வைத்தவைதான். எனவே மோடியின் இந்த ‘பழைய நண்பர்களுக்கான’ அழைப்பு எந்தக் கட்சிகளுக்கு என்கிற விவாதம் எழுந்திருக்கிறது.
பழைய கூட்டணிக் கட்சிகளில் திமுக ஏற்கனவே ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்து, தனது நிலையை உறுதிப் படுத்திவிட்டது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடுமையாக பிரதமர் மோடியை விமர்சித்து வருகிறார். எனவே அதிமுக, பாமக, தேமுதிக கட்சிகளுக்கான சிக்னலாக பிரதமரின் பேச்சை அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.