சமீபத்தில் தமிழகத்திற்கு பலமுறை சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, வரும் வாரங்களில் தமிழகத்தில் நடைபெறும் அரசியல் பொதுக் கூட்டங்களில் பங்கேற்று உரையாற்ற உள்ளார்.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியும் சமீப காலமாக தமிழகத்திற்கு பலமுறை வந்து சென்றுள்ளார்.
கடந்த 27,28-ம் தேதிகளில் 2 நாள் பயணமாக தமிழகம் வந்தார். அரசு நிகழ்ச்சிகள், பா.ஜ.க பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார். இந்நிலையில் மார்ச் 4-ம் தேதி மோடி மீண்டும் தமிழகம் வருகிறார். மார்ச் 4-ம் தேதி சென்னையில் நடைபெறும் பா.ஜ.க பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். தெலங்கானாவில் கூட்டத்தில் பங்கேற்றப் பிறகு மார்ச் 4-ம் தேதி மதியம் சென்னை வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மார்ச் 4-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் சில கூட்டணி கட்சிகள் பங்கேற்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அ.திமு.கவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் ஆகியோரை பா.ஜ.க தலைமையிலான கூட்டணியில் சேர்க்க முயற்சி மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.
"லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் ஏற்பாடு செய்யப்படும் முதல் பொதுக் கூட்டத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியின் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் மேடையில் இருப்பார்கள் " என பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவித்தன.
மோடி உரையாற்றும் வகையில் தமிழகத்தில் 8 முதல் 9 பொதுக் கூட்டங்களை நடத்த கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராமநாதபுரம், கோவை, கன்னியாகுமரி, வடதமிழகத்தில் ஒன்றிரண்டு இடங்களில் கூட்டங்கள் நடத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“