மதுரை தோப்பூரில் நாளை (ஜன.27) நடைபெறும் விழாவில், ஆயிரத்து 264 கோடி ரூபாய் செலவில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார். இந்த விழாவில், மதுரை, தஞ்சாவூர், திருநெல்வேலி அரசு மருத்துவமனைகளில் தலா 150 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அதிநவீன மருத்துவ வசதி வளாகங்களையும் பிரதமர் மோடி மக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கிறார். இந்த விழாவில் ஆளுனர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், மத்திய, மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், மதுரை மண்டேலா நகரில் மோடியின் பொது உரை நடைபெறவுள்ளது. இதற்காக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளன.
மதுரை ரிங் சலை மிக முக்கியமான சாலை. மதுரை, திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், அருப்புக்கோட்டை, விருதுநகர், திருநெல்வேலி, கன்யாகுமரி செல்லும் வாகனங்கள் இந்த வழியில் தான் செல்லும். பிரதமர் வருகையை ஒட்டி இந்த சாலையை வாகனங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒத்தக்கடை, கடச்சணென்டல், அலங்காநல்லூர், தனிச்சியம் வழியாக திண்டுக்கல் - மதுரை ரூட்டுக்கு வாகனங்கள் மாற்று வழியில் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஞாயிறு காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த போக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும்.
விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமாரி, தூத்துக்குடி பயணிகள் பேருந்துகள் அனைத்தும், சிந்தாமணி, புலியூர், விரதனூர், நெடுங்குலம் ஆகிய பகுதிகளுக்கு மாற்றி விடப்பட உள்ளன.
தென்மாவட்டங்களில் இருந்து மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை வரும் பேருந்துகளும் இந்த ரூட்டையே பின்பற்ற வேண்டும். சிறிய மோட்டார் வாகனங்களும் இந்த ரூட்டையே பின்பற்ற வேண்டும். இந்த மாற்றுப்பாதை காலை 9 முதல் மதியம் 2 வரை பின்பற்றப்படும்.