சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த விமான முனையங்களின் முதல் கட்டடம் நிறைவடந்துள்ளது. இதற்கான திறப்பு விழா வரும் 27-ம் தேதி நடைபெறுகிறது. சென்னை விமான நிலையத்தில் ரூ. 2,400 கோடி மதிப்பில், 2.36 லட்சம் சதுர மீட்டரில் ஒருங்கிணைந்த விமான முனையங்கள் கட்டப்பட்டு வருகிறது. இதில் முதல் கட்டடத்தின் பணிகள் நிறைவடந்துள்ள நிலையில் தற்போது அது பயணியர்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது. இந்த முனையம் செயல்பாட்டுக்கு வந்ததும், பயணியரின் எண்ணிக்கை 2.20 கோடியில் இருந்து, 3.50 கோடியாக அதிகரிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த புதிய முனையத்தின் கீழ் தளத்தில், பயணியர் உடைமைகள் கையாளப்படுகின்றன. முதல் தளத்தில் சர்வதேச வருகை பயணியருக்கான வழக்கமான நடைமுறைகள். இரண்டாவது தளத்தில் பயணியருக்கான புறப்பாடு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மொத்தம், 5 தளங்கள் இந்த புதிய முனையத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
முதல் கட்டடத்தின் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் கருவிகள், உபகரணங்கள் சோதனைகள் நடந்து வருகிறது. கட்டடம் திறப்பு விழா அடுத்த மாதம் நடைபெறவிருந்த நிலையில் பிரதமரின் நேரம் கிடைத்திருப்பதால், வரும் 27-ம் தேதி புதிய முனையம் பிரதமரால் திறந்து வைக்கப்படுகிறது. மார்ச் 27-ம் தேதி காலை ராமேஸ்வரம் வரும் பிரதமர், அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளை முடித்து விட்டு சென்னை வருகிறார்.
சென்னை விமான நிலையத்தில் நடைபெறும் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புதிய விமான முனைய கட்டடத்தை திறந்து வைக்கிறார். விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/