பிரதமர் நரேந்திர மோடி 2-நாள் பயணமாக இன்று (பிப்.27) தமிழ்நாடு வருகிறார். அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' பாத யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்று பேசுகிறார். அதோடு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் பாத யாத்திரை மேற்கொண்டார். இதன் நிறைவு நிகழ்ச்சி திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியில் நடைபெறுகிறது. இதற்காக அவர் இன்று (செவ்வாய்க் கிழமை) காலை 9 மணிக்கு திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து தனது பயணத்தை தொடங்குகிறார்.
தொடர்ந்து, பல்லடம் மாதப்பூரில் பாத யாத்திரையை நிறைவு செய்கிறார். இங்கு பிரம்மாண்ட பொதுக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசுகிறார்.
இதற்காக மோடி திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் மூலம் இன்று மதியம் 2.05 மணிக்கு கோவை மாவட்டம் சூலூர் விமான படை தளத்திற்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு 2.35 மணிக்கு பல்லடம் வருகிறார்.
அங்கிருந்து நிகழ்ச்சி நடைபெறும் மாதப்பூர் பொதுக்கூட்ட மேடைக்கு காரில் செல்கிறார். பின்னர் பிரதமர் மோடி உடன் அண்ணாமலையும் வாகனத்தில் ஏறி ஊர்வலமாக பொதுக்கூட்ட மேடைக்கு செல்கிறார்கள்.
மதியம் 2.45 மணி முதல் 3.45 மணி வரை பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். பொதுக் கூட்டம் முடிந்ததும் ஹெலிகாப்டரில் புறப்பட்டு மாலை 5 மணிக்கு மதுரை செல்கிறார். மாலை 5.15 மணியளவில் மதுரையில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறு,குறு, நடுத்தர தொழில்முனைவோருக்கான திட்டங்களை தொடங்கி வைக்கிறார். ஆட்டோமொபைல் துறையில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்களை (MSME) சந்தித்து மோடி பேசுகிறார். பிரதமர் மதுரை வருகையையொட்டி அங்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இரவு மதுரையில் உள்ள தனியார் ஓட்டலில் தங்குகிறார். இதையடுத்து மறுநாள் (பிப்.28) தூத்துக்குடி, திருநெல்வேலியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். காலை 9.45 மணியளவில் தூத்துக்குடியில் சுமார் 17,300 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை மோடி தொடக்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார்.
பின்னர் அங்கிருந்து திருநெல்வேலி செல்லும் மோடி காலை 11.15 மணி முதல் 12.15 மணி அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசிகிறார். இதைத் தொடர்ந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் விமான நிலையம் செல்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“