தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப்ரல் 15) மீண்டும் தமிழகம் வர உள்ளார். மக்களவைத் தேர்தல் பிரசாரத்திற்காக இன்று திருநெல்வேலி வருகிறார்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அகஸ்தியர் பட்டியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று மோடி உரையாற்றுகிறார். இதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தென் மண்டல போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் கண்ணன் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 3 டி.ஐ.ஜிக்கள், 12 எஸ்.பிக்கள் மற்றும் 2,500 போலீசார் பாதுகாப்பு பணிககளில் ஈடுபட்டுள்ளனர்.
சிறப்பு விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையம் வரும் பிரதமர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கேம்பிரிட்ஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மைதானத்தை சென்றடைகிறார். சுமார் மாலை 4.30 மணியளவில் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு செல்லும் அவர் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்ட பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
கூட்டத்திற்குப் பிறகு மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் மதுரை செல்கிறார். பிரதமரின் திருநெல்வேலி வருகையை முன்னிட்டு போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். பிரதமர் செல்லும் இடங்களில் பாதுகாப்பிற்காக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு அனைத்து வாகனங்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. கடந்த மாதம் திருநெல்வேலிக்கு வந்த பிரதமர், பாளையங்கோட்டையில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“