திருச்சியில் ரூ.1,112 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள விமான நிலைய புதிய முனையத்தின் திறப்பு விழா, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று (ஜன.2) தமிழகம் வருகிறார்.
விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனா்
இதற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து இன்று காலை 10 மணிக்கு தனி விமானத்தில் திருச்சி விமான நிலையம் வந்தடைகிறார்.
பின்னர், காரில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் செல்லும் பிரதமர் மோடி, அங்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் காலை 10.30 மணிக்கு தொடங்கும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார். அந்த விழாவில், 33 பேருக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
பிறகு, கார் மூலம் 12 மணிக்கு திருச்சி விமான நிலையம் வரும் பிரதமர், அங்கு கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தை பார்வையிட்டு, விமான நிலைய அதிகாரிகளுடன் கலந்துரையாடுகிறார்.
தொடர்ந்து, அங்கு 10 ஆயிரம் பேர் அமரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட பந்தலில் நடக்கும் விழாவில், ரூ.1,112 கோடி மதிப்பிலான விமான நிலைய புதிய முனையம், திருச்சி என்.ஐ.டி.யில் ரூ.41 கோடியில் 1.2 லட்சம் சதுரஅடியில் 506 மாணவர்கள் தங்கும் வகையில் கட்டப்பட்டுள்ள ‘அமெதிஸ்ட்’ விடுதி, சேலம் – மேக்னசைட் சந்திப்பு – மேட்டூர் அணைப் பிரிவில் 41.4 கிமீ இரட்டை ரயில் பாதை திட்டம், மதுரை - தூத்துக்குடி 160 கிமீ இரட்டை ரயில் பாதை, திருச்சி - மானாமதுரை- விருதுநகர், விருதுநகர் - தென்காசி, செங்கோட்டை- தென்காசி, திருநெல்வேலி - திருச்செந்தூர் ரயில் பாதைகள் மின் மயமாக்கம் ஆகியவற்றை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
இதுதவிர, 5 சாலைத் திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார். காமராஜர் துறைமுகத்தின் பொது சரக்குக் கப்பல் தங்குமிடம் 2-ஐ நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
மேலும், ரூ.9 ஆயிரம் கோடிக்கும் அதிக மதிப்புள்ள பெட்ரோலியம், இயற்கை எரிவாயு திட்டங்களை தொடங்கி வைப்பதுடன், புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார். கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் ரூ.400 கோடி மதிப்பிலான விரைவு எரிபொருள் மறுசுழற்சி உலையையும் திறக்கிறார்.
இவ்வாறு, ரூ.19,850 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப் பணிகளை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பணிக்கும் மோடி சில புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி சிறப்புரையாற்றுகிறார்.
அதன்பிறகு மதியம் 1 மணியளவில் தனி விமானத்தில், லட்சத்தீவுகள் செல்கிறார்.
பிரதமர் மோடி வருகையையொட்டி பிரதமர் வருகையையொட்டி, 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் முதல் பாரதிதாசன் பல்கலைக்கழகம் வரை 12 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், 36 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல, பாஜக சார்பில் 7 இடங்களில் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.