திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய முனைய திறப்பு விழா நாளை மறுதினம் ஜனவரி 2-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்று புதிய முனையத்தை தொடங்கி வைக்க பிரதமா் நரேந்திரமோடி திருச்சி வருகிறாா். அன்றைய தினம் நடைபெறும் பாரதிதாசன் பல்கலைக்கழக 38-வது பட்டமளிப்பு விழாவிலும் பிரதமா் பங்கேற்கிறாா்.
/indian-express-tamil/media/media_files/JwSHfvmPVjE6Do5cH6nt.jpeg)
இந்த இரண்டு நிகழ்வுகளிலும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், ஆளுநா் ஆா்.என்.ரவி, தமிழக உயா்கல்வித்துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனா். திருச்சிக்கு பிரதமா் வருவதையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. திருச்சி விமான நிலையத்தில் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரும், வெளிப்பகுதியில் மாநகர காவல் துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா். இவா்களுடன் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையினரின் (எஸ்பிஜி) திருச்சிக்கு வந்துள்ளனர். இதையடுத்து, திருச்சி விமான நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு அமலுக்கு வந்துள்ளது.
மேலும், விமானத்தில் பயணம் செய்ய இருக்கும் பயணிகளின் உடைமைகள் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரால் ஸ்கேனர் கருவி மூலம் சோதனை செய்யப்பட்ட பின்பே விமானத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
/indian-express-tamil/media/media_files/AelYYuozaNbpzLaJtUFj.jpeg)
அதேபோன்று, விமானத்தில் பயணம் செய்ய இருக்கும் பயணிகள் அனைவரும் பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்பு விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
பிரதமர் மோடி நாளை மறுநாள் (ஜனவரி 2) காலை 10.10 மணிக்கு தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து காரில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு செல்கிறார். அங்கு மாணவ-மாணவிகளுக்கு பிரதமர் மோடி பட்டங்களை வழங்குகிறார்.
பின்னர் பிரதமர் மோடி அங்கிருந்து புறப்பட்டு மதியம் 12 மணிக்கு திருச்சி விமான நிலையத்துக்கு வருகிறார். அங்கு நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு திருச்சி விமான நிலைய பன்னாட்டு முனையத்தை திறந்து வைக்கிறார். பின்னர் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல்நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைக்கிறார்
/indian-express-tamil/media/media_files/fzN54PS7VQDXVjJCI3SI.jpeg)
இதை தொடர்ந்து மதியம் 1.15 மணிக்கு அவர் தனி விமானம் மூலம் லட்சத்தீவுக்கு புறப்பட்டு செல்கிறார். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு திருச்சி விமான நிலையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் செல்லும் சாலைகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பிரதமா் வருகையின்போது 5 அடுக்கு பாதுகாப்பு அமலில் இருக்கும். இதைப்போலவே, பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலும் மாவட்ட போலீஸாா், மத்திய சிறப்பு பாதுகாப்பு படையினா் உள்ளிட்ட 5 அடுக்கு பாதுகாப்பு அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“