/indian-express-tamil/media/media_files/2025/07/26/pm-modi-visit-trichy-tight-security-police-order-to-close-shops-tamil-news-2025-07-26-19-24-29.jpg)
திருச்சியில் பிரதமர் மோடி வந்து செல்லும் வழித்தடத்தில் உள்ள கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் நாளை மதியம் வரை மூட போலீசார் அறிவுறுத்தியதால் பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள், சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு திருச்சியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிறப்பு பாதுகாப்புக்குழு (எஸ்.பி.ஜி.) டி.ஐ.ஜி. விமுக்த் நிரஞ்சன் தலைமையிலான அதிகாரிகள், திருச்சி விமானநிலையம், பிரதமர் தங்கும் சங்கம் ஹோட்டல் என அழைக்கப்பட்ட நியூ கோர்ட்யார்டு ஹோட்டல் ஆகியவற்றை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். திருச்சி விமான நிலையத்தில் 6 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இங்கு வாகனங்கள், பயணிகள் உடைமைகள் தீவிர பரிசோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றன.
விமான நிலையத்தின் கார் பார்க்கிங், பயணிகள் வருகை, புறப்பாடு ஆகிய பகுதிகளில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தி வருகின்றனர். வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பயணிகளை வரவேற்க வரும் உறவினர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரதமர் வந்து செல்லும் பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். எஸ்.பி.ஜி. அதிகாரிகள் விமானம் மூலம் விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதியில் வானில் வட்டமடித்தபடி ரோந்து சென்று கண்காணித்தனர்.
விமான நிலைய நுழைவு வாயில் பகுதியில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால் தேவையில்லாத வாகனங்கள் மற்றும் ஆட்கள் செல்வது தடுத்து நிறுத்தப்படுகிறது. விமான நிலைய ஊழியர்கள் அடையாள அட்டை இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். இதே போல பிரதமர் தங்கும் கோர்ட்யார்டு ஹோட்டலிலும், பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் எஸ்.பி.ஜி. அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்னர். இங்கு 6 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பிரதமர் வந்து செல்லும் திருச்சி-புதுக்கோட்டை சாலை, பாரதிதாசன் சாலை, மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை, குட்ஷெட் ரயில்வே மேம்பாலம் 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
மாநகர் மற்றும் விமானநிலைய பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் வருகைக்காக ராணுவ விமானங்கள், ஹெலிகாப்டர்கள் திருச்சி விமான நிலையம் வந்திறங்கின. பிரதமர் பாதுகாப்பு மற்றும் வரவேற்பு உள்ளிட்டவைகள் குறித்த ஒத்திகை நடந்தது. திருச்சி-புதுக்கோட்டை சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பகுதி மற்றும் கடை வீதிகளில் இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது. கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாம் முகப்பு சாமியானா பந்தல் மூலம் மூடி மறைக்கப்பட்டுள்ளது.
விமான நிலையம் முதல் திருச்சி ஆட்சியர் அலுவலக சாலையில் உள்ள கோர்ட்யார்டு தனியார் விடுதி வரை அனைத்து உணவு விடுதிகளும், பிரபல வர்த்தக நிறுவனங்களுக்கும் இன்று எஸ்.பி.ஜி.மற்றும் காவல்துறையால் கட்டாய கடையடைப்புக்கு உத்தரவிடப்பட்டது. இதனால் டி.வி.எஸ்.டோல்கேட் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள், தனியார், அரசு அலுவலக ஊழியர்கள் உணவுக்கு அவதிப்பட்டனர். டோல்கேட் முதல் கோர்ட்யார்டு ஹோட்டல் வரை ஏதோ கொரோனா காலத்து ஊரடங்கு போன்ற காட்சியினை பார்க்க முடிந்தது. மோடி திருச்சி வருகையால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
தமிழகத்தில் அதுவும் திருச்சி சங்கம் ஹோட்டல் எனப்பட்ட புதிய கோர்ட் யார்டு ஹோட்டலில் தங்கும் முதல் பிரதமர் என்ற பெருமையை கோர்ட்யார்டு ஹோட்டலும், திருச்சியும் பெற்றுள்ளது. மறைந்த முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா தங்கிய அதே விடுதியில் இன்று இரவு பிரதமர் மோடி தங்குகிறார். இதனால் திருச்சி பெருமை கொள்கின்றது.பாதுகாப்பு காரணங்களுக்காக பிரதமர் மோடி வந்து செல்லும் வழித்தடத்தில் உள்ள கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் நாளை மதியம் வரை மூட போலீசார் அறிவுறுத்தியதால் பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள், சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
மேலும் விமான நிலையம் மற்றும் கலெக்டர் அலுவலக சாலையில் சுற்றியுள்ள குடியிருப்புகள் மற்றும் தனியார் விடுதிகளை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். விமானநிலையம் மற்றும் பகுதி முழுவதிலும் 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கங்கைகொண்ட சோழபுரத்திற்கு ஓரிரு மணித்துளிகள் செலவு செய்யும் பிரதமர் மோடி திருச்சி வருகையால் திருச்சி மாநகர பொதுமக்கள், வர்த்தகர்கள் கடும் அவதிக்குள்ளாகியிருக்கின்றனர் என்றால் அது மிகையல்ல.
செய்தி: க.சண்முகவடிவேல்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.