பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக ஜனவரி 19-ம் தேதி சென்னை வருவதையொட்டி, சென்னையில், முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது என்று சென்னை போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது.
இது குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: “பாரதப் பிரதமர் மோடி மோடி 19.01.2024 அன்று நேரு வெளிப்புற விளையாட்டு அரங்கில் நடைபெறும் ‘கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு’ தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக சென்னை வரவுள்ளார். இதில் தமிழக ஆளுநர், முதலமைச்சர் தமிழகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் விழாவில் பங்கேற்க உள்ளனர்.
பிரதமர் மோடியின் சென்னை வருகையின்போது விழா நடைபெறும் இடங்களைச் சுற்றியுள்ள சாலைகள், ஐ.என்.எஸ் அடையாறு முதல் நேரு வெளி விளையாட்டு அரங்கம், நேரு உள் விளையாட்டு அரங்கம் முதல் ராஜ்பவன் வரை பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக சாலைப் பயணிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
பிரதமரி வருகையையொட்டியும் விழா நடைபெறும் அதை சுற்றி உள்ள சாலைகளில் குறிப்பாக ஈ.வே.ரா சாலை, தாஸபிரகாஷ் முதல் சென்னை மருத்துவக் கல்லூரி சந்திப்பு வரை போக்குவரத்து சிறிதளவு நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பொதுவாக அண்ணாசாலை, எஸ்.வி. பட்டேல் சாலை மற்றும் ஜி.எஸ்.டி சாலைகளில் போக்குவரத்து மெதுவாக இருக்கும். ஆகையால் வாகன ஓட்டிகள் தங்களது பயணத்தை இந்த சாலைகளைத் தவிர்த்து மாற்று வழியில் செல்ல திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், வணிக வாகனங்களுக்கு மதியம் 3 மணி முதல் மாலை 8 மணி வரை இடையே மாற்று வழித்தடங்களில் செல்ல கீழ்கண்டவாறு நடைமுறைப்படுத்தப்படும்.
*அண்ணா ஆர்ச் (Arch) முதல் முத்துசாமி சாலை சந்திப்பு வரை இரு திசைகளிலும் வணிக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது.
*பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வரும் வாகனங்கள்அண்ணா ஆர்ச்சில் (Arch) திரும்பி அண்ணா நகர் வழியாக புதிய ஆவடி சாலையில் திருப்பி விடப்படும்.
*வட சென்னையில் இருந்து பாரி முனை நோக்கி வரும் வாகனங்கள் என்.ஆர்.டி புதிய பாலத்தில் இருந்து திருப்பி விடப்பட்டு ஸ்டான்லி சுற்றி மிண்ட் சந்திப்பு, மூலக்கொத்தளம் சந்திப்பு, பேசின் பிரிட்ஜ் டாப் மற்றும் வியாசர்பாடி வழியாக திருப்பிவிடப்படும்.
*ஹண்டர்ஸ் சாலையில் இருந்து வரும் வணிக வாகனங்கள் ஹண்டர்ஸ் ரோடு, ஈ.வி.கே. சம்பத் சாலை வழியாக ஈ.வி.ஆர் சாலையை நோக்கி திருப்பி விடப்பட்டு நாயர் பாயிண்ட் (டாக்டர் அழகப்பா சாலை X ஈ.வி.ஆர் சாலை சந்திப்பு) வழியாக சென்றடையலாம்.
எனவே, வாகன ஓட்டிகள் தங்கள் இலக்கை அடைய அதற்கேற்ப பயணத்தை திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று சென்னை பெருநகர் போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“