ராமேஸ்வரத்தை மண்டபத்துடன் இணைக்கும் புதிய பாம்பன் பாலம் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இந்தப் பாலம் திறப்பு விழாவில் பங்கேற்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி, இம்மாதம் 28 ஆம் தேதி தமிழகம் வருகிறார்.
பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக, மதுரை, ராமநாதபுரம், மண்டபம், ராமேஸ்வரம், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, பலத்த கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பாலத்தின் முக்கியத்துவம்
ஆங்கிலேய ஆட்சியின் போது, 1914 ஆம் ஆண்டு 2.2 கிலோமீட்டர் நீளமுள்ள பழைய பாம்பன் ரயில் பாலம் அமைக்கப்பட்டது. நூற்றாண்டுக்கும் மேலாகப் பயன்பாட்டில் இருந்த இந்தப் பாலத்தின் உறுதித்தன்மை குறைந்ததால், ரூ.550 கோடி மதிப்பில் புதிய பாலம் கட்டும் பணிகள் 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன.
தற்போது, பணிகள் அனைத்தும் நிறைவடைந்து, பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. சமீபத்தில், பயணிகள் இன்றி 60 கி.மீ வேகத்தில் ரயில் இயக்கம் சோதிக்கப்பட்டது. மேலும், பாலத்தின் நடுவில் அமைந்துள்ள செங்குத்து இரும்புக் கர்டரை தூக்கி, இந்தியக் கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான கப்பல் செல்லும் வகையிலும் சோதனை நடத்தப்பட்டது.
பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு, மாநில பா.ஜ.க நிர்வாகிகள் வெகுசிறப்பான வரவேற்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். புதிய பாலம் திறப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று, அதை நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.