பாம்பன் பாலத்தை திறந்து வைக்க தமிழகம் வந்த பிரதமர் மோடியை ஆளுநர் ரவி, அமைச்சர் தங்கம் தென்னரசு, அண்ணாமலை உள்ளிட்டோர் வரவேற்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் தனித் தீவாக இருந்த ராமேஸ்வரத்தை மண்டபத்துடன் இணைக்கும் வகையில் 1914-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பாம்பன் பகுதியில் 2,050 மீட்டர் நீளத்தில் கடலுக்கு நடுவே ரயில் பாலம் கட்டப்பட்டது. இந்தியாவில் கடல் பகுதியில் அமைக்கப்பட்ட முதல் ரயில்வே பாலம் என்ற சிறப்பை பெற்ற பாம்பன் பாலம் நூற்றாண்டுகளை கடந்த நிலையில், தன்னுடைய உறுதித்தன்மையை படிப்படியாக இழக்கத் தொடங்கியது.
இந்த நிலையில், ரூ.550 கோடி மதிப்பில் புதிய ரயில் பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கின. இந்தப் பணிகள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முடிவடைந்தன. பழைய பாலம் இருபுறமும் தூக்கப்படும் பாலமாக இருந்த நிலையில், தற்போதைய பாலம் செங்குத்து தூக்கு பாலமாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திரமோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) பகல் 12 மணிக்கு திறந்து வைத்தார். முன்னதாக இலங்கை சென்றிருந்த பிரதமர் மோடி, இலங்கையில் உள்ள அனுராதபுரத்தில் இருந்து இந்திய விமானப் படைக்கு சொந்தமான MI 17 ரக ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் வந்தடைந்தார்.
மண்டபம் வந்தடைந்த பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
மேலும் தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி, எம்.பி. ஜி.கே.வாசன், பா.ஜ.க எம்.எல்.ஏ.,க்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க மூத்த தலைவர்கள் சுதாகர் ரெட்டி, ஹெச்.ராசா, பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், சரத்குமார் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரும் வரவேற்றனர்.