PM Modi visits Tamilnadu on May 26: ரயில்வே திட்டங்கள் உள்ளிட்ட பணிகளை தொடங்கி வைக்க மே 26ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். பிரதமர் வருகையின் போது, அவரை சந்தித்து தமிழ்நாட்டின் கோரிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில், ரூ.12,413 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். இதற்காக மே 26ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்.
முன்னதாக, தமிழகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைக்க ஜனவரியில் பிரதமர் மோடி தமிழகம் வர இருந்தார். ஆனால் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக அப்போதைய நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.
இந்தநிலையில் வரும் 26ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் தேசிய நெடுஞ்சாலைத்துறையின் விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்.
இந்த நிகழ்ச்சியில், பெங்களூரு-சென்னை 4 வழி விரைவுச்சாலையின் 3ம் கட்ட பணிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். சென்னையில் அமைய உள்ள மல்ட்டி மாடல் லாஜிஸ்டிக் பூங்கா, ஒசூர்-தருமபுரி இடையேயான 2ம் மற்றும் 3ம் கட்ட நெடுஞ்சாலை பணிகளுக்கும், மீன்சுருட்டி-சிதம்பரம் இடையிலான புதிய சாலைக்கும் அடிக்கல் நாட்டுகிறார். இது தவிர, மத்திய நகர்ப்புற வீட்டுவசதித்துறை, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை, ரயில்வே துறையின் சார்பில் முடிக்கப்பட்டுள்ள பணிகளை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
மேலும், மதுரவாயல் மற்றும் துறைமுகம் பறக்கும் சாலை திட்டம், மாமல்லபுரம் மற்றும் புதுச்சேரி வரையிலான கிழக்கு கடற்கரைச் சாலையை அகலப்படுத்தும் திட்டம், போடி முதல் மதுரை வரையிலான ரயில் பாதைத் திட்டம் உள்ளிட்ட ரூ.12,413 கோடி பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
இதையும் படியுங்கள்: எம்.பி ஆகும் 82 வயது கல்யாணசுந்தரம்: 2 ஏக்கர் நிலம் தானம் கொடுத்த குடும்ப வாரிசு
பிரதமர் மோடி பங்கேற்கும் விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.
இதனிடையே, சென்னை வரும் பிரதமர் மோடியை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நேரில் சந்தித்து பேசுகிறார். அப்போது, இலங்கை தமிழர் விவகாரம், நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை முதல்வர் வலியுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil