சென்னையில் தேசிய அளவிலான கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, இன்று (ஜன.20)சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் காலை திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். பின்னர் விமான நிலையத்தில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு ஸ்ரீரங்கம் யாத்ரிநிவாஸ் எதிரே பஞ்சக்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ப்ரத்யேக ஹெலிகாப்டர் இறங்கு தளத்துக்கு வந்தடைந்தார்.
பின்னர் அங்கிருந்து குண்டு துளைக்காத கார் மூலம் புறப்பட்ட பிரதமர் மோடி காரில் நின்றபடியே பொதுமக்களைப் பார்த்து கையசைத்தவாறு ஸ்ரீரங்கம் வடக்கு வாசல் வழியாக தெற்கு வாசல் ரங்கா ரங்கா கோபுரத்திற்கு வந்தார். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பிரதமர் மோடிக்கு கோயில் தலைமை பட்டர் சுந்தர் பட்டர் தலைமையில் தங்க குடத்தில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அதன்பிறகு கோபுர வாசல் வழியாக உள்ளே சென்ற பிரதமர் யானைக்கு பழங்கள் கொடுத்தார். யானை லட்சுமி மோடியை ஆசீர்வதித்தது.
பின்னர், கருடாழ்வார், மூலவர் சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தார் மோடி. மேலும் தாயார், சக்கரத்தாழ்வார், பட்டாபிராமர், கோதண்டராமர், ராமானுஜர் சன்னதிகளுக்கும் சென்று சாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினார்.
பின்னர் அங்குள்ள மண்டபத்தில் தமிழறிஞர்கள் கம்பராமாயணத்தை பாடினர். அதை மோடி சிறிது நேரம் அமர்ந்து கேட்டார். அதனுடன் அங்கு நடைபெற்ற கம்பராமாயண பாராயண நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். பின்னர் பகல் 12.50 மணிக்கு ஸ்ரீரங்கத்தில் இருந்து கார் மூலம் புறப்பட்டு பஞ்சக்கரை சென்றார்.
அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுரை சென்று அங்கிருந்து ராமேஸ்வரம் புறப்பட்டார். பிரதமர் மோடி திருச்சி வருகையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. பிரதமர் வருகையை ஒட்டி பிற்பகல் 2.30 மணி வரை ஸ்ரீரங்கம் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“