Pm Modi Tour Of Chennai : தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேசிய கட்சியான பாஜக, காங்கரஸ் கட்சிகளின் தலைவர்கள் தமிழகத்தில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது தமிழகத்தில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக பிரதமர் மோடி நாளை (ஞாயிற்றுக்கிழமை) தமிழகத்தில் வருகை தருகிறார். பிரதமர் தமிழக வருகையை முன்னிட்டு தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஒரு பொது நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடிக்காக 4 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்காக சுமார் 6,000 காவலர்கள் இந்த பாதுகாப்பு பணியில், அமர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பிரதமர் மோடி கலந்துகொள்ளும் பேரணிக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளோம் என்றும், ஹெலிபேட், டெய்ஸ், பொது இடம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைப் பாதுகாக்க போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி கலந்துகொள்ளும் நிகழ்ச்சி அட்டவனை:
நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.40 மணிக்கு சிறப்பு விமானத்தில் சென்னை வரும் பிரதமர் மோடி, காலை 11 மணிக்கு சிறப்பு ஹெலிகாப்டரை ஐ.என்.எஸ் அடையருக்கு செல்கிறார். அதனைத் தொடர்ந்து, அங்கிருந்து காலை 11.15 மணிக்கு ஜவஹர்லால் நேரு உட்புற மைதானத்திற்கு செல்லும் அவர், அங்கு பல்வேறு திட்டங்களின் தொடக்க மற்றும் அடிக்கல் நாட்டும் விழாக்களில் பங்கேற்கவுள்ளார்.
தொடர்ந்து, பாஜக செயற்பாட்டாளர்கள் மற்றும் பிற அரசியல் தலைவர்களை சந்திக்க பிரதர் மோடி சுமார் 15 நிமிடங்கள் ஒதுக்கியுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ள நிலையில், இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் முடிந்து மதியம் 1.30 மணியளவில் பிரதமர் மோடி டெல்லி செல்வதற்காக விமான நிலையத்தை சென்றடைவார் என்று கூறப்பட்டுள்ளது.