முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
மேலும், எம்.ஜி.ஆரின் உருவச் சிலைக்கு அ.தி.மு.க-வினர், எம்.ஜி.ஆர் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் என ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். எம்.ஜி.ஆர் பிறந்த நாள் தொடர்பாக தமிழக அரசு சார்பிலும் செய்திக் குறிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
அதில், "எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில், அமைச்சர்கள் ஜனவரி 17ம் தேதி அன்று சென்னை, கிண்டி டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்கள்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியும் எம்.ஜி.ஆர் பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். குறிப்பாக, "திரு எம்.ஜி.ஆர் பிறந்த நாளில் அவருக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். ஏழைகளுக்கு அதிகாரமளிக்கவும், சிறந்த சமுதாயத்தை கட்டமைக்கவும் அவர் மேற்கொண்ட முயற்சிகளால் நாம் பெரிதும் உத்வேகம் அடைந்துள்ளோம்" என அவர் தெரிவித்துள்ளார்.
இதில், எம்.ஜி.ஆர் தொடர்பான வீடியோ பதிவுடன் மோடி வாழ்த்து கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.