பிரதமர் மோடி இன்று (ஜூலை 26) இரவு மாலத்தீவிலிருந்து தூத்துக்குடிக்கு வருகிறார். இரவு 7:50 மணிக்குத் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வரும் பிரதமர், இரவு 8:30 மணிக்கு ரூ.451 கோடி மதிப்பில் விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய விமான நிலையத்தைத் திறந்து வைக்கிறார். இதைத் தொடர்ந்து, ரூ.4,800 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், ரூ.3,600 கோடி மதிப்பிலான புதிய ரயில் மற்றும் சாலைத் திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார். மேலும், வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் சரக்கு கையாள்வதற்கான புதிய முனையத்தையும் திறந்து வைக்கிறார்.
திருச்சியில் ஓய்வு: தூத்துக்குடியில் நடைபெறும் நிகழ்வுகளை முடித்த பிறகு, பிரதமர் மோடி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்து சேர்கிறார். பின்னர், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் உள்ள பிரபல சொகுசு விடுதியில் இரவு ஓய்வெடுக்கிறார்.
திருச்சி, கங்கைகொண்ட சோழபுரத்தில் ரோடு ஷோ
பிரதமர் மோடி நாளை (ஜூலை 27) காலை திருச்சி மற்றும் கங்கைகொண்ட சோழபுரத்தில் ரோடு ஷோக்களில் பங்கேற்கிறார். நாளை காலை காரில் திருச்சி விமான நிலையம் செல்லும்போது, கோர்ட்டுயார்டு ஹோட்டலில் இருந்து மேஜர் சரவணன் ரவுண்டானா, எம்ஜிஆர் சாலை, நீதிமன்றம், பாரதிதாசன் சாலை, தலைமை தபால் நிலையம், குட்ஷெட் மேம்பாலம், டிவிஎஸ் டோல்கேட், புதுக்கோட்டைச் சாலை வழியாக சுமார் 8 கி.மீ. தூரத்திற்கு ரோடு ஷோ செல்கிறது.
கங்கைகொண்ட சோழபுரம் பயணம்: ரோடு ஷோ முடிந்ததும், பிரதமர் விமான நிலையம் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்திற்குச் செல்கிறார். அங்குப் பொன்னேரி பகுதியில் ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளது. ஹெலிபேட்டில் இருந்து கோயிலுக்கு 1 கி.மீ. தூரம் இருப்பதால், அங்கும் ரோடு ஷோ மூலம் மக்களைச் சந்திக்கிறார். இந்தப் பகுதிகளில் இருபுறமும் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. கங்கைகொண்ட சோழபுரத்தில் மத்திய தொல்லியல் துறை சார்பில் மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடி திருவாதிரை நிறைவு நாள் உள்ளிட்ட முப்பெரும் விழாவில் பிரதமர் பங்கேற்கிறார்.
பிரதமரின் வருகையையொட்டி உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருச்சி மற்றும் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும் ரோடு ஷோக்களில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பாஜக முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர். நாளை காலை நடைபெறும் பிரதமர் மோடியின் ரோடு ஷோவை வெற்றிகரமாக்க பாஜக மற்றும் அதிமுக தொண்டர்கள் திரளாகக் கூட்டத்தை சேர்க்க ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்