மக்களவைத் தேர்தலையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி சென்னை தி. நகரில் பிரம்மாண்ட ‘ரோடு ஷோ’ என்கிற வாகனப் பேரணி நடத்தினார். பொதுமக்கள் சாலையின் இருபுறமும் திரண்டு மலர்தூவி கையசைத்து மோடிக்கு உற்சாக வரவேற்பு தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் ஒவ்வொரு நாளும் உச்சகட்டத்தை எட்டி வருகிறது. இந்த மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில், தி.மு.க கூட்டணி, அ.தி.மு.க கூட்டணி, பா.ஜ.க கூட்டணி, நாம் தமிழர் கட்சி என முக்கிய போட்டியாளர்களாக உள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால், தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு குறைவாகவே அவகாசம் உள்ளதால், அரசியல் கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில், தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட திராவிட கட்சிகள், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட தேசிய கட்சிகள் தேர்தல் பிரச்சாரம் என்பது வாகனங்களில் சென்று உரையாற்றி வாக்கு சேகரிப்பது, தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் உரையாற்றுதல், தலைவர்கள், வேட்பாளர்கள், வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பது என்பதே பிரச்சார முறையாக இருந்து வந்துள்ளது.
ஆனால், தமிழ்நாட்டில் பா.ஜ.க இந்த தேர்தலில் புதிய முயற்சியாக ‘ரோடு ஷோ’ என்கிற வாகனப் பேரணியை நடத்தி வாக்காளர்களைக் கவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தலைவர்கள் திறந்த வாகனத்தில் நின்றபடி, சாலையின் இருபுறமும் திரண்டு நிற்கும் மக்களைப் பார்த்து கையசைத்தபடி சென்ரு பிரச்சாரம் செய்வது. இந்த ரோடு ஷோ வட இந்திய மாநிலங்களில் பா.ஜ.க பிரச்சார முறையாக உள்ளது. அதே போல, தமிழ்நாட்டிலும் பா.ஜ.க ரோடு ஷோக்களை திட்டமிட்டு நடத்தி வருகின்றனர்.
மக்களவைத் தேர்தலையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 18-ம் தெதி கோவையில் ரோடு ஷோ நடத்தினார். இதைத் தொடர்ந்து, பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா மதுரை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் ரோடு ஷோ நடத்தினார்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி சென்னை தி. நகரில் பிரம்மாண்ட ‘ரோடு ஷோ’ என்கிற வாகனப் பேரணியை செவ்வாய்க்கிழமை (09.04.2024) நடத்தினார். பொதுமக்கள் சாலையின் இருபுறமும் திரண்டு கையசைத்து மோடிக்கு வரவேற்பு தெரிவித்தனர்.
மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து, பிரதமர் நரேந்திர மோடி பா.ஜ.க வேட்பாளர்கள் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக இன்று 7 வது முறையாக தமிழ்நட்டு வந்தார்.
சென்னை தி. நகரில் பிரதமர் நரேந்திர மோடியின் ‘ரோடு ஷோ’ என்கிற வாகனப் பேரணி நடத்துவதற்கு அனுமதி பெறப்பட்டு, திட்டமிடப்பட்டது. அதன்படி, சென்னையில் ரோடு ஷோ-வில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி மகாராஷ்டிராவில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு, சென்னை விமான நிலையம் மாலையில் வந்தடைந்தார்.
சென்னை விமான நிலையம் வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, உள்ளிட்ட அக்கட்சியின் நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். இதைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் இருந்து சாலை வழியாக தியாகராய நகர் பனகல் பூங்கா பகுதிக்கு சென்றார்.
சென்னை பனகல் பூங்கா பகுதியில் பா.ஜ.க சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரமாண்ட ‘ரோடு ஷோ’ என்கிற வாகன பேரணியைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கினார். பட்டு வேட்டி சட்டை, தோளில் துண்டு அணிந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி திறந்த வாகனத்தில் நின்று கையில் தாமரைச் சின்னத்தை வைத்துக்கொண்டு, சாலையில் இருபுறமும் திரண்டு நின்ற மக்களைப் பார்த்து கையசைத்தும், கைகள் கூப்பியும் பா.ஜ.க வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். இந்த ரோடு ஷோவில், பிரதமர் நரேந்திர மோடியுடன் வாகனத்தில், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, தென் சென்னை பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன், வடசென்னை வேட்பாளர் பால் கனகராஜ், மத்திய சென்னை வேட்பாளர் வினோஜ் பி செல்வம் ஆகியோரும் நின்று வாக்கு சேகரித்தனர்.
சென்னை தி. நகரில் ரோடு ஷோ நடத்திய பிரதமர் மோடியை, பா.ஜ.க தொண்டர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். சாலையின் இருபுறமும் பா.ஜ.க தொண்டர்கள், இந்து தெய்வங்களின் வேடம் அணிந்து பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்றனர். அதே போல, பாடல்கள் பாடியும் மேள தாளம் முழங்க ரோடு ஷோவில் ஈடுபட்ட மோடிக்கு உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.
பிரதமர் நரேந்திர மோடி, சென்னை தி. நகரில் இந்த 2 கிலோ மீட்டர் தொலைவு வாகனப் பேரணியின்போது, பா.ஜனதா வேட்பாளர்கள் பால்கனகராஜ் (வடசென்னை), வினோஜ் பி.செல்வம் (மத்திய சென்னை), தமிழிசை சவுந்தரராஜன் (தென்சென்னை), பொன்.பாலகணபதி (திருவள்ளூர்), பா.ம.க வேட்பாளர்கள் கே.பாலு (அரக்கோணம்), ஜோதி வெங்கடேசன் (காஞ்சீபுரம்), த.மா.கா. வேட்பாளர் வி.என்.வேணுகோபால் (ஸ்ரீபெரும்புதூர்) ஆகியோருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.