சென்னையில் பல்வேறு அரசுத் திட்டங்களை தொடங்கிவைத்துப் பேசிய பிரதமர் மோடி, இலங்கைத் தமிழர்கள் சமத்துவம், சமநீதி, அமைதி, கண்ணியத்துடன் வாழ மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று ஞாயிற்றுக்கிழமை கூறினார்.
தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு அரசு திட்டங்களை தொடங்கிவைக்கவும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் பிரதமர் மோடி இன்று தனி விமானம் மூலம் சென்னை வந்தார்.
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, ரூ.8,000 கொடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைத்துப் பேசினார்.
அப்போது பிரதமர் மோடி, வணக்கம் சென்னை, வணக்கம் தமிழ்நாடு எனக்கூறி உரையை தொடங்கி அவர் பேசியதாவது: “இனிய வரவேற்பு அளித்த மக்களுக்கு நன்றி. எனது இன்றைய சென்னை வருகை எனக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. சென்னை மாநகரம் உற்சாகமும் ஆற்றலும் நிரம்பியுள்ள மாநகரம். இந்த மாநகரம் அறிவும் படைப்புத் திறனும் நிரம்பியது.
இன்று சென்னையில் இருந்து நாம் முக்கியமான கட்டமைப்புத் திட்டங்களை தொடங்குகிறோம். இந்த திட்டங்கள் புதுமை உள்நாட்டு உற்பத்தியின் அடையாளங்கள். இவை தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மேலும் உதவிகரமாக இருக்கும்.
இந்த நிகழ்ச்சி ஏன் சிறப்புத் தன்மை வாய்ந்தது என்றால், நாம் 636 கி.மீ நீளம் கொண்ட கல்லணை கால்வாயைப் புதுப்பித்து நவீனமயமாக்குவதற்கான அடிக்கல்லை நாட்டியிருக்கிறோம். இதன் தாக்கம் மிகப்பெரிய அளவில் இருக்கப்போகிறது. இது 2.27 லட்சம் ஏக்கர் நிளப்பரப்பில் நீர்ப்பாசன வசதியை மேம்படுத்தும். குறிப்பாக தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் இதனால் பெரிதும் பயன்பெறும்.
சாதனை படைக்கும் அளவிலான உணவு தானிய உற்பத்தி செய்தமைக்கும் நீராதாரங்களை நல்லவிதமாக பயன்படுத்தியமைக்கும் நான் தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுதல்களை தெரிவித்துக்க்கொள்கிறேன்.
ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக இந்த கல்லணையும் அதன் கால்வாய் அமைப்புகளும் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியத்தின் உயிர்நாடியாக இருந்து வந்திருக்கின்றன. நமது பொன்னான கடந்த காலத்தின் வாழும் சான்றாக இந்த கல்லணை விளங்குகின்றது. மேலும், நமது தேசத்தின் சுயசார்பு இந்தியா இலக்குகளுக்கு கருத்தூக்கமாகவும் திகழ்கிறது. அனைவராலும் போற்றப்படும் தமிழ் பெண்பால் புலவரான, ஔவையாரின் அமுதமொழிகளை இப்போது பார்க்கலாம், “வரப்பு உயர நீர் உயரும்; நீர் உயர நெல் உயரும்; நெல் உயர குடி உயரும்; குடி உயர கோல் உயரும்; கோல் உயர கோன் உயர்வான்”
நீர் மட்டம் உயரும்போது சாகுபடி அதிகரிக்கிறது. மக்கள் வளம் பெறுகிவார்கள். நாடும் நளம் பெறும். ஒவ்வொரு சொட்டு நீரையும் நாம் நன்றாக பாதுகாக்க வேண்டும்; பராமரிக்க வேண்டும்; சேமிக்க வேண்டும். இது இந்த நாட்டின் பிரச்னை மட்டுமல்ல. இது உலக அளவிலான பிரச்னை என்பதால் நாம் நீராதாரங்களையும் சேமிக்க வேண்டும். நீரையும் நாம் பாதுகாத்து பராமரிக்க வேண்டும்.
வண்ணாரப்பேட்டையில் இருந்து விம்கோ நகர் வரை செல்லும் 9.05 கி.மீ நீளமுள்ள சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்டத்தின் விரிவாக்கத்தை நாம் துவக்கியிருக்கிறோம் என்பது அனைவருக்கும் மகிழ்ச்சியை அளிக்கும். உலகளாவிய பெரும் தொற்றையும் தாண்டி இந்த திட்டம் குறித்த நேரத்தில் நிறைவு செய்யப்பட்டிருக்கிறது. சிவில் கட்டுமானப் பணிகளை இந்திய நிறுவனங்களே மேற்கொண்டார்கள். உள்ளூரிலேயே ரயில் பெட்டிகள் தயாரித்திருப்பது சுயசார்பு இந்தியா என்ற இலக்கிற்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
சென்னை மெட்ரோ விரைவாக விரிவாக்கம் அடைந்து வருகிறது. இதன் வலைப்பின்னல், 54 கி.மீ என்ற அளவி இருக்கிறது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் 119 கி.மீ நீளமுள்ள மெட்ரோ திட்டத்தின் 2ம் கட்ட பணிகளுக்காக 63,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஒரே நேரத்தில் ஒரு நகருக்கு அனுமதிக்கப்படும் மாபெரும் திட்டங்களில் இது ஒன்று. நகர்புற போக்குவரத்திற்கான குவி மையம் இங்கிருக்கும் மக்களுக்கு சுலபமாக்கும்.
மேம்பட்ட இணைப்புகள் சௌகரியத்தை கொண்டு தருவதோடு வர்த்தகத்துக்கும் உதவுகிறது. தங்க நாற்கர இணைப்பின் சென்னை கடற்கரை - எண்ணூர் - அத்திப்பட்டு மார்க்கம் அதிக பயண நெரிசல் மிக்கதாகும். சென்னை எண்ணூர் துறைமுகத்துக்கும் காமராஜர் துறைமுகத்துக்கும் இடையே சரக்கு போக்குவரத்தை விரைவுப்படுத்துவதை உறுதி செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. இதற்கு சென்னை கடற்கரைக்கும் அத்திப்பட்டுக்கும் இடையிலான 22.1 கி.மீ நீள 4வது வழித்தடம் பேருதவியாக இருக்கும்.
விழுப்புரம் - தஞ்சாவூர் - திருவாரூர் ரயில் தடத்தை மின் மயமாக்கியிருப்பது டெல்டா மாவட்டங்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும். இந்த 228 கி.மீ நீளமுள்ள ரயில்தடத்தின் மிகப்பெரும் பயன்களில் ஒன்று. உணவு தானியங்களின் விரைவான போக்குவரத்து ஆகும்.
2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாளிலே நடந்த ஒரு துர்பாக்கியமான சம்பவத்தை நம்மால் மறந்துவிட முடியாது. அதில் உயிர்த்தியாகம் செய்த படைவீரர்களுக்கு நாம் அஞ்சலி செலுத்துவோம். அவர்களுடைய சாகத்தின் வாயிலாக நாம் கருத்தூக்கம் பெறுவோம். உத்வேகம் அடைவோம்.
உலகின் மிகத் தொன்மையான மொழியான தமிழ் மொழியில் மகாகவி சுப்ரமணி பாரதியார் எழுதி இருக்கும் வரிகள் இதோ. “ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம் ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம் நடையும் பரப்பும் உணர் வண்டிகள் செய்வோம். ஞாலம் நடுங்க வரும் கப்பல்கள் செய்வோம்”
ஆயுதங்களையும் காகிதத்தையும் நாம் தயாரிப்போம் தொழிற்சாலைகளையும் பள்ளிக்கூடங்களையும் நாம் உருவாக்குவோம். அசையக் கூடிய பறக்ககூடிய வாகனங்களையும் நாம் தயார் செய்வோம். உலகையே உலுக்கக்கூடிய கப்பல்களை நாம் தயாரிப்போம் என்பதே இந்த பாடலின் பொருள்.
இந்த தொலைநோக்கினால் உத்வேகம் அடைந்து இந்தியா பாதுகாப்புத் துறையில் தற்சார்பு அடைய பிரம்மாண்டமான முயற்சியை மெற்கொண்டு இருக்கிறது.
2 பாதுகாப்புத்துறை தொழில் பெருந்தடங்களில் ஒன்று தமிழ்நாட்டில் இருக்கிறது. இந்த தொழில் பெருந்தடங்களுக்கு ஏற்கெனவே 8,100 கோடி ரூபாய் பெருமானமுள்ள முதலீடுகள் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. நமது எல்லைப் புறங்களைப் பாதுகாப்பதற்கு மேலும் ஒரு வீரனை நாட்டிற்கு அர்ப்பணிப்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன். உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு தயார் செய்யப்பட்ட பிரதான பிரதான போர் ஊர்தியான அர்ஜுன் மார்க் 1 ஏ-வை நான் ஒப்படைப்பதில் நான் பெருமை அடைகிறேன். மேலும், இந்த ஊர்தியில் பயன்படுத்தப்படும் வெடிபொருள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது.
தமிழ்நாடு ஏற்கெனவே இந்தியாவின் முன்னணி உற்பத்தி மையமாக இருந்து வருகிறது. தற்போது தமிழ்நாடு பீரங்கி உற்பத்தி மையமாக இருந்து வருவதை நான் காண்கிறேன்.
இங்கே தயாரிக்கப்படும் ராணுவ டாங்கிகள் தமிழ்நாட்டின் தயாரிப்புகள் மேட் இன் தமிழ்நாடு என்ற இந்த டாங்கிகள் வடக்கிலேயே நமது எல்லைப் புறங்களை பாதுகாப்பதில் பெரும் உதவிக்கரம் நீட்டும்.
இது நமது ஒற்றுமையை நமது தேசத்தின்மக்களின் ஒற்றுமையை எடுத்துரைக்கிறது. ராணுவத்தில் தற்சார்பு நிலையை ஏற்படுத்துவதில் நாம் பெரும் முனைப்பை மேற்கொண்டிருக்கிறோம். ராணுவம் மேலும் வலுவனாதாகவும் சக்தி படைத்ததாகவும் வல்லமை உடையதாகவும் ஆக்கிட நமது தொடர் முயற்சிகள் மேலும் தொடர்ந்து வருகின்றன. இந்திய ராணுவத்தின் அபாரமான சக்தி அது அமைதியை விரும்பும் நோக்கத்துடன் இருந்தாலும் நமது நாட்டின் எல்லைப் புறங்களையும் இறையாண்மையையும் பாதுகாப்பதில் பேருதவியாக இருக்கிறது.
சென்னை ஐஐடியின் டிஸ்கவரி வளாகம் 2 லட்சம் சதுர அடி பரப்பளவிலான உலகத்தர ஆராய்ச்சி மையம் வசதிகளை தன்னகத்தே கொண்டிருக்கும். சென்னை ஐஐடியின் டிஸ்கவரி வளாகம் கண்டுபிடிப்புகளின் முதன்மை மையமாக திகழும் என்பது உறுதி. இந்தியா முழுவதும் இருந்து சிறந்த அறிஞர்களை இம்மையம் ஈர்க்கும்.
ஒன்று மட்டும் உறுதி. உலகமே இந்தியாவை எதிர்பார்ப்போடும் நேர்மறைச் சிந்தனையோடும் பார்க்கிறது. இது இந்தியாவின் தசாப்தம். 130 கோடி இந்தியர்களின் உழைப்பும் வியர்வையுமே இதற்கு காரணம். பெருக்கெடுத்து வரும் மக்களின் உத்வேகத்தையும் புத்தாக்க சிந்தனைகளையும் ஊக்குவிக்க அனைத்து உதவிகளையும் செய்வதில் இந்திய அரசு உறுதியாக இருக்கிறது.
சீர்திருத்தங்களில் உறுதியோடு இருக்கும் அரசின் நிலைப்பாட்டை இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை தெளிவாக காட்டுகிறது. இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் இந்தியாவின் கடலோரப் பகுதிகளின் வளர்ச்சிக்கு அளிக்கப்பட்டிருக்கும் சிறப்பான முக்கியத்துவம் உங்களுக்கு மகிழ்ச்சியை அளித்திருக்கும்.
இந்தியாவின் மீனவர்கள் குறித்து நம் தேசம் பெருமை கொள்கிறது. கருணை மற்றும் விடாமுயற்சியின் சின்னமாக நம் மீனவர்கள் திகழ்கிறார்கள். அவர்களுக்கு கூடுதலாக கடன்கள் வழங்க நிதிநிலை அறிக்கையில் வழி முறைகளை வகுத்துள்ளோம். மீன்பிடி தொழிலுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
சென்னை உள்ளிட்ட 5 இடங்களில் நவீன் மீன்பிடி துறைமுகங்கள் அமைக்கப்படும். கடற்பாசி வளர்ப்பு தொழிலுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. நமது கடலோர மக்களின் வாழ்க்கையை இந்த தொழில் மேம்படுத்தும். கடற்பாசி வளர்ப்புக்கென ஒரு புதிய பன்னோக்கு கடற்பாசி பூங்கா தமிழ்நாட்டில் அமைக்கப்படும்.
இந்தியா சமூகம் மற்றும் பொது உள்கட்டமைப்புகளை அதிவிரைவாக மேம்படுத்தி வருகிறது. இணைய வசதிகளும் பெரிய அளவில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இன்று உலக அளவில் இந்தியாவில்தான் மிகப்பெரிய அளவில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
தற்போது நம் கிராமங்கள் அனைத்திற்கும் மின்சார வசதியை அளிக்க ஒரு புதிய இயக்கத்தை நாம் துவக்கியுள்ளோம். அதே போல, உலகின் மாபெரும் சுகாதாரத் திட்டம், இந்தியாவில்தான் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவின் புதிய வளர்ச்சி இளைஞர்களுக்கு எண்ணற்ற புதிய வாய்ப்புகளை கொண்டு சேர்க்கும்.
தமிழ்நாட்டின் கலாச்சாரத்தை பாதுகாத்து கொண்டாடும் திசையில் பணியாற்றுவது என்பது கௌரவம் அளிக்கும் ஒன்று. இன்று தமிழ்நாட்டின் தேவேந்திர குல வேளாளர் சகோதர சகோதரிகளுக்கு நான் ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறேன். தங்களை தேவேந்திர குல வேளாளர்கள் அழைக்க வேண்டும் என்று அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டிருக்கிறது. அவர்கள் இனி அவர்களுடைய பாரம்பரிய பெயரால் அழைக்கப்படுவார்கள். அரசியலமைப்புச் சட்ட அட்டவனையில் பட்டியலிடப்பட்டிருக்கும் 6- 7 பெயர்களால் இனி அவர்கள் அழைக்கப்பட மாட்டார்கள்.
அவர்களின் பெயர்களை தேவேந்திர குல வேளாளர்கள் என்று அரசியல் சாசன அட்டவணையில் பெயர்திருத்தம் செய்வதற்கான வரைவு அரசாணைக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியிருக்கிறது.
அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின் தொடக்கத்திலேயே இது அவை முன் வைக்கப்படும். இந்த கோரிக்கை தொடர்பாக விரிவான ஆய்வை மேற்கொண்டமைக்கு நான் தமிழ்நாடு அரசுக்கு என் சிறப்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தேவேந்திர குல வேளாளர்கள் கோரிக்கையை தமிழ்நாடு அரசு நீண்ட காலமாகவே ஆதரித்து வந்திருக்கிறார்கள். டெல்லியில் 2015ம் ஆண்டில் தேவேந்திரர்களின் பிரதிநிதிகளுடனான எனது சந்திப்பை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. அவர்களின் வருத்தத்தை என்னால் காண முடிந்தது. காலனி அரசு அவர்களின் பெருமிதத்தையும் கண்ணியத்தையும் பறித்துக்கொண்டது. பல தசாப்தங்களாக எதுவுமே நடக்கவில்லை. தாங்கள் அரசுகளிடம் மன்றாடினாலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று அவர்கள் என்னிடத்தில் கூறினார்கள். நான் அவர்களிடம் ஒரு விஷயம் மட்டுமே கூறினேன். அவர்களின் பெயரான தேவேந்திர என்பது என்னுடைய நரேந்திரவோடு இசைந்திருக்கிறது என்று குறிப்பிட்டேன்.
டெல்லியில் அவர்களில் ஒருவனாக அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டவனாக நான் இருக்கிறேன் என்று நான் அவர்களிம் பகிர்ந்தேன்.
இந்த தீர்மானம் வெறும் பெயர் மாற்றம் மட்டுமல்ல. இது நீதி, கண்ணியம், வாய்ப்பு பற்றியது. தேவேந்திர சமூக கலாச்சாரத்திடம் இருந்து நாம் கற்க வேண்டியது நிறைய இருக்கிறது. அவர்களின் நல்லிணக்கம், நேசம், சகோதரத்துவம் ஆகியவற்றை கொண்டாடுபவர்கள். அவர்களுடையது நாகரிகம் சார்ந்த இயக்கம். ஆத்ம கௌரவம் என்று நம்பப்படுகிற தங்களுடைய சுய நம்பிக்கையையும் சுயகௌரவத்தையும் இது வெளிப்படுத்துகிறது.
இலங்கை வாழ் நமது தமிழ் சகோதர, சகோதரிகளின் நலன்கள் மீதும் அபிலாஷைகள் மீது நமது அரசு எப்போதும் அக்கறை காட்டி வந்திருக்கிறது. யாழ்ப்பாணத்திற்குச் சென்ற ஒரே இந்தியப் பிரதமர் என்ற கௌரம் எனக்கு உண்டு. வளர்ச்சிப் பணிகள் வாயிலாக நாங்கள் இலங்கை வாழ் தமிழ் சமூகத்தின் நலன்களை உறுதி செய்து வருகிறோம்.
கடந்த காலத்தில் அளிக்கப்பட்ட ஆதாரங்களைவிட மிக அதிக அளவில் இன்று நமது அரசாங்கம் தமிழர்களுக்கு அளித்து வருகிறது. திட்டங்களின் விபரம் வடகிழக்கு இலங்கையில் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு 50,000 வீடுகள், தோட்டப்பகுதிகளில் 4,000 வீடுகள்; சுகாதார விஷயத்தில் ஒரு இலவச அவசரகால ஊர்தி சேவைக்கு நிதி வழங்கியிருக்கிறோம். இந்த சேவை தமிழ் சமுதாயத்தால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. டிகோலாவில் ஒரு மருத்துவமனை கட்டப்பட்டு இருக்கிறது.
இணைப்பினை ஊக்கப்படுத்த யாழ்ப்பாணத்துக்கும் மன்னாருக்கும் இடையேயான ரயில் தடம் மீண்டும் நிறுவப்பட்டு வருகிறது. சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையேயான விமானப்போக்குவரத்து ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. விரைவிலேயே திறக்கப்பட உள்ள யாழ்பாண கலாச்சார மையத்தை இந்தியா கட்டிக்கொடுத்திருக்கிறது என்பதில் நான் உவகை கொள்கிறேன்.
இலங்கை தலைவர்களோடு தமிழர்கள் உரிமைகள் குறித்து நாங்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்துவந்திருக்கிறோம். சமத்துவம், நீதி, அமைதி, கண்ணியம் ஆகியவற்றோடு வாழ்வதில் உறுதிசெய்வதை நாங்கள் கடமைப் பற்றுக்கொண்டிருக்கிறோம்.
நம் மீனவர்கள் சந்தித்துவரும் பிரச்னை நெடுங்காலமாக இருந்து வருகிறது. பிரச்னையின் வரலாறுக்குள் நான் செல்ல விரும்பவில்லை. ஆனால், நான் நம் மீனவர்களின் நியாமான உரிமைகளை எனது அரசு எப்போதும் பாதுகாக்கும் என்று நான் உறுதியளிக்கிறேன். இலங்கை அரசால் மீனவர்கள் எப்போது கைது செய்யப்பட்டாலும் அவர்கள் விரைவாக விடுதலை செய்யப்படுவதை உறுதிசெய்துள்ளோம்.
எங்கள் ஆட்சிக் காலத்தில் 1,600க்கும் மேற்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். தற்போது இந்திய மீனவர்கள் யாரும் இலங்கை சிறைகளில் இல்லை. அதே போல, 313 படகுகள் விடுவிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள படகுகளையும் விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மக்களை மையமாகக் கொண்ட நம் பார்வையால் கொரோனாவுக்கு எதிரான உலகின் போரை இந்தியா மேலும் வலுப்படுத்தி வருகிறது. இந்தியாவில் உருவாக்கப்பட்ட தடுப்பூசிகள், இந்த பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் உதவி வருகின்றன. உலகம் நம்மிடத்திலே இதைத்தான் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. இன்று துவக்கப்பட்டிருக்கும் வளர்ச்சிப் பணிகளின் பொருட்டு தமிழ்நாட்டு மக்களுக்கு நான் மீண்டும் ஒருமுறை என் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி வணக்கம்.” என்று கூறினார்.
முன்னதாக, பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு வந்தார். விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அடையாறு ஐஎன்எஸ் புறப்பட்டார்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டுச் சென்றார்.
விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சி துவங்கியதும், பிரதமர் மோடியை வரவேற்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்புரையாற்றினார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை உரையாற்றினார்.
இதையடுத்து பிரதமர் மோடி ரூ.8,000 கோடி மதிப்பிலான அரசுத் திட்டங்களைத் தொடங்கி வைத்தார். அப்போது, சென்னை ஆவடியில் உள்ள மத்திய அரசின் கன ஊர்தி தயாரிப்பு நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட அர்ஜுன் மார்க் 1 ஏ பீரங்கி வாகனத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
Caught a fleeting view of an interesting test match in Chennai. ???? ???????? ???????????????????????????? pic.twitter.com/3fqWCgywhk
— Narendra Modi (@narendramodi) February 14, 2021
பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் செல்லும்போது சென்னை சேப்பாக்கம் விளையாட்டு மைதானம் வழியாக சென்றபோது இந்தியா - இங்கிலாந்து அணிகள் விளையாடும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை விமானத்தில் இருந்தபடி படம் பிடித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.