ஆஸ்கார் விருது பெற்ற 'தி எலிபாண்ட் விஸ்பிரர்ஸ்' குறும்பட ஆவணப்படத்தின் கதாநாயகர்களான மாவுட் பொம்மன் மற்றும் அவரது மனைவி பெல்லி ஆகியோரை கவுரவிக்கும் வகையில், நீலகிரியில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகைத்தருகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற ஏப்ரல் 9-ம் தேதி வருகை தரும் போது, அவரின் பாதுகாப்பிற்காக மசினகுடியில் இருந்து தெப்பக்காடு வரை சுமார் 2,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகாவின் எல்லையில் அமைந்துள்ள பகுதியில் 7 கிலோமீட்டருக்கு, மாவோயிஸ்ட் இயக்கம் ஆக்கிரமித்துள்ளது என்று கூறப்படுகிறது.
எனவே, சத்தியமங்கலத்தைச் சேர்ந்த சிறப்பு அதிரடிப் படை வீரர்கள், ஏப்ரல் 7ஆம் தேதி காலை முதல் தங்களது பாதுகாப்பு முறைகளை தொடங்கிடுவார்கள். அப்போது முதல் பிரதமர் செல்லும் வரை, காப்புக் காட்டிற்குள் யாரையும் அனுமதிக்க மாட்டார்கள்.
பயணத்திட்டத்தின்படி, மைசூரு விமான நிலையத்திலிருந்து IAF ஹெலிகாப்டர் மூலம் மோடி நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினகுடி நகரத்தை காலை 9.35 மணியளவில் வருகைதருவார். அங்கிருந்து சாலை வழியாக தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு செல்வார்.
ஆர் சுதாகர், இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ் (மேற்கு மண்டலம்), கோயம்புத்தூர்; சி விஜயகுமார், கோயம்புத்தூர் ரேஞ்ச் காவல் துணைக் கண்காணிப்பாளர்; மற்றும் ஏழு காவல் கண்காணிப்பாளர்கள், மோடியின் வருகைக்காக நீட்டிக்கப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வையிடுவார்கள்.
பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக தெப்பக்காடு, மசினகுடி மற்றும் உதகமண்டலம் நகரைச் சுற்றியுள்ள ஓய்வு விடுதிகள் மற்றும் பிற தங்கும் வசதிகளில் போலீஸார் தீவிர சோதனை நடத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil