Madurai | Pm Modi: பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” யாத்திரையின் இறுதி நிகழ்வு வரும் 27-ம் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள மாதப்பூரில் நடைபெறுகிறது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இந்த விழாவை முடித்து அதன் பின்னர் ஹெலிகாப்டரில் இருந்து மதுரை செல்கிறார்.
இதனைத்தொடர்ந்து, மதுரையில் உள்ள டி.வி.எஸ் லட்சுமி பள்ளியில் ‘டிஜிட்டல் மொபிலிட்டி இனிஷியேட்டிவ் ஃபார் ஆட்டோமோட்டிவ் எம்.எஸ்.எம்.இ.’ என்ற தலைப்பில் சிறு, குறு, நடுத்தர வர்த்தக தொழில் அதிபர்கள் கலந்து கொள்ளும் டிஜிட்டல் வர்த்தக மாநாட்டில் மோடி பங்கேற்க உள்ளார்.
மதுரையில் போக்குவரத்து மாற்றம்
இந்நிலையில், பிரதமரின் வருகையையொட்டி மதுரையில் பிப்ரவரி 27 மற்றும் 28 ஆகிய இரண்டு நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்து மாவட்ட காவல்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மதுரை வழியாக வெளியூர் செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் மாற்று வழித்தடத்தில் இயங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
திருச்சியில் இருந்து மதுரை வரும் வாகனங்கள் ஒத்தக்கடை வழியாக மாட்டுத்தாவணி செல்லலாம்.
திருச்சியில் இருந்து தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் ஒத்தக்கடை வழியாக செல்லும்.
சிவகங்கையில் இருந்து மதுரை, திருச்சி செல்லும் வாகனங்கள் பூவந்தி வழியாக அந்தந்த மாவட்டங்களுக்கு சென்றடையும்.
ராமநாதபுரத்தில் இருந்து மதுரை, திருச்சி செல்லும் வாகனங்கள் சாக்குடி பாலம் வழியாக சென்றடையும்.
தூத்துக்குடியில் இருந்து மதுரை, திருச்சி செல்லும் வாகனங்கள் ஏ.முக்குளம் சந்திப்பு வழியாக சென்றடையும்.
பிப்ரவரி 27 ஆம் தேதி இரவு மதுரையில் தங்கும் மோடி 28 ஆம் தேதி காலை தூத்துக்குடி செல்கிறார். பிரதமர் மோடி வருகையையொட்டி பாதுகாப்பு பணிக்காக சுமார் 6000 முதல் 10000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடதக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“