'சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர்' - பிரதமர் மோடி அறிவிப்பு

PM Modi Rally in Kancheepuram, Chennai Today Live Updates: தேமுதிக இன்னும் ஒருமணி நேரத்தில் முடிவை அறிவிக்கிறது

PM Modi in Chennai Today at Kancheepuram: நாடாளுமன்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருகிறார். வண்டலூர் அருகேயுள்ள கிளாம்பாக்கத்தில் இந்த பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. மேலும் பல்வேறு திட்டங்களையும் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

சென்னை விமான நிலையத்துக்கு மாலை 3.30 மணிக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதிக்கு வருகிறார். அங்கு ஹெலிகாப்டர் இறங்குவதற்காக பிரத்யேக தளம் அமைக்கப்பட்டுள்ளது. சரியாக மாலை 4 மணிக்கு மேடைக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகிறார்.

முதலில், அரசு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அரசின் பல்வேறு துறைகள் சார்பில் முடிக்கப்பட்ட திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார். புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.

அதனைத் தொடர்ந்து, அருகில் உள்ள மேடையில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்புரை ஆற்றுகிறார். மாலை 5.30 மணிக்கு தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்து ஹெலிகாப்டரில் சென்னை விமான நிலையம் சென்று, அங்கிருந்து தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

05:45 PM – தொடர்ந்து பேசிய மோடி, “காங்கிரஸுடன் திமுக சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்துள்ளது. என்னைத் தடுக்க வேண்டும் என்பதற்காகத் தான் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. தமிழக வளர்ச்சிக்காக மத்திய அரசு தொடர்ந்து பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. தமிழர்கள் எங்கிருந்தாலும் பிரச்னை என்றால் முதலில் நடவடிக்கை எடுப்பது மத்திய பாஜக அரசுதான். யாழ்ப்பாணத்திற்கு சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை நான் பெற்றுள்ளேன். இந்தியாவை பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி முனையமாக்குவது எங்கள் நோக்கம்; தமிழகத்தில் அமையும் பாதுகாப்பு தொழில்பூங்கா தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தும். எதிர்க்கட்சிகள் சுயநலத்திற்காக வலிமையான நாட்டையும், ராணுவத்தையும் விரும்பவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் முடிவுகளை மக்கள்தான் எடுக்கிறார்கள். காங்கிரசால் மாநில நலன்களை பூர்த்தி செய்யமுடியாது; ஏனென்றால் அவர்களுக்கு குடும்பமே முக்கியம். நாளையும் நமதே, நாற்பதும் நமதே” என்று உரையாற்றினார்.

05:25 PM – பின்னர் பேசிய பிரதமர் மோடி, “ஜெயலலிதா வகுத்த முன்னேற்றப் பாதையில் நாம் சென்றுக் கொண்டிருக்கிறோம். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்படுகிறது. அதேபோல், தமிழகத்தில் விமான நிலைய அறிவிப்புகள் இனி தமிழில் தான் இருக்கும்” என்றார்.

04:55 PM – துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பொதுக் கூட்டத்தில் பேசி வருகிறார். “எதிர்க்கட்சியில் யார் பிரதமர் வேட்பாளர் என்று சொல்ல முடியுமா? நாங்கள் சொல்கிறோம், மோடி தான் அடுத்த பிரதமராக வர வேண்டும் என்று” என தொடர்ந்து பேசி வருகிறார்.

04:18 PM – எண்ணூர் எல்என்ஜி முனையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி. அதேபோல், மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதையை நாட்டுக்கு அர்ப்பணித்தார். மேலும், விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு – தஞ்சை வழிதடத்திற்கான நான்கு வழிச்சாலைக்கு மோடி அடிக்கல் நாட்டினார்.

04:05 PM – பியூஷ் கோயல் உடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக துணைப் பொதுச் செயலாளர் சுதீஷ், “நேற்று மும்பையில் இருந்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் என்னைத் தொடர்பு கொண்டு பேசினார். அவர் அழைத்ததன் பேரில் தான், இந்த சந்திப்பு நடைபெற்றது. தொகுதிப் பங்கீடு, எந்தெந்த தொகுதிகள் உள்ளிட்ட பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. பிரதமர் மோடி வருவதால், நேரமின்மை காரணமாக முழுமையாக பேச முடியவில்லை. நாளையோ அல்லது நாளை மறுநாளோ பேச்சுவார்த்தை முடிந்துவிடும்” என்றார்.

03:45 PM – சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் மோடி.

03:40 PM – சென்னை நட்சத்திர ஹோட்டலில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் சுதீஷ் பேசி வரும் நிலையில், அனகை முருகேசன் உள்ளிட்ட தேமுதிக நிர்வாகிகள், திமுக பொருளாளர் துரைமுருகனை அவரது வீட்டில் நேரில் சந்தித்துப் பேசினர். இதற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன், ‘அதிமுக கூட்டணியில் இருந்து விலகி உங்களுடன் சேர்ந்துவிடுகிறோம் என சுதீஷ் தொலைபேசியில் பேசினார். அவரிடம் சீட் இல்லை என்று சொல்லிவிட்டேன். பிறகு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் உள்ளிட்ட நிர்வாகிகளும் அதே கோரிக்கையோடு வந்தார்கள். அவர்களிடமும் சீட் இல்லை என்றும் சொல்லிவிட்டேன். மற்றபடி, எங்கள் கட்சியில் இணைவதற்காக அவர்கள் வரவில்லை. தேமுதிகவை கூட்டணியில் சேர்ப்பது குறித்து ஸ்டாலின் தான் முடிவு செய்ய வேண்டும். தொடர்ந்து தேமுதிக முயற்சி செய்து வந்தால், எங்கள் கூட்டணியில் சேர்ப்பது குறித்து பரிசீலிப்போம்” என்றார்.

02:50 PM – அதிமுகவுடன், தேமுதிக சங்கமிக்கப் போவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது என்று சொல்லலாம். சில நிமிடங்களில் இதற்கான அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

02:25 PM – சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கியுள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, சுதீஷ் ஆகியோர் சந்தித்துப் பேசி வருகின்றனர்.

01:34 PM – அதிமுக – தேமுதிக கூட்டணி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், அதிமுக – பாஜக பொதுக் கூட்ட மேடையில் விஜயகாந்தின் படமும் வைக்கப்பட்டுள்ளது.

01:10 PM – எஸ்.வி.சேகர் ட்வீட்

12:35 PM – அதிமுக – பாஜக கூட்டணியில் இணைவதா இல்லையா என்பது குறித்து, தேமுதிக இன்னும் ஒருமணி நேரத்தில் தனது முடிவை அறிவிக்கக் கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.


12:10 PM –  அதிமுக – பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை வந்தடைந்தார்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close