மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி, 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக 400 இடங்களை வெற்றி பெற இலக்காகக் கொண்டுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் இளைய சகோதரரும், பிரதான் மந்திரி ஜன் கல்யாண்கரி யோஜ்னா அமைப்பின் தேசிய தலைவருமான பிரகலாத் மோடி அந்த அமைப்பின் கூட்டத்தில் கலந்துகொண்டார்.
மதுரையில் நடந்த அந்த அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்ற பிரகலாத் மோடி செய்தியாளர்களிடம் கூறியதாவது: நடிகர் ரஜினிக்கு என் தரப்பிலும், பிரதமர் தரப்பிலும் பிறந்தநாள் வாழ்த்துக்கள். சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்து பிரதமராகியுள்ளார் மோடி. அதனால் தான் ஏழ்மையான மக்களுடன் இணைந்து பணிபுரிய வாய்ப்பு கிட்டியுள்ளது. ஏழைகளின் வாழ்க்கையை உயர்த்த அல்லும், பகலும் மோடி பாடுபடுகிறார். பிரதமரின் திட்டங்களை மக்களிடமிருந்து துாரப்படுத்த எதிர்க்கட்சிகள் நினைக்கின்றன. பிரதமரின் திட்டங்களை ஏழைகளிடம் கொண்டு சேர்க்கும் எங்கள் அமைப்பில் 22 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். மேலும் பல உறுப்பினர்களை சேர்க்கவுள்ளோம்.
ஜன்கல்யாண்கரி யோஜ்னா திட்டத்தை அனைவருக்கும் கொண்டு போய் சேர்ப்போம். அத்துடன் 40 பிரதான் மந்திரி யோஜ்னா திட்டங்களையும் மக்களிடம் கொண்டு சேர்ப்போம். விவசாயிகளுக்காக என்றுமே பாடுபடுபவர் மோடி. விவசாயிகளுக்காக நிறைய திட்டங்களை மோடி கொண்டு வந்துள்ளார். அது கீழ்மட்டம் வரை செல்வதில்லை. ஒரே நாளில் அடித்தட்டு மக்களிடம் இத்திட்டங்களை கொண்டுபோக முடியாது. 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக 400 இடங்களில் வெற்றி பெற இலக்காகக் கொண்டுள்ளது” என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil