'என் மண் என் மக்கள்' யாத்திரை நிறைவுவிழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “கொள்ளை அடிக்கவே இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டிருக்கிறது என்றும் அந்த கொள்ளையடிகிற கடையைப் பூட வேண்டும்” என்று கடுமையாகப் பேசினார்.
கேரளம், தமிழ்நாடு, மகாராஷ்டிரா ஆகிய 3 மாநிலங்களில் பிப்ரவரி 27, 28 ஆகிய 2 நாட்கள் பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த சுற்றுப் பயணத்தில் பிரதமர் மோடி முதலில் கேரளா சென்று நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். பின்னர், திருவனந்தபுரத்தில் இருந்து கோவை சூலூர் விமானப்படைத் தளத்துக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெறும் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்துக்கு சென்றார். அங்கே, பிரதமர் நரேந்திர மோடி, திறந்த வாகனத்தில் எல்.முருகன் மற்றும் அண்ணாமலையுடன் பொதுக்கூட்ட மேடைக்கு சென்றார். பிரதமர் நரேந்திர மோடி மேடையில் 65 கிலோ எடையுள்ள விரலி மஞ்சள் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டார்.
பல்லடத்தில் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “சரித்திரத்தில் நாம் இடம் பெற்றுள்ளோம்; இத்தனை ஆண்டு காலம் எதற்காக காத்திருக்கிறோம் அதை கண்டிருக்கிறோம். அடுத்த 60 நாட்கள் முழு அர்ப்பணிப்போடு உழைக்க வேண்டும். தமிழ்நாட்டில் இருந்து 39 எம்.பிக்களை அனுப்பி வைக்கும் வரை நமக்கு ஓய்வில்லை. தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு இருப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி தான் காரணம்; 2019-ல் செய்த தவறை தமிழ்நாடு மீண்டும் செய்ய போவதில்லை. வரும் மக்களவைத் தேர்தலில் 450 உறுப்பினர்களை பெற்று மோடி மீண்டும் பிரதமாரவார்” என்று பேசினார்.
இவரைத் தொடர்ந்து, ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “மத்தியிலே இண்டியா கூட்டணி உருவாகிக் கொண்டிருக்கிறது. டெல்லியில் எல்லாம் இண்டியா கூட்டணி ஜெயிக்காது என்று தெரிந்துவிட்டது. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் எப்படியாவது கொள்ளையடிக்க வேண்டும் என்பதற்காக அந்த கூட்டணி முயற்சி செய்து கொண்டிருக்கிறது. அதனால் தான், அந்த கொள்ளையடிக்கின்ற கடையை பூட்ட வேண்டும் என்று நாம் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். 2024-ம் ஆண்டில் நாம் அந்த கடையை பூட்ட வேண்டும் என்று நாம் தமிழ்நாட்டில் நடத்திய என் மண் என் மக்கள் யாத்திரையின் மூலமாக அந்த பூட்டை நாம் உருவாக்கி இருக்கிறோம் என்று இந்த கூட்டத்தின் மூலமாக நான் சொல்லிக் கொள்கிறேன். அதுமட்டுமல்ல, தமிழகத்திலே அவர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தமிழக மக்கள் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நாம் அத்தனை பேரும், பாரதிய ஜனதா கட்சியில் உள்ள அத்தனை பேரும் மூன்றாவது முறையாக மீண்டும் ஒரு நல்லதொரு ஆட்சி வரவேண்டும் என்று மக்களிடத்தில் சொல்ல வேண்டும், மக்களிடத்தில் செல்ல வேண்டும், வீடு வீடாக செல்ல வேண்டும், அவர்களுடைய ஆசிர்வாதங்களை வாழ்த்துக்களை பெற வேண்டும் .ஓட்டுகளை பெற வேண்டும், மீண்டும் பா.ஜ.க ஆட்சிக்கு வரவேண்டும். இந்த லட்சக்கணக்கான மக்கள் கூட்டத்தை பார்த்து நான் பெருமையாக சொல்லிக் கொள்கிறேன். இந்த மோடியின் உத்தரவாதம் இருந்து கொண்டிருக்கிறது. உங்களுடைய பாதுகாப்புக்கான உத்தரவாதம் இருந்து கொண்டிருக்கிறது. நீங்கள் அத்தனை பேரும் மக்களிடத்திலே சென்று அவருடைய வாழ்த்துகளைப் பெற வேண்டும்” என்று பேசினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.