பிரதமர் மோடி ராமேஸ்வரம் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாம்பன் பாலத்தில் கருப்பு பலூன் பறக்க விடும் போராட்டத்தை காங்கிரஸ் கட்சியின் மீனவர் அணியினைச் சேர்ந்தவர்கள் இன்று (ஜன.21) முன்னெடுத்தனர். இது தொடர்பாக அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைவர் பாம்பன் எஸ்.ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ தெரிவிக்கையில், "2022-ம் ஆண்டில் 36 தமிழக படகுகள், 264 மீனவர்களையும் , 2023-ம் ஆண்டில் 35 படகுகளும், 240 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர். கடந்த 2 வாரத்தில் தமிழக மீனவர் 40 பேரை கைது செய்து இலங்கை யாழ் சிறையில் அடைத்தனர்.
2014 ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பாஜக ஆட்சிக்கு வந்த பின் தமிழக மீனவர் மீதான இலங்கை கடற்படையினரின் அடக்குமுறை அதிகரித்துள்ளது.
பிரதமர் மோடி ஆட்சி பலவீனமாக இருப்பதால் தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான இலங்கை படையினரின் தாக்குதல் தொடர்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் 300க்கும் மேற்பட்ட தமிழக படகுகளை இலங்கை கடற்படை பறிமுதல் செய்து, அதில் 140 படகுகளை இலங்கை நீதிமன்றம் தனது நாட்டுடமையாக்கி உள்ளது. நாட்டுடமையாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை உடைத்து விறகுகளாகவும், இயந்திரங்களை பழைய இரும்பு கடைகளுக்கும் யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்து வருகின்றனர்.
இலங்கை கடற்படை சிறை பிடித்த தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க வலியுறுத்தி பிரதமருக்கு பலமுறை பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தும் எந்தவித பலனும் கிடைக்கவில்லை. மீனவர் நலனில் மத்திய அரசு கவனம் செலுத்துவதே இல்லை.
தமிழக மீனவர் பிரச்னையை பிரதமர் நரேந்திர மோடி மாற்றான் தாய் மனப்போக்கில் தான் கையாள்கிறார். எனவே, பிரதமர் மோடியின் மீனவர்கள் விரோத போக்கை கண்டித்து அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைமையில் அன்னை இந்திரா காந்தி பாம்பன் சாலைப் பாலத்தில் இன்று (ஜன.21) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மோடி திரும்பச் செல்ல வலியுறுத்தி பதாகைகள் ஏந்தியும், கருப்பு பலூன்களும் பறக்க விடப்பட்டன.
காங்., முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்பி., 2-ம் கட்ட யாத்திரையை அசாம் மாநிலத்தில் மேற்கொண்டுள்ளார். அசாம் மாநிலம் லக்கிம்பூர் நகரில் அவரை வரவேற்று வைத்துள்ள பேனர்கள், போஸ்டர்களை பாஜகவினர் கிழித்து சேதப்படுத்தி, யாத்திரையில் கலந்து கொள்ள சென்ற சில வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தியதை அகில இந்திய மீனவர் காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்" என்றார்.
இப்போராட்டத்தில் தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் தலைவர் ஜோர்தான், அகில இந்திய மீனவர் காங்கிரஸ் செயலர் ரவி, துணை தலைவர் ரோவன் தல்மேதா, பொதுச் செயலர் ஜவஹர், மீனவர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் சகாயராஜ், கன்னியாகுமரி கவுன்சிலர் ஜெரோம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக, பிரதமர் மோடி 3 நாள் பயணமாக கடந்த ஜன.19-ம் தேதி தமிழ்நாடு வந்தார். அதில் 2 நாள் ஆன்மிக பயணமாக நேற்று மாலை ராமேஸ்வரம் வந்தார். இன்று காலை தனுஷ்கோடி சென்று கோதண்டராமர் கோயிலில் வழிபாடு நடத்திய பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுரைக்கு சென்று டெல்லி சென்றார். இந்தநிலையில், மோடி டெல்லிக்கு பறக்கும் அதே நேரத்தில் இன்று நண்பகல் பாம்பன் பாலத்தில் காங்கிரஸார் கருப்பு பலூன் பறக்க விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.