பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 4-ம் தேதி (திங்கள்கிழமை) மீண்டும் தமிழ்நாடு வருகிறார். ஒரே வாரத்தில் 2-வது முறையாக மோடி தமிழகம் வருகிறார். நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடக்கும்
பா.ஜ.க பொதுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். இதையொட்டி மாநகர் மற்றும் அதனை ஒட்டியுள்ள செங்கல்பட்டு மாவட்டத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் நிகழ்ச்சிகளை முடித்து மதியம் 2.45 மணிக்கு சிறப்பு விமானத்தில் சென்னை விமான நிலையம் வரும் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னையில் இருந்து 70 கி.மீ தொலைவில் உள்ள கல்பாக்கம் ஹெலிபேடுக்கு செல்கிறார்.
மதியம் 3.30 மணி முதல் 4.15 மணி வரை ஃபாஸ்ட் பிரீடர் ரியாக்டரை (FBR) நிர்மாணித்து இயக்கும் பாரதிய நவ்ஹிக்கிய வித்யுத் நிகம் (பவினி) ஏற்பாடு செய்திருக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றுகிறார்.
மாலை 5 மணிக்கு விமான நிலையத்துக்கு ஹெலிகாப்டரில் திரும்பும் அவர், அங்கிருந்து நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்துக்குச் சென்று பா.ஜ.க ஏற்பாடு செய்திருக்கும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். மாலை 6.35 மணியளவில் நிகழ்ச்சிகளை முடித்து சிறப்பு விமானம் மூலம் தெலங்கானா புறப்பட்டு செல்கிறார்.
மோடி வருகையையொட்டி பொதுக் கூட்டம் நடைபெறும் இடம், சென்னை விமான நிலையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சென்னையில் உள்ள லாட்ஜ்கள், ஹோட்டல்களில் சோதனை நடத்தப்பட்டு, முக்கிய சாலைகள் மற்றும் சந்திப்புகளில் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், பெங்களூரு உணவகத்தில் வெள்ளிக்கிழமை நடந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து நாங்கள் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளோம்.
தீவிர வாகன சோதனை நடத்தி, ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளோம். காவல்துறை உஷார் நிலையில் உள்ளது என்று கூறினார். மேலும், முக்கிய ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து முனையங்களை போலீசார் கண்காணித்து வருகின்றனர் என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“