/indian-express-tamil/media/media_files/2025/05/30/AESMaDpuoWIHInDBDUOV.jpg)
PMK conflict
கடந்த ஓராண்டாகவே பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், தலைவர் அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் நடந்த பாமக புத்தாண்டு சிறப்புப் பொதுக்குழு கூட்டத்தில், தனது மகள்வழிப் பேரன் முகுந்தனை பாமக இளைஞர் சங்கத் தலைவராக ராமதாஸ் நியமித்தார். இதற்கு அன்புமணி மேடையிலேயே எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, சமீபத்தில் கட்சித் தலைவர் பொறுப்பில் இருந்து அன்புமணியை நீக்கி, செயல் தலைவராக நியமிப்பதாக ராமதாஸ் அறிவித்தார்.
கடந்த வாரங்களில் தைலாபுரத்தில் ராமதாஸ் கூட்டிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அன்புமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் பங்கேற்கவில்லை.
நேற்று, "அன்புமணிக்கு பக்குவம், தலைமைப் பண்பு இல்லை. 35 வயதில் அவரை மத்திய அமைச்சராக்கியது நான் செய்த தவறு. கட்சிப் பிரச்சினை பற்றி பேசிய தாய் மீது பாட்டிலை வீசி எறிந்தார். வளர்த்த கடா என் மார்பில் பாய்ந்துவிட்டது" என்று ராமதாஸ் அடுக்கடுக்காகப் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்ததார்.
இந்த சூழலில் சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களுக்கான பாமக மாவட்ட செயலாளர், மாவட்ட தலைவர், ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டை மற்றும் உறுப்பினர் படிவம் வழங்கி, உறுப்பினர் சேர்க்கையை கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (மே 30) தொடங்கிவைத்தார்.
இந்தக் கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசுகையில்; கட்சிக்குள் ஏதோ சில குழப்பங்கள் எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது. அவையெல்லாம் தற்காலிகமான குழப்பங்கள். எல்லாமே சரியாகிவிடும். இன்று காலையில் ஒரு கடிதம், கட்சியின் பொருளாளர் திலகபாமாவுக்கு மாற்றாக ஓர் அறிவிப்பு வந்தது.
அடுத்த 10 நிமிடத்தில், திலகபாமா பொருளாளராக தொடருவார் என்று நான் ஒரு கடிதம் கொடுத்துவிட்டேன். காரணம் நான், பொருளாளர், பொதுச் செயலாளர் என அனைவரும் பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்டவர்கள். எனவே, பொதுக்குழு நினைத்தால்தான் எங்களை நியமிக்கவோ, நீக்கவோ முடியும். வேறு யாராலும் அவ்வாறு செய்ய முடியாது.
நான் எவ்வளவோ பதவிகள், பொறுப்புகளை எல்லாம் பார்த்துவிட்டேன். எனவே, என் மனதளவில் நான் என்னை ஒரு தலைவராகப் பார்க்கவில்லை. உங்களைப் போல நானும் ஒரு அடிமட்டத் தொண்டன்தான். உங்களுடைய தலைமைத் தொண்டனாக நான் இருக்கிறேன். நான் வகிக்கின்ற பொறுப்புகளை முடிவு செய்பவர்கள் நீங்கள்தான். வேறு யாரும் அதை முடிவு செய்ய முடியாது. மனதில் நிறைய இருக்கிறது பேச முடியவில்லை.
என்னுடைய கடிதம்தான் செல்லும். என்றைக்கு என்னை கட்சித் தலைவராக நீங்கள் தேர்வு செய்தீர்களோ, அன்றிலிருந்து மன உளைச்சல்தான். நேற்றுதான் விடுதலை கிடைத்தது. இன்று நாம் வேகமாகச் செல்லலாம். எந்தத் தடைகள் வந்தாலும் அதை உடைத்தெறிந்து நாம் முன்னேறுவோம்.
அதேவேளையில் ராமதாஸ் தொடங்கிய சமூக நீதி, சமத்துவம், ஜனநாயகத்தைக் கடைபிடித்து, பாமகவை அடுத்தக்கட்டத்துக்கு நாம் கொண்டு வருவோம். உடனடி இலக்கு நமது அமைப்பை இன்னும் பலமாக பலப்படுத்தி வருகின்ற தேர்தலில் நம் கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற வேண்டும். அடுத்தக்கட்டம் நம்முடைய ஆட்சி தமிழகத்தில் நடக்க வேண்டும்,” என்று அவர் பேசினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.