scorecardresearch

மாநகராட்சி ஊழியர்கள் மூலமாக தி.மு.க-வுக்கு உறுப்பினர் சேர்க்கை: அன்புமணி கண்டனம்

“திமுக உறுப்பினர் சேர்க்கைக்கு மாநகராட்சி ஊழியர்களா? இது அப்பட்டமான அதிகார அத்துமீறல்” – அன்புமணி ராமதாஸ்

mk stalin- anbumani ramadoss

திமுக உறுப்பினர் சேர்க்கைக்கு மாநகராட்சி பணியாளர்களை பயன்படுத்துவதா? கடலூர் மாநகராட்சி மேயர், ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இதைப்பற்றி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கூறியுள்ளதாவது:

கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆளும் திமுகவுக்கு உறுப்பினர்களை சேர்ப்பதற்காக மாநகராட்சி பணியாளர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றனர். மாநகரின் பல பகுதிகளில் வீடு, வீடாக சென்று அங்குள்ளவர்களின் வாக்காளர் அடையாள அட்டைகளின் படிகளை வாங்கிச் சென்றுள்ளனர். திமுகவுக்கு உறுப்பினர்களைச் சேர்க்கும் பணி தான் தங்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும், மக்களிடம் சேகரித்த வாக்காளர் அடையாள அட்டை படிகளை மாநகராட்சியில் ஒப்படைத்தால், அவற்றைக் கொண்டு அதில் உள்ளவர்களின் பெயர்களை திமுக உறுப்பினர்களாக சேர்த்து விடுவார்கள் என்றும் மாநகராட்சி பணியாளர்கள் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது அப்பட்டமான அதிகார அத்துமீறல் ஆகும்.

கடலூர் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி மற்றும் நலத்திட்ட பணிகள் ஏராளமாக உள்ளன. பல்வேறு கோரிக்கைகளுக்காக மனு கொடுத்த மக்கள், அதன் மீதான தொடர் நடவடிக்கைகளுக்காக அவர்கள் மாநகராட்சி அலுவலகத்திற்கு தினமும் அலைகின்றனர். அவர்களுக்கு சேவை வழங்காத கடலூர் மாநகராட்சி, அதன் பணியாளர்களை அனுப்பி திமுகவுக்கு உறுப்பினர்களை சேர்த்துக் கொண்டிருக்கிறது. அரசு எந்திரமும், மக்களின் வரிப்பணமும் தவறாக பயன்படுத்தப்படுவதை தமிழக அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது.

திமுகவுக்கு உறுப்பினர்களை சேர்த்தவர்கள் பணி நீக்கப்பட்ட மாநகராட்சி தற்காலிகப் பணியாளர்கள் என்று கூறி இந்த சிக்கலில் இருந்து விடுபட கடலூர் மாநகராட்சி மேயரும், ஆணையரும் முயல்வதாக கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட பணியாளர்கள் சிலரை கடலூர் மாவட்ட செய்தியாளர்கள் சிலர் தொடர்பு கொண்டு பேசிய போது, தாங்கள் மாநகராட்சிப் பணியாளர்கள் தான் என்று உறுதியாக கூறியிருக்கின்றனர். அதற்கான ஒலிப்பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. திமுகவுக்கு உறுப்பினர்களை சேர்த்தவர்கள் முன்னாள் பணியாளர்கள் என்று கைகழுவ முயலும் மேயரும், ஆணையரும், மாநகராட்சியின் பெயரை பயன்படுத்தி எவரேனும் வரி வசூலித்து மோசடி செய்தால் கண்டுகொள்ளாமல் இருக்குமா?

கடலூர் மாநகராட்சி பணியாளர்கள் என்று கூறிக் கொண்டு, திமுகவுக்கு உறுப்பினர்களை சேர்த்தவர்கள், உண்மையான பணியாளர்கள் இல்லை என்றால், மாநகராட்சியின் பெயரை தவறாக பயன்படுத்தியதற்காக அவர்கள் மீது மாநகராட்சி மேயரும், ஆணையரும் இதுவரை எந்த புகாரும் அளிக்காதது ஏன்? இதிலிருந்தே இந்த அதிகார அத்துமீறலுக்கு அவர்களும் உடந்தை தான் என்பது உறுதியாகிறது. எனவே, இது குறித்து விசாரணை நடத்த ஆணையிடுவதுடன், மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையர் மீது நடவடிக்கையும் எடுக்க வேண்டும்”, என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Pmk anbumani ramadoss press release accusing dmk abuse of power