/indian-express-tamil/media/media_files/2025/05/21/HQmdU1dm4Pf2T6syiKx5.jpg)
Thailapuram Peace talks
பாமக தலைவர் ராமதாஸ் மற்றும் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவி வந்த கருத்து வேறுபாடுகளைக் களைய, இன்று (ஜூன் 5, 2025) தைலாபுரத்தில் முக்கிய சமரசப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அன்புமணி ராமதாஸ், தனது இளைய மகள் சஞ்சித்ராவுடன் இன்று காலை தைலாபுரத்தில் உள்ள ராமதாஸ் இல்லத்திற்கு வருகை புரிந்தார். சுமார் 75 நிமிடங்களுக்கும் மேலாக நீடித்த இந்தச் சந்திப்பில், தந்தை மகனும், ராமதாஸ் தனது பேத்தியையும் சந்தித்துப் பேசினர். சந்திப்பிற்குப் பிறகு அன்புமணி ராமதாஸ் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இந்தச் சந்திப்பின் பேச்சில் என்ன முடிவுகள் எட்டப்பட்டன என்பது குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமாதானத் தூதுவர்கள்:
அன்புமணி ராமதாஸ் வெளியேறியதும், ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமி ஆகியோர் தைலாபுரம் இல்லத்திற்கு வந்து ராமதாஸை சந்தித்துப் பேசினர். பாமகவில் நிலவி வந்த குழப்பங்களுக்கு இன்றைய சந்திப்பில் சுமுகமான தீர்வு எட்டப்பட வேண்டும் என்றும், கட்சி நிர்வாகிகளுக்கு நல்ல செய்தி கிடைக்க வேண்டும் என்றும் இவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இவர்கள் இருவருக்கும் இடையிலான பிரச்சனைகளுக்கு சுமூகத் தீர்வு காணும் வகையில், அன்புமணி ராமதாஸ் தனக்கு மீண்டும் செயல் தலைவர் பதவி அறிவிக்கப்பட்டுள்ளதால், தலைவர் பதவி அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆடிட்டர் குருமூர்த்தியும், சைதை துரைசாமியும் இந்த சமரசப் பேச்சுவார்த்தையில் முக்கிய பங்காற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மோதல் பின்னணியும் சமரச முயற்சிகளும்:
முன்னதாக, ராமதாஸ் கட்சியின் தலைவராகவும், பல்வேறு பொறுப்புகளிலிருந்த மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிற பொறுப்பாளர்களையும் மாற்றி அமைத்து உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், அன்புமணி ராமதாஸ் நீக்கப்பட்டவர்களும் அதே பதவிகளில் நீடிப்பார்கள் என அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்த மாறிமாறி வந்த அறிக்கைகள் இருவருக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்தின. எனினும், தான் ஒரு அடிப்படை உறுப்பினராக இருந்து செயல்படத் தயார், ராமதாஸ் தான் தனது தெய்வம், அவரது வழிகாட்டுதலின்படி கட்சியை வழிநடத்தத் தயாராக இருப்பதாகவும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தந்தை மகன் இடையேயான இந்த மோதல் போக்கு, தேர்தல் வரக்கூடிய சூழலில் கட்சியின் பலத்தைப் பாதிக்கும் என்பதால், இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்பதற்காகவே இன்றைய சந்திப்பு நடைபெற்றது. நேற்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் அரசியல் குழுத் தலைவர் ராமதாஸை சந்தித்தபோது, அன்புமணி ராமதாஸ் கண்டிப்பாக தைலாபுரம் வருவார் என உறுதியளித்திருந்தார். அதன் அடிப்படையில் இன்று இந்த சந்திப்பு நடந்தேறியுள்ளது.
இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் சாமிநாதன் புதிய தலைமுறை செய்திக்கு அளித்த பேட்டியில், "ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையேயான பேச்சுவார்த்தை ஒரு சுமுகமான முடிவை எட்டிவிட்டது என்றே கூறலாம். இந்தக் குழப்பம் வெளியிலிருந்து வந்ததல்ல, தந்தை மகன் உறவில் ஏற்பட்ட விரிசல். நேருக்கு நேர் சந்தித்ததும் அது ஒரு உணர்ச்சிபூர்வமான தருணமாக மாறி, மோதல் போக்கு முடிவுக்கு வந்திருக்கும். அன்புமணி ராமதாஸ் தனது பலத்தையும், ராமதாஸ் குரல் பாமகவின் வாக்கு வங்கியைத் திரட்ட எவ்வளவு முக்கியம் என்பதையும் ஆழமாகப் புரிந்து கொண்டுள்ளார்.
ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் சைதை துரைசாமி போன்றோரின் தலையீடு, தேசிய ஜனநாயக கூட்டணியை பலப்படுத்தும் நோக்கில் இருக்கலாம். தந்தை மகனுக்கு இடையே சமரசமாகப் போகுமாறு மேலிடத்திலிருந்து வந்த உத்தரவின் விளைவாகவே இந்தச் சந்திப்பு நடந்ததாகத் தெரிகிறது. திமுக 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று கூறிவரும் நிலையில், வட மாவட்டங்களில் பாமக பிளவுபட்டு இருந்தால் தேசிய ஜனநாயக கூட்டணி பலவீனமடையும். எனவே, கூட்டணியும் ஒரு வலுவான முயற்சியை மேற்கொண்டதன் விளைவாகவே இந்த சமரசப் பேச்சுவார்த்தை குறுகிய காலத்தில் சாத்தியமாகியுள்ளது. அன்புமணி ராமதாஸ் இறங்கி வந்திருந்தாலும், பாஜக பக்கம் நகர்வதற்கான வாய்ப்புகளை இந்தக் கூட்டணி இன்னும் அழகாக சேமித்துள்ளது" என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.