கடலூர் மாவட்டம் நெய்வேலியில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான என்.எல்.சி இந்தியா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு உள்ள 3 நிலக்கரி சுரங்கங்களில் இருந்து நிலக்கரிகள் வெட்டி எடுக்கப்படுகின்றன. இந்த நிலையில் சுரங்க விரிவக்க பணிகளை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்து நெய்வேலி அருகே உள்ள வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, கரிவெட்டி மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை என்.எல்.சி இந்தியா நிறுவனம் மேற்கொண்டுள்ளது. என்.எல்.சி நிர்வாகம் கையகப்படுத்திய நிலத்துக்கு உரிய இழப்பீடு, வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் போராடி வந்தனர். இதனால் நிலக்கரி சுரங்க விரிவாக்க பணிகளை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டது.

இதற்கு மத்தியில் வளையமாதேவி, கீழ் வளையமாதேவி, கரிவெட்டி ஆகிய கிராமங்களில் சுரங்கப்பணிகளை என்.எல்.சி இந்தியா நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொடங்கியது. இதனை கண்டித்து நேற்று முன் தினம் பா.ம.க மற்றும் கிராம மக்கள் தரப்பில் போராட்டங்கள் நடைபெற்றது. நேற்று சேத்தியாத்தோப்பு அருகே சுரங்க விரிவாக்க பணிகளை நிறுத்தக்கோரி தர்ணாவில் ஈடுபட்ட அ.தி.மு.க எம்.எல்.ஏ அருண்மொழித்தேவன் உள்ளிட்ட 77 பேர் கைது செய்யப்பட்டனர். இதனால் ஏற்பட்ட பதற்றமான சூழலை அடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இன்று (மார்ச் 11) அதிகாலை, கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. மாவட்டம் முழுவதும் 7000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைக்கப்பட்டு இருந்தாலும் 100 சதவீத அரசு பேருந்துகள் மாவட்டத்தில் இயக்கப்படுகின்றன. மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து அரசு பேருந்துகள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்படுகின்றன. தனியார் பேருந்துகள் 30 சதவீதம் இயங்குகின்றன. கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு தனியார் பேருந்துகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன.
கடலூர், விருத்தாச்சலம், பண்ருட்டி பகுதிகளில் பெரும்பான்மையான கடைகள் அடைக்கப்பட்டு இருக்கின்றன. சாலையில் வழக்கம்போல் போக்குவரத்து காணப்பட்டாலும் திறக்கப்பட்ட சில கடைகள் வெறிச்சோடி காணப்பட்டன. வேறு ஏதும் அசம்பாவிதங்கள் நடக்கா வண்ணம் போலீசார் பெருமளவில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“