பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) தலைவர் அன்புமணி ராமதாஸ் "இலந்தைப் பழம் விற்கும் பெண்மணி" குறித்து அண்மையில் பேசிய கருத்துகள், கட்சிக்குள்ளும் வெளியேயும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. அன்புமணியின் இந்தப் பேச்சுக்கு அவரது சொந்தக் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏவான அருள் கேள்வி எழுப்பி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பேசிய அன்புமணி ராமதாஸ், தன் தந்தை டாக்டர் ராமதாஸ் குறித்து, "5 ஆண்டுகளாக ராமதாஸ் குழந்தையாக மாறிவிட்டார்" என்று குறிப்பிட்டிருந்தார். இது கட்சி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதேபோல், "இலந்தைப் பழம் விற்கும் ஒரு பெண்மணியை விட ஒரு மருத்துவர், ஒரு சட்டம் படித்தவர், ஒரு பொறியாளர், ஒரு பேராசிரியர், ஒரு வழக்கறிஞர், ஒரு ஆட்சிப்பணி அதிகாரி போன்றோரின் சிந்தனை அதிகமாக இருக்கும்" என்றும் அவர் பேசியிருந்தார். இந்தப் பேச்சு சமூக வலைத்தளங்களில் பரவி, பல்வேறு தரப்பினரிடையே கடும் விமர்சனங்களைச் சந்தித்தது. அன்புமணியின் இந்தப் பேச்சுக்களுக்கு எதிர்வினையாற்றும் வகையில், பாமக எம்.எல்.ஏ. அருள் இரண்டு முக்கியக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
"5 ஆண்டுகளாக ராமதாஸ் குழந்தையாக மாறிவிட்டார் என அன்புமணி சொல்கிறார். அந்தக் குழந்தைதானே 3 ஆண்டுகளுக்கு முன்பு உங்களை தலைவராக அறிவித்தது. குழந்தையின் அறிவிப்பு எப்படி செல்லும்?" என்று அருள் எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், "இலந்தைப் பழம் விற்பவர் கேவலமானவரா? எந்த ஒரு பொருளை விற்பவருக்கும் அவரவர் தொழில் மீது மதிப்பும், மரியாதையும் உண்டு. மருத்துவர், பொறியாளர் போன்ற உயர்ந்த தொழில் செய்யும் நபர்களைப் பற்றி குறிப்பிடும் போது, இன்னொரு தொழிலை குறைத்து மதிப்பிடுவது சரியாக இருக்காது. அனைத்துத் தொழில்களும் மதிக்கப்பட வேண்டும்" என்றும் அருள் தெரிவித்துள்ளார்.