சென்னையில் பாமக போராட்டம்: அனந்தபுரி எக்ஸ்பிரஸ் மீது கல்வீச்சு

பாமக சார்பில் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வந்த பாமக தொண்டர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால், அவர்கள் பெருங்களத்தூரில் அனந்தபூர் எக்ஸ்பிரஸ் ரயில் மீது கற்களை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

வன்னியர்களுக்கு 20% தனி இடஒதுக்கீடு கோரி பாமக சார்பில் இன்று சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வந்த பாமக தொண்டர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால், பெருங்களத்தூரில் அனந்தபூர் எக்ஸ்பிரஸ் ரயில் மீது கற்களை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில், வன்னியர்களுக்கு 20% தனி இடஒதுக்கீடு வழங்கக் கோரி பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் சென்னையில் ஆர்ப்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், பாமக தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி உள்ளிட்ட அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.

சென்னையில் பாமக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாமகவினர் சென்னைக்கு வாகனங்களில் வந்தனர். அவர்கள் வண்டலூர் அருகே பெருங்களத்தூர், தாம்பரம் ஆகிய பகுதிகளில் தடுத்து நிறுத்தப்பட்டனர். அதனால், பாமகவினர் தாம்பரத்தில் உள்ள ஜி.எஸ்.டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அதனால், ஜி.எஸ்.டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பெருங்களத்தூரில் ரயிலை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமக தொண்டர்கள் அவ்வழியே வந்த அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் மீது கற்களை வீசி தாக்கியதால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது. இதனால், சென்னையில் தாம்பரம் வழியாக இயக்கப்படும் புறநகர் ரயில்சேவை 10 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. பின்னர், மறியலில் ஈடுபட்டவர்கள் அகற்றப்பட்டனர்.

சென்னையில் பாமக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வெளி மாவட்டங்களில் இருந்து சென்னை வந்த பாமக தொண்டர்களின் 600க்கு மேலான வாகனங்கள் வண்டலூர் அருகே தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால், பல கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டன. பாமகவின் ஆர்ப்பாட்டம் காரணமாக சுமார் 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சென்னைக்கு வரும் 8 நுழைவாயில்களிலும் போலீசார் குவிக்கப்பட்டு சென்னைக்கு வந்துகொண்டிருந்த பாமகவின் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

அதே போல, வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இடஒதுக்கீடு கோரி சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் ஒரு பகுதியாக கடலூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினர் 250 பேர் கைது செய்யப்பட்டனர். அதேபோல, பாமகவின் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்த அக்கட்சி தொண்டர்கள் விழுப்புரம் மாவட்டம், மயிலம், மேல்பேட்டை, கூட்டேரிப்பட்டு ஆகிய இடங்களில் 55 பாமக தொண்டர்கள் போலிசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு, பாமக இளைஞரணி தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான அன்புமணி, முதல்வர் பழனிசாமியை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “முதல்வர் அழைப்பை ஏற்று ஒரு குழுவாக முதல்வரையும், துணை முதல்வரையும் சந்தித்து தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் 20% இட ஒதுக்கீடு வேண்டுமென்று கோரிக்கை வைத்தோம். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் 1989-ம் ஆண்டிலிருந்து இன்று வரை எந்தெந்த சமுதாயத்தினர் எவ்வளவு பணியிடங்களை இட ஒதுக்கீடு மூலமாக பணி ஒதுக்கீடு செய்துள்ளனர் என்கிற விவரத்தை தெரிவிக்க வேண்டும் என்கிற கோரிக்கை மனுவையும் நாங்கள் கொடுத்தோம்.

இதற்கு முன்னர் 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் கூட்டணிக்கு முன்னர், வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும் என 10 அம்சக் கோரிக்கைகளை அளித்தோம். கடந்த ஆண்டு முதல்வர் பழனிசாமியை ராமதாஸ் தலைமையில் ஒரு குழு சந்தித்து மீண்டும் வலியுறுத்தினோம்.

மீண்டும் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி 3 மாதங்களுக்கு முன்பு எங்கள் கட்சியின் பொதுக்குழு கூடி வன்னியர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையைத் தீர்மானமாக நிறைவேற்றி அரசுக்குத் தெரியப்படுத்தினோம்.

10 நாட்களுக்கு முன் பாமக, வன்னியர் சங்கம் காணொலி வாயிலாக நடத்திய பொதுக்குழுவில் மீண்டும் இந்தக் கோரிக்கையைத் தீர்மானமாக வலியுறுத்தி அறவழியில் போராட்டம், ஆர்ப்பாட்டங்கள் நடத்துவோம் எனத் தீர்மானம் நிறைவேற்றினோம். அந்த வகையில் சென்னையில் அறவழியில் ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம். வரும் வழியில் எங்கள் தொண்டர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். ஆனாலும், அவர்கள் அமைதியான முறையில் இருக்கவேண்டும் என நாங்கள் வலியுறுத்தியுள்ளோம்.

ஆர்ப்பாட்டம் நடத்துவதற்குச் சற்று நேரம் முன்பு முதல்வர் அழைத்து உங்கள் கோரிக்கையைக் கொடுங்கள் என்று சொன்னார். அதன்படி முதல்வரைச் சந்தித்தோம். உடன் துணை முதல்வரும் இருந்தார். எங்கள் கோரிக்கையை நாங்கள் சொன்னோம்.

ஊடக நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். இந்தச் சமுதாயத்தை ஒரு வன்முறைச் சமுதாயமாக மாற்றாதீர்கள். அப்படி ஒரு தோற்றத்தை உருவாக்காதீர்கள். இந்தச் சமுதாயம் ஏர் பிடிக்கும் சமுதாயம். முன்னேற்றத்திற்காக 40 ஆண்டுகால கோரிக்கையை வைத்து எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா போன்ற முதல்வர்களைச் சந்தித்தோம். இப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்கிறோம். எங்கள் நோக்கமே அறவழியில் அமைதியாகப் போராடுவதுதான். எங்கள் தொண்டர்கள் மீது எந்த வழக்கும் போடாமல் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.” என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Pmk cadres protest pelt stone on train in chennai

Next Story
தமிழகத்தில் சாதிவாரி புள்ளி விவரங்களை சேகரிக்க தனி ஆணையம்: முதல்வர் பழனிசாமிcm palaniswami announced, separate commission for caste wise statistics, சாதிவாரி கணக்கெடுப்பு, முதல்வர் பழனிசாமி அறிவிப்பு, caste wise surway, pmk, pmk protest, தமிழ்நாடு, tamil nadu
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com