பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.
Coimbotore | Pmk: MyV3 Ads நிறுவனம் இதற்கு முன்பு V3 Online என்ற நிறுவனம் மூலம் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தனர்.
இந்நிலையில், தற்போது மேலும் 10 பேர் V3 Online நிறுவனம் மோசடி செய்ததாக மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை புகார் அளித்துள்ளனர். இந்த புகார்கள் பா.ம.க நிர்வாகி அசோக் ஸ்ரீநிதி முன்னிலையில் அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக பா.ம.க நிர்வாகி அசோக் ஸ்ரீநிதி பேசுகையில், "MyV3 Ads நிறுவனம் அதன் நிறுவனத்தை முன்னர் V3 Online TV என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளது. சக்தி ஆனந்த், மற்றும் விஜய ராகவன் ஆகியோர் அந்நிறுவனத்தை நடத்தி உறுதியாக மோசடி செய்துள்ளனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மனு அளித்துள்ளனர்.
அவர்கள் பெற்றுள்ள கவுரவ டாக்டரேட் பட்டம் போலியானது. யுனிசெப் இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்தை அவர்களாகவே தொடங்கி அவர்களுக்குள்ளேயே இந்த பட்டத்தை வழங்கிக் கொண்டனர். யுனிசெப் நிறுவனத்தில் பணிபுரியும் பிரபு என்ற ஒரு நபர், மதுரையை சேர்ந்த ஒருவரிடம் ஆளுநரிடமே விருது வாங்கித் தருவதாகக் கூறி 15 லட்சம் ஏமாற்றியுள்ளார். கடந்த வருடம் இது குறித்து 6 பிரிவுகளின் கீழ் சென்னையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த MyV3 Ads நிறுவனத்திற்கு V ஹெர்பல் கேர் என்ற நிறுவனம் தான் மருந்துகளை வழங்கி வருகிறது. இதன் நிறுவனரும் பாரத் சேவக் சமாஜ் என்ற மத்திய அரசின் அமைப்பின் சேன்ஸ்லரும் ஒரே நபர் தான். அவர் பத்தாம் வகுப்பில் 4 பாடங்களில் தேர்ச்சி பெறாதவர்.
V3 Online TV மூல மோசடி செய்த பணத்தில் தான் MyV3 Ads நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். இந்த MyV3 Ads நிறுவனத்தில் இருப்பவர்களை நம்ப வைப்பதற்காக பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனர்." என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“