ஆளுங்கட்சி போராட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்ய பா.ம.கவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தி.மு.க அரசை கண்டித்து அ.தி.மு.க, பா.மக, பா.ஜ.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போரட்டம் அறிவித்தனர். ஆனால் காவல்துறை போராட்டம் நடத்த அனுமதி மறுத்தது. தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சியினர், தலைவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதே போல் பா.ம.க மகளிர் அணி சார்பில் சௌமியா அன்புமணி தலைமையில் போராட்டம் அறிவிக்கப்பட்ட போது காவல்துறை அனுமதி மறுத்தது. தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட போது போலீசார் அவரை கைது செய்தனர். முன்னதாக, பா.ம.க போராட்டத்திற்கு அனுமதி கோரி மனுத் தாக்கல் செய்த போது உயர் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து ஆளுங்கட்சியான தி.மு.க தமிழகம் முழுவதும் இன்று(ஜன.7) போராட்டத்தில் ஈடுபட்டது. காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பா.மக. இதுகுறித்து இன்று முறையீடு செய்துள்ளது. அதில், காவல்துறை ஆளுங்கட்சி போராட்டதிற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் ஆளுநரை கண்டித்து ஆளுங்கட்சி போராட்டத்துக்கு ஒரே நாளில் அனுமதி கொடுத்தது எப்படி? எனக் கேட்டும்
பா.மக வழக்கறிஞர் பாலு முறையீடு செய்தார்.
இந்த விவகாரத்தை மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதி தெரிவித்தார்.