PMK - DMK Clash Tamil News : தேர்தல் நெருங்கிவரும் வேளையில் பரபரப்புகளுக்குக் குறைவில்லாமல் நகர்ந்துகொண்டிருக்கிறது நாள்கள். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை சேலம் ஓமலூர் அருகே பிரச்சாரத்திற்குச் சென்ற முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சியினர் மறியல் போராட்டம் நடத்தியுள்ளனர். அப்போது, தயாநிதி மாறன் கார் மீது கல் வீசி தாக்குதலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. மேலும், திமுக காவல்துறையின் ஒரு பகுதியாக இருந்த ஒரு சில வாகனங்கள் சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
'விடியலைத்தேடி ஸ்டாலின் குரல்' எனும் இரண்டு நாள் பிரச்சார நிகழ்ச்சிக்காக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் சேலம் மேற்கு மாவட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார். பூசாரிபட்டியில் பிரச்சாரம் செய்த பின்னர், மாறன் மற்றும் திமுக தலைவர்கள் கண்ணம்பாடி மலையை நோக்கி பயணம் செய்துள்ளனர். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தயாநிதி மாறன், பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவருடைய மகன் அன்புமணி ராமதாஸ் இருவரும் புறம்பான காரணங்களுக்காகக் கூட்டணிகளில் இணைந்திருப்பதாகவும் மேலும் தேர்தலுக்காக வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டத்தைக் கையிலெடுத்து இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
மாறனின் இத்தகைய பேச்சினை கண்டித்து பாமகவினர் பல்வேறு இடங்களில் கறுப்புக் கொடிகளுடன் போராட்டங்களை நடத்தியுள்ளனர். இந்நிலையில் பூசாரிப்பட்டி அருகே தயாநிதி மாறன் பயணம் செய்துகொண்டிருந்தபோது, கறுப்புக்கொடி ஏந்தியும் உருட்டுக் கட்டைகளுடனும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பாமகவினர் மாறனின் வாகனத்தை நிறுத்த முயன்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து இருகட்சிகளுக்கிடையில் மோதல் ஏற்பட்ட நிலையில், காவல்துறையினர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது பாமகவினர் தயாநிதி மாறனின் கார் மீது கல்வீசித் தாக்கத் தொடங்கினர். இதனால் அவருடைய வாகனத்தின் முகப்பு விளக்கு உடைந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மாமாங்கம் பகுதியில் மாறன் தங்கியிருக்கும் தனியார் ஹோட்டலை முற்றுகையிட்ட பாமகவினர் தயாநிதி மாறனை கண்டித்துக் கண்டன கோஷம் எழுப்பினார்கள். இதனால் அங்கு திமுக கட்சியினர் ஏராளமானோர் கூடியுள்ளனர். துணை ஆணையர் (சட்டம் ஒழுங்கு) எம்.சந்திரசேகரன் தலைமையிலான காவல்துறை ஹோட்டல் வளாகத்தில் பந்தோபஸ்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கடந்த செவ்வாயன்று பாமகவின் துணை கூட்டுச் செயலாளர் அருள், மாறன் செல்லும் எல்லா இடங்களிலும் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டங்களை நடத்துவதாகக் கூறி மேலும், இட ஒதுக்கீடு மற்றும் அவர்களின் தலைவர்களுக்கான போராட்டங்களைக் குறித்த குற்றச்சாட்டுக்கு மன்னிப்பு கேட்கவும் கோரினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.