வன்னியர் இடஒதுக்கீடு தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்குகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. ‘இடஒதுக்கீட்டை செயல்படுத்துவது என்ற அடுத்த கட்டத்திற்கு, எங்களால் செல்ல முடியாது’ என, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறியிருக்கிறார்.
தமிழ்நாட்டில் சமூகநீதிக்கு என்று தனி அமைச்சகம் கிடையாது. ஆனால், சமூகநீதியை பாதுகாக்கும் கடமையும், பொறுப்பும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு தான் உள்ளது
வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை கடந்த பிப்ரவரி மாதம் அதிமுக அரசு கொண்டு வந்து நிறைவேற்றியது. அந்த சட்டத்திற்கு ஆளுநரின் ஒப்புதல் பெற்று அரசாணையும் வெளியிடப்பட்டு விட்டது. அதன்படி அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் இந்த சட்டத்தின்படி இடஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணை உயர்கல்வித்துறையால் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டு விட்டது. மற்ற துறைகளிலும் இதேபோன்ற அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டிருக்கக்கூடும். அவற்றின் அடிப்படையில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அதை உறுதி செய் வேண்டியது பிற்படுத்தப்பட்டோர் நல அமைச்சகத்தின் முதன்மைப் பணியாகும்.
கல்வியைப் பொறுத்தவரை சட்டப்பல்கலைக்கழகத்தில் 10.50% இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு விட்டது. அதே நேரத்தில் வேலைவாய்ப்பில் இந்த இட ஒதுக்கீடு இன்னும் நடைமுறைப்படுத்தப்பட வில்லை. மருத்துவத்துறையின் கீழ் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓமியோபதி மருந்து வழங்குனர், மருத்துவ உதவியாளர் பணிக்கு 555 பேரை தற்காலிகமாக நியமிப்பதற்கான அறிவிக்கையில் முந்தைய இட ஒதுக்கீட்டு முறையே கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்றத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கைகளில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் இறுதித் தீர்ப்பைப் பொறுத்து, வன்னியர்களுக்கான 10.50% உள் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. இந்த இரு நடவடிக்கைகளும் தவறானவையாகும்.
பணி நியமனங்கள் தொடர்பான இந்த அறிவிக்கைகளில் வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு இடம் பெறாதது தொடர்பாக உயர்நீதிமன்றம் மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகளை பிற்படுத்தப்பட்டோர் அமைச்சகம் தான் தொடர்பு கொண்டு, விளக்கம் கேட்டு, இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தும்படி ஆணையிட்டிருக்க வேண்டும். ஆனால், அந்தத் துறையின் அமைச்சரே உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை காரணம் காட்டி, வன்னியர் இட ஒதுக்கீட்டை செயல்படுத்த மறுக்கிறார் என்றால், இது அவரது நிலைப்பாடா… இல்லை அரசின் நிலைப்பாடா? என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும்
தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. ஆனாலும் 27 ஆண்டுகளாக இட ஒதுக்கீடு தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது.இஸ்லாமியர் உள் இட ஒதுக்கீடு, அருந்ததியர் உள் ஒதுக்கீடு குறித்த வழக்குகளும் நிலுவையில் தான் உள்ளன. ஆனாலும், அந்த இட ஒதுக்கீடுகள் தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன. காரணம் அந்த இட ஒதுக்கீடுகளுக்கு எந்த நீதிமன்றத்திலும் தடை விதிக்கப்படவில்லை என்பது தான். அதேபோல் தேசிய அளவில் உயர்வகுப்பு ஏழைகளுக்கான இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு இரண்டரை ஆண்டுகளாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆனாம் இந்த இட ஒதுக்கீட்டுக்கு தடை விதிக்கப்படவில்லை.
வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்குகளை நடத்துவதற்கு சமூகநீதியில் அக்கறையும், வல்லமையும் கொண்ட மூத்த வழக்கறிஞர்கள் குழுவை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”