Pmk | Lok Sabha Election | பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியானது. அதில், ரூ.10 லட்சம் வரை வருமான வரி விலக்கு; மகளிருக்கு மாதம் ரூ.3 ஆயிரம் உள்ளிட்ட திட்டங்கள் இடம் பெற்றுள்ளன.
பாட்டாளி மக்கள் கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. இந்நிலையில், இன்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியானது.
அதில்,
- கருவுற்ற பெண்களுக்கு வழங்கப்படும் மத்திய அரசின் நிதியுதவி திட்டம் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்படும்.
- மூத்தக் குடிமக்கள், ஆதரவற்றோருக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் மாதம் ரூ.3 ஆயிரமாக வழங்கப்படும்.
- நாடு முழுக்க வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.3ஆயிரம் வழங்கப்படும்.
- விலைவாசி உயர்வை எதிர்கொள்ளும் வகையில் நியாய விலைக் கடைகள் மூலமாக உணவுத் தானியங்கள் மற்றும் காய்கறிகள் மானிய விலையில் வழங்கப்படும்.
- உள்ளாட்சி அமைப்புகளில் மகளிர் இடஒதுக்கீடு 50 சதவீதமாக உயர்த்தப்படும்.
- நீட் தேர்வில் தமிழ்நாட்டுக்கு விலக்கு பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
- மத்திய அரசின் அனைத்து சான்றிதழ்களையும் ஆன்லைன் வாயிலாக வாங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- தனிநபர் வருமான வரி விலக்கு ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும். அதாவது ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை வருமான வரி கட்ட தேவை இல்லை.
- ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதுவைக்கு மாநில தகுதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மது புகையிலை உள்ளிட்ட பொருள்கள் ஜி.எஸ்.டி வரம்பில் இருந்து நீக்கப்பட்டு, 100 சதவீதம் வரி விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மற்ற பொருள்களுக்கு ஜி.எஸ்.டி குறைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்.எல்.சி நிர்வாகம்
- என்எல்சி நிர்வாக பிரச்னை குறித்தும் பா.ம.க. தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. அதில், தனியார், நீதித்துறையில் இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும்.
- தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80% பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கீடு செய்திட வேண்டும்.
- உயர் வகுப்பு ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து, இடஒதுக்கீட்டுக்கான 50% உச்சவரம்பை நீக்குவதற்கு பாமக நடவடிக்கை மேற்கொள்ளும்.
- மத்திய அரசுக்கு கொடுக்கும் வருவாயில் மாநிலங்களுக்கு 50% நிதி பகிர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- ‘பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை’ என்ற புதிய அமைச்சகம் உருவாக்கப்படும்.
- தன்னாட்சியும், சமூகநீதியும் தழைக்கும் தமிழ்நாட்டை உருவாக்குவோம்.
- இந்தியா முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திட உறுதி செய்வோம்” எனக் கூறப்பட்டுள்ளது.
பாஜக தலைமயிலான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி, 2024 மக்களவைத் தேர்தலில் காஞ்சிபுரம், அரக்கோணம், ஆரணி, விழுப்புரம், கடலூர், சேலம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, மயிலாடுதுறை, திண்டுக்கல் ஆகிய 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“