PMK Founder Dr Ramadoss threatening statement against journalists : சென்னை அடையாறு பகுதியில் 22ம் தேதி தமிழ் படைப்பாளிகள் பேரியக்கம் சார்பில் "வளர்க்கப்படுகின்ற வெறுப்பு அரசியல்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. அதில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.
ஒரு முறை நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பினை மேற்கோள் காட்டி பேசிய அவர், அவரிடத்தில் தொடர்ந்து போராட்டங்களின் போது மரங்கள் வெட்டப்படுவது குறித்து கேள்வி எழுப்புவதாக அவர் கூறினார். பிறகு “இனிமேல் மரங்களை வெட்டவில்லை. அதற்கு பதிலாக இப்படி கேள்வி கேட்பவர்களை வெட்டிவிட்டு போராட்டம் நடத்துகின்றோம்” என்று கூறியதாக அவர் கூறினார்.
இதை அவர் கூறும் போது அங்கிருக்கும் நபர்கள் அனைவரும் ஆரவாரமாக கைத்தட்டிக் கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் அந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் நடைபெற்றதை விளக்கினார். “என்ன சார் இப்படி பேசுறீங்கன்னு எல்லாரும் எந்திரிச்சு நின்னுட்டாங்க.... நான், ”நூறு தடவைக்கு மேல இந்த கேள்விய நீங்க கேக்குறீங்கன்னு” சொன்னேன்... ”அதுக்கு அங்கிருந்த ஒருத்தர், நூத்தியோறாவது முறையும் பதில் சொல்லிட்டு போங்கன்னு சொல்றாரு”.. என்று தொடர்ந்த ராமதாஸ் பத்தி்ரிக்கையாளர்களை மிகவும் மோசமாக விமர்சனம் செய்தார்.
இவரின் இந்த மோசமான விமர்சனங்களுக்கு பத்திரிக்கையாளர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் பத்திரிக்கையாளர்களை தரக்குறைவாக பேசியதற்காக மருத்துவர் ராமதாஸ் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று தங்களின் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.