Advertisment

அண்ணா பல்கலை. தற்காலிக ஆசிரியர்களை நீக்கக்கூடாது - ராமதாஸ்

அண்ணா பல்கலைக்கழகமும் ஆசிரியர்களின் உழைப்பைச் சுரண்டி விட்டு, வெளியேற்றக்கூடாது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
அண்ணா பல்கலை. தற்காலிக ஆசிரியர்களை நீக்கக்கூடாது - ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நீண்டகாலமாக பணியாற்றி வரும் தற்காலிக ஆசிரியர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் பல ஆண்டுகளாக ஏற்கப்படாத நிலையில், இப்போது புதிய தற்காலிக ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதனால், இப்போது பணியிலுள்ள தற்காலிக ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்களோ எந்த அச்சம் எழுந்திருக்கிறது.

Advertisment

அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி மற்றும் குரோம்பேட்டை வளாகங்களில் சுமார் 270 தற்காலிக ஆசிரியர்கள் பனியாற்றி வருகின்றனர். பல்கலைக்கழகத்தின் மொத்த ஆசிரியர் பணியிடங்களில் இது மூன்றில் ஒரு பங்காகும். தற்காலிக ஆசிரியர்கள் அனைவரும் அவர்கள் சார்ந்த பாடங்களில் முனைவர் பட்டம் பெற்றவர்கள் ஆவர். முறையாக நேர்காணல் உள்ளிட்ட தகுதித் தேர்வுகள் மூலமாகத் தான் இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளனர். பணி அனுபவத்தின் அடிப்படையில் நிரந்தர உதவிப் பேராசிரியர்கள் மற்றும் இணைப் பேராசிரியர்களாக நியமிக்கப்பட இவர்கள் தகுதி பெற்றவர்கள்.

ஆனாலும், இவர்களை பணி நிலைப்பு செய்யாமல் பல்கலைக்கழக நிர்வாகம் பெருந்துரோகம் செய்து வருகிறது. தற்காலிக ஆசிரியர்கள் 6 மாத ஒப்பந்தத்தில் பணியமர்த்தப்படுகின்றனர். 3 ஆண்டுகளுக்கு தொடர்ந்து பணியாற்றினால் அவர்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும் என்பது பல்கலைக்கழக விதி ஆகும். பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தற்காலிக ஆசிரியர்கள் அனைவரும் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். அதன்படி பார்த்தால் 270 தற்காலிக ஆசிரியர்களும் பணி நிலைப்பு செய்ய தகுதியானவர்கள் தான். ஆனால், அவர்களில் ஒருவர் கூட இன்னும் பணி நிலைப்பு செய்யப்படவில்லை. இதைவிடக் மோசமான சமூக அநீதி இருக்க முடியாது.

தற்காலிக ஆசிரியர்கள் பணி நிலைப்பு செய்யப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே, ஆசிரியர்களின் 6 மாத ஒப்பந்தம் முடிவடைந்த பின்னர் அடுத்த பணி நாள் முதல் புதிய ஒப்பந்தம் வழங்காமல், ஓரிரு நாட்கள் தாமதம் செய்து விட்டு, அதன்பிறகே புதிய ஒப்பந்தம் வழங்கப்படுகிறது. இதன்மூலம் அவர்களில் ஒருவர் கூட தொடர்ந்து 3 ஆண்டுகள் பணி செய்யாமல் தடுக்கப்படுகின்றனர். இதன் மூலம் அவர்களை காலம் காலமாக தற்காலிகப் பணியாளர்களாகவே வைத்துக் கொண்டு, அவர்களின் உழைப்பைச் சுரண்டுவது தான் அண்ணா பல்கலைக்கழகத்தின் நோக்கமாக உள்ளது. இது கண்டிக்கத்தக்கதாகும்.

தற்காலிக ஆசிரியர்களுக்கு நியாயமான ஊதியமும் வழங்கப்படுவதில்லை. நிரந்தர ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஊதியத்தில் நான்கில் ஒருபங்கு மட்டும் தான் இவர்களுக்கு ஊதியமாக வழங்கப்படுகிறது. அதேநேரத்தில் நிரந்தர ஆசிரியர்களை விட அதிக நேரம் பணியாற்றும்படி நெருக்கடி கொடுக்கப்படுகிறது. அண்ணா பல்கலைகக்கழகத் துணைவேந்தர் பதவி பல ஆண்டுகளாக காலியாக கிடந்ததால் தற்காலிக ஆசிரியர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக ஊதிய உயர்வும் வழங்கப்படவில்லை.

அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக சூரப்பா அண்மையில் பதவியேற்ற பின்னர் தற்காலிக ஆசிரியர்களை அழைத்துப் பேசினார். அப்போது தற்காலிக ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படுவதுடன், அவர்களின் பணித் திறன் ஆண்டு தோறும் ஆய்வு செய்யப்படும் என உத்தரவாதம் அளித்திருந்தார். இதனால் அடுத்த சில ஆண்டுகளில் தங்களுக்கு பணி நிலைப்பு கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தற்காலிக ஆசிரியர்கள் நம்பத் தொடங்கியிருந்த நிலையில் தான், புதிய தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தங்களை பணி நீக்கம் செய்வதற்காகவே புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனரோ என்ற அச்சம் அவர்களிடையே ஏற்பட்டுள்ளது. இது நியாயமனதே.

தனியார் நிறுவனங்களைப் போலவே அண்ணா பல்கலைக்கழகமும் ஆசிரியர்களின் உழைப்பைச் சுரண்டி விட்டு, வெளியேற்றக்கூடாது. இது தொடர்பாக தற்காலிக ஆசிரியர்களிடம் நிலவும் அச்சத்தைப் போக்கும் வகையில் பல்கலைக்கழக நிர்வாகம் விளக்கமளிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, ஆட்சிக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி 270 தற்காலிக ஆசிரியர்களையும் பணி நிலைப்பு செய்ய வேண்டும்" என்று ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Anna University Dr Ramadoss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment