உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு அவமதிப்பு: 'சூப்பர் ஆளுநர் தான் காரணமா?' - ராமதாஸ்

நடந்த எல்லா குழப்பங்களுக்கும் அவர்தான் காரணம்

உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு அவமதிப்பு: பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையிலுள்ள ஆளுனர் மாளிகையில் நேற்று நடைபெற்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி தஹில் ரமணி பதவியேற்பு விழாவில் அரசியலமைப்புச் சட்டத்தின்படியான படிநிலை வரிசை காற்றில் பறக்கவிடப்பட்டிருக்கிறது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு அரசியலமைப்பு படிநிலை வரிசைப்படி மரியாதை வழங்கப்படாமல் அவமதிக்கப்பட்டுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள விஜய கமலேஷ் தஹில் ரமணியின் பதவியேற்பு விழா ஆளுனர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதிகள், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதிகள் முதல் வரிசைகளில் அமரவைக்கப்பட வேண்டும் என்பது தான் மரபு ஆகும். புரோட்டாக்கால் எனப்படும் அரசியலமைப்புப் படிநிலை வரிசையும் இதையே வலியுறுத்துகிறது. ஆனால், நேற்றைய விழாவில் அமைச்சர்கள், அரசியல்வாதிகள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் முதல் வரிசைகளில் அமர வைக்கப்பட்டதுடன், உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஏதோ மூன்றாம் தர மனிதர்களைப் போல பின்வரிசைகளுக்கு தள்ளப்பட்டனர். நீதியரசர்கள் அமருவதற்கு முறையான வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை.

தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவில் படிநிலை வரிசைப்படி தங்களுக்கு மரியாதை வழங்கப்படாததால் வருத்தமடைந்த இரு நீதிபதிகள், தங்கள் கோபத்தை வெளிப்படுத்தும் வகையில் வெளிநடப்பு செய்ய முயன்றுள்ளனர். ஆனால், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் தலையிட்டு அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி வெளிநடப்பு செய்வதைத் தடுத்துள்ளார். மற்ற நீதியரசர்களும் இந்த அவமதிப்பால் வேதனை அடைந்தாலும், நாகரிகம் கருதி அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு இழைக்கப்பட்ட இந்த அவமதிப்புக்கு நீதியரசர் எம்.எஸ். இரமேஷ் வெளிப்படையாகவே கண்டனம் தெரிவித்துள்ளார். ‘‘ பதவியேற்பு விழாவில் படிநிலை வரிசைப்படியான மரியாதை வழங்கப்படாதது வருத்தமளிப்பது மட்டுமின்றி, மிகவும் கவலையளிக்கும் நிகழ்வும் ஆகும். அரசியலமைப்புச் சட்ட பேராளர்களான நீதிபதிகளுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்குமான படிநிலை வரிசை ஆளுனர் மாளிகை அதிகாரிகளுக்கு தெரியாதா? அல்லது அமைச்சர்களுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் கீழானவர்கள் தான் நீதிபதிகள் என்பது தான் அவர்களின் புரிதலா?’’ என்று வினா எழுப்பியுள்ளார். இவ்வினாக்கள் நியாயமானவை; ஆளுனர் மாளிகையால் விளக்கமளிக்கப்பட வேண்டியவை.

ஆளுனர் மாளிகையில் நடந்த நிகழ்வுகளை வைத்துப் பார்க்கும் போது, உயர்நீதிமன்ற நீதிபதிகள் திட்டமிட்டே அவமதிக்கப்பட்டுள்ளனர் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. பதவியேற்பு விழாவுக்கு முன்பாக நீதிபதிகள் அமருவதற்காக இருக்கை வரிசையை ஆய்வு செய்ய உயர்நீதிமன்றப் பதிவாளர் (தொடர்பு) விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால், அவ்வாறு செய்ய அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தமிழக வரலாற்றில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு, அதுவும் தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவில் இப்படி ஓர் அவமதிப்பு இதுவரை நிகழ்ந்ததில்லை. இத்தனைக்கும் ஆளுனர் தான் காரணம் என்றோ, அவர் தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றோ குற்றஞ்சாற்ற நான் விரும்பவில்லை. ஆனால், இப்படி ஓர் அவமதிப்பை தடுத்திருக்க வேண்டிய கடமையிலிருந்து ஆளுனர் தவறிவிட்டார்.

ஆளுனர் மாளிகையின் புதிய அதிகார மையமாக உருவெடுத்துள்ள அதிகாரி தான் அனைத்துக் குழப்பங்களுக்கும் காரணம் என்று கூறப்படுகிறது. தம்மையே சூப்பர் ஆளுனராக நினைத்துக் கொண்டு அவர் போடும் ஆட்டங்களால் ஆளுனர் மாளிகை தேவையற்ற சர்ச்சைகளில் சிக்கிக் கொள்கிறது. அண்மையில் ஆளுனர் மாளிகைக்கு அவப்பெயரை ஏற்படுத்திய சில நிகழ்வுகளுக்கும் அவர் தான் காரணம் என்று கூறப்படுகிறது. இவையெல்லாம் ஆளுனருக்கு தெரியுமா? இவை குறித்து ஆளுனருக்கு தெரிந்திருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் ஆளுனர் பன்வரிலால் புரோகித் அமைதி காப்பது ஏன்? என்பவை தான் உடனடியாக விடை காணப்பட வேண்டிய வினாக்களாகும்.

மாநில அரசு சார்பில் நடத்தப்படும் விழாக்களிலும், மற்ற நிகழ்வுகளிலும் படிநிலை வரிசை பின்பற்றப் படுவதை உறுதி செய்வதற்காகவே தமிழக அரசின் பொதுத்துறையில், துணை செயலாளர் நிலையிலான அதிகாரி தலைமையில் தனிப்பிரிவு செயல்பட்டு வருகிறது. அப்பிரிவுக்கு பொறுப்பான இ.ஆ.ப. அதிகாரி இதற்கு முன் ஆளுனர் மாளிகையில் பணியாற்றியவர் தான். இருந்தும் உயர்நீதிமன்ற நீதியரசர்களுக்கு ஏற்பட்ட அவமதிப்பை தடுத்து நிறுத்த தவறியது கண்டிக்கத்தக்கது. உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு இத்தகைய அவமதிப்பு இழைக்கப்பட்டது குறித்து ஆளுனர் மாளிகை விளக்கமளிக்க வேண்டும். இதற்குக் காரணமான அதிகாரிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், நடந்த தவறுக்காக உயர்நீதிமன்ற நீதிபதிபதிகளிடம் தமிழக அரசு வருத்தம் தெரிவிக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close