Advertisment

கச்சா எண்ணெய் விலை 22% குறைந்தும் பெட்ரோல், டீசல் விலை குறையாதது ஏன்? - ராமதாஸ்

அந்த விவரங்களை வெளியிட்டால் உண்மை நிலை அம்பலமாகிவிடும் என்பதால் தான் அவற்றை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிடாமல் ரகசியமாக வைத்து பாதுகாத்து வருகின்றன

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை

பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலக சந்தையில் கடந்த சில மாதங்களாக ஏறுமுகத்தில் இருந்த கச்சா எண்ணெய் கடந்த ஓராண்டில் இல்லாத அளவுக்கு ஒரு பீப்பாய் 60.13 டாலர் என்ற அளவுக்குக் குறைந்துள்ளது. ஆனால், கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சிக்கு இணையாக பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாதது கண்டிக்கத்தக்கது.

Advertisment

நடப்பாண்டில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த அக்டோபர் மாதம் 3-ஆம் தேதி பீப்பாய்க்கு 77.96 அமெரிக்க டாலர் என்ற உச்சக்கட்டத்தில் இருந்தது. இப்போது அது 60.13 டாலர் என்ற அளவுக்கு குறைந்துள்ளது. இது 22.87% வீழ்ச்சி ஆகும். கச்சா எண்ணெய் விலை அடிப்படையில் தான் உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது என்பதால், அவற்றின் விலைகளும் கடந்த அக்டோபர் மாதம் 3&ஆம் தேதி இருந்ததை விட 22.87% குறைக்கப்பட்டிருக்க வேண்டும். அதாவது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.19.34 குறைந்து ரூ.67.84 ஆக இருக்க வேண்டும். அதே போல் டீசல் விலையும் லிட்டருக்கு ரூ.18.20 குறைந்து ரூ.61.37-க்கு விற்கப்பட வேண்டும். ஆனால், சென்னையில் இன்றைய நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 80.90, டீசல் ரூ.76.72 என்ற விலைக்கு விற்கப்படுகிறது. அதாவது 22.87% குறைய வேண்டிய பெட்ரோல், டீசல் விலைகள் முறையே 7.20%, 3.66% என்ற அளவில் தான் குறைந்துள்ளன. இது ஏற்றுக்கொள்ள முடியாத விலை நிர்ணயமாகும்.

உலக சந்தையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 60 டாலராக இருந்தது. கச்சா எண்ணெயின் இப்போதைய விலையும், கடந்த ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி விலையும் ஒன்றாகும். கடந்த ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.71.65 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.60.79 ஆகவும் இருந்தது. அப்படியானால், இப்போதும் அதேவிலையில் தான் பெட்ரோலும், டீசலும் விற்பனை செய்யப்பட வேண்டும். ஆனால், இன்றைய சந்தை விலை முறையே ரூ. 80.90, டீசல் ரூ.76.72 உள்ளது. ஆக எந்த வகையில் பார்த்தாலும் இயல்பாக விற்பனை செய்ய வேண்டிய விலையை விட பெட்ரோல் லிட்டருக்கு 13.04 ரூபாயும், டீசல் விலை 15.93 ரூபாயும் கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது. இது மிகப்பெரிய கொள்ளையல்லவா?

பெட்ரோல் மீது ஏற்கனவே 118% வரி விதிக்கப்படுகிறது. அதற்குப் பிறகும் பெட்ரோல் விலையில் 13.04 ரூபாயும், டீசல் விலையில் 15.93 ரூபாயும் மறைமுகமாக உயர்த்தி விற்பனை செய்வது எந்த வகையில் நியாயம்? இந்தத் தொகை நுகர்வோருக்கு கிடைத்திருக்க வேண்டும். ஆனால், அவர்களுக்கு அந்தத் தொகை கிடைக்கவில்லை. நுகர்வோருக்கு கிடைக்கவில்லை என்றால் அந்தத் தொகை வரியாக மத்திய, மாநில அரசுகளுக்கு செல்ல வேண்டும். ஆனால், அப்படியும் அரசுகளுக்கு செல்லவில்லை. மாறாக, இவை எண்ணெய் நிறுவனங்களின் கருவூலத்தில் எந்தக் கணக்கிலும் இல்லாமல் சேருகின்றன.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிடும் புள்ளி விவரங்கள் இந்தக் குற்றச்சாட்டை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளன. வழக்கமாக பெட்ரோல் விலையும், டீசல் விலையும் எவ்வாறு நிர்ணயிக்கப்படுகின்றன? என்பது குறித்த விவரங்களை இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிடும். ஆனால், அக்டோபர் 29-ஆம் தேதிக்குப் பிறகு இந்த விவரங்களை இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிடவில்லை. அந்த விவரங்களை வெளியிட்டால் உண்மை நிலை அம்பலமாகிவிடும் என்பதால் தான் அவற்றை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிடாமல் ரகசியமாக வைத்து பாதுகாத்து வருகின்றன.

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியின் பயன்களை மக்களுக்கு வழங்காததால் பொதுத்துறை நிறுவனங்களுக்கு கூடுதல் லாபம் கிடைப்பதைப் போலவே ரிலையன்ஸ் உள்ளிட்ட தனியார் எண்ணெய் நிறுவனங்களுக்கும் கூடுதலாக லாபம் கிடைக்கிறது. இதனால் தனியார் எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு நாளும் பல்லாயிரம் கோடியை சட்டவிரோத லாபமாக குவித்து வருகின்றன. தனியார் எண்ணெய் நிறுவனங்கள் லாபம் ஈட்ட வேண்டும் என்பதற்காகத் தான் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் எண்ணெய் நிறுவனங்களின் கணக்கில் அரசு சேர்த்து வருகிறதோ? என்ற ஐயம் எழுகிறது.

2014-16 காலத்தில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்த போது அதன் பயன்களை மக்களுக்கு வழங்காமல் கலால் வரி உயர்வு என்ற பெயரில் மத்திய அரசு பறித்துக் கொண்டது. இப்போது கச்சா எண்ணெய் விலைக் குறைப்பின் பயன்களை மக்களுக்கு வழங்காமல் எண்ணெய் நிறுவனங்களுக்கு தாரை வார்த்திருக்கிறது மத்திய அரசு. இதை விட பெரிய சுரண்டல் இருக்க முடியாது.

மத்திய அரசுக்கு மக்கள் நலனில் அக்கறை இருந்தால் கச்சா எண்ணெய் விலைக்கு இணையாக உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலைகளும் குறைக்கப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்" என்று ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Dr Ramadoss Pmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment