Advertisment

பசுமை வழிச்சாலை: முதலமைச்சர், தமிழக மக்கள் பிரதிநிதியா? மத்திய அரசின் முகவரா? - ராமதாஸ்

பசுமைவழிச் சாலை திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தீர்மானித்து விட்டது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பசுமை வழிச்சாலை: முதலமைச்சர், தமிழக மக்கள் பிரதிநிதியா? மத்திய அரசின் முகவரா? - ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னையிலிருந்து சேலத்திற்கு 8 வழி பசுமைச்சாலை அமைக்கும் திட்டம் மத்திய அரசின் திட்டம் என்றும், அத்திட்டத்திற்காக நிலங்களை கையகப்படுத்தித் தருவது மட்டும் தான் மாநில அரசின் பணி என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருக்கிறார். முதலமைச்சரின் இந்தக் கருத்து உண்மை தான் என்றாலும், மத்திய அரசின் இந்த வாழ்வாதாரப் பறிப்புத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக தமிழக மக்களின் நிலங்களை மிரட்டி, உருட்டி கையகப்படுத்த முதலமைச்சர் துடிப்பது கண்டிக்கத்தக்கது.

Advertisment

பசுமைச்சாலை திட்டம் மத்திய அரசின் திட்டம் என்று இப்போது கூறும் எடப்பாடி பழனிச்சாமி சரியாக 20 நாட்களுக்கு முன் கூறியது என்னவென்று நினைத்துப் பார்க்க வேண்டும். கடந்த 11.06.2018 அன்று சட்டப்பேரவையில் இதுதொடர்பாக நடந்த விவாதத்தில் ஆவேசமாக குறுக்கிட்டு பேசிய முதலமைச்சர், ‘‘பசுமை வழிச்சாலை சென்னையில் இருந்து சேலம் வரை அமைப்பதிலே உங்களுக்கு என்ன கஷ்டம்? கொண்டு வருவது தவறா? மத்திய அரசிடம் போராடி பெற்றிருக்கின்றோம். எத்தனை எதிர்ப்பு வந்தாலும் இந்த சாலைத் திட்டத்தை செயல்படுத்தியே தீருவோம்’’ என்று கூறியிருந்தார். ஆனால், அதற்கு முற்றிலும் மாறுபட்ட வகையில் இத்திட்டத்திற்காக நிலம் எடுத்துத் தருவதை தவிர மாநில அரசுக்கு எந்த பங்கும் இல்லை என்று இப்போது கூறுகிறார். முதல்வரின் குரலும், நிலைப்பாடும் தளர்ந்து காணப்படுகிறது. மக்களின் எதிர்ப்பு காரணமாக இந்த மாற்றம் நிகழ்ந்திருந்தால் வரவேற்கத்தக்கதே.

சென்னை& சேலம் இடையிலான சாலை மத்திய அரசின் திட்டம் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், மத்திய அரசின் திட்டம் தமிழகத்திற்கு வரும் போது, அதை மக்களின் நிலையிலிருந்து தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அணுகியிருக்க வேண்டும். பசுமைவழிச் சாலையால் தனியார் நிறுவனத்தைத் தவிர வேறு யாருக்கும் பயன் இல்லை; அதேநேரத்தில் இச்சாலைக்காக 7000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படவிருப்பதால் 7500 உழவர்கள் நிலங்களை இழப்பர்; 15,000&க்கும் மேற்பட்ட கூலித்தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள் என்பன உள்ளிட்ட உண்மைகளை கருத்தில் கொண்டு தான் இத்திட்டத்தை ஏற்பதா, வேண்டாமா? என்று தமிழக அரசு முடிவு செய்திருக்க வேண்டும். இந்தத் திட்டத்திற்கு மக்களிடம் ஆதரவு இருக்கிறதா, எதிர்ப்பு நிலவுகிறதா? என்பதில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஏதேனும் குழப்பம் இருந்தால், அதுகுறித்து மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தியிருக்கலாமே? மராட்டிய மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் அம்பானி குழுமத்தின் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு எதிர்ப்பு எழுந்த போது பொதுவாக்கெடுப்பு நடத்தி தானே அத்திட்டத்தை மராட்டிய மாநில அரசு ரத்து செய்தது.

கேரளத்தில் சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையிலான எந்தத் திட்டமும் அனுமதிக்கப்படுவதில்லை. கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணுமின் நிலையத்தை கேரளத்தில் அமைக்க திட்டமிடப்பட்ட போது அம்மாநில மக்களுடன் இணைந்து அரசும் எதிர்த்து தான் முறியடித்தது. சுற்றுசூழலுக்கும், விவசாயத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் கோக் ஆலைக்கு பிளாச்சிமடா மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அதை மதித்து அந்த ஆலையை மூட கேரள அரசு தீர்மானித்தது. இது தான் மக்கள் நலன் காக்கும் அரசுக்கு அடையாளம் ஆகும். ஆனால், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி என்ன செய்தார் தெரியுமா?

பசுமைவழிச் சாலை திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தீர்மானித்து விட்டது. அதற்கான கோரிக்கை தமிழக அரசிடமிருந்து வர வேண்டும் என்பதால், அதற்கான அழுத்தம் தமிழக ஆட்சியாளர்களுக்கு கொடுக்கப்பட்டது. இதற்காக கடந்த பிப்ரவரி மாதம் 25&ஆம் தேதி சென்னையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பசுமைச்சாலைத் திட்டத்தை பாரத்மாலா திட்டத்தில் இணைத்து செயல்படுத்த வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுக்கிறார். அடுத்த 24 மணி நேரத்தில் அக்கோரிக்கை ஏற்கப்படுகிறது. அந்நேரத்தில் தான் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும்படி உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருந்தது. அதுகுறித்தும் நிதின்கட்கரியிடம் தான் விவாதிக்க வேண்டும்; ஆனால், அதை முதல்வர் செய்யவில்லை. பசுமைச்சாலை விவகாரத்தைப் பொறுத்தவரை மத்திய அரசின் விருப்பத்தை நிறைவேற்ற பாடுபடும் முகவராகத் தான் எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டாரே தவிர, மக்கள் பிரதிநிதியாக செயல்படவில்லை.

சென்னையிலிருந்து சேலம் செல்லும் இரு தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 2.57 கோடியாக அதிகரித்து விட்டதாகவும், இதனால் விபத்து ஏற்படுவதை தடுக்கவே தொலைநோக்குப் பார்வையுடன் புதிய சாலை அமைக்கப்படுவதாக முதல்வர் கூறுகிறார். அவரது கூற்றுப்படியே பார்த்தாலும் இரு தேசிய நெடுஞ்சாலைகளிலும் சராசரியாக தினமும் 35,205 வாகனங்கள் மட்டுமே செல்கின்றன. இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையப் புள்ளிவிவரங்களில்படி இது 29,502 பயணியர் வாகனங்கள் மட்டுமே. அடுத்த 5 ஆண்டுகளுக்கு பிறகும் கூட இது 44,794 என்ற அளவில் தான் இருக்கும். ஆனால், இரு நெடுஞ்சாலைகளிலும் தினமும் தலா 85,000 ஊர்திகள் வரை பயணிக்க முடியும். இந்த நிலையை எட்ட இன்னும் 30 ஆண்டுகளுக்கு மேலாகும். அவ்வாறு இருக்கும் போது இப்போது புதிய சாலை அமைக்க வேண்டும் என்பது தேவையற்ற, பணத்தை வீணடிக்கும் செயல்.

புதிய சாலை அமைக்கப்படுவதற்கான நோக்கங்களில் நெடுஞ்சாலை விபத்துகளை குறைப்பதும் ஒன்று என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருப்பது தான் நகைச்சுவையாகும். விபத்துகளை தடுக்க வேண்டும் என்பதற்காக பாட்டாளி மக்கள் கட்சி உச்சநீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்தி தமிழகத்தில் சாலையோரங்களில் இருந்த 3,321 மதுக்கடைகளை மூடியது. ஆனால், அடுத்த சில வாரங்களில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து சாலைகளில் அவசரமாக மதுக்கடைகளை திறந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, விபத்துகளை குறைப்பது குறித்தெல்லாம் பேசுவது கேலிக்கூத்தின் உச்சமாகும்.

ஆட்சி அதிகாரமும், காவல்துறையும் கைகளில் இருக்கும் அகந்தையில் மக்களை அடக்கி, இந்த சாலைத் திட்டத்தை செயல்படுத்தி விடலாம் என எடப்பாடி நினைத்தால் தோல்வியடைந்து விடுவார். மேற்கு வங்கத்தில் 34 ஆண்டுகள் அசைக்க முடியாத அளவுக்கு இடதுசாரி கூட்டணி ஆட்சி செய்தது. ஆனால், அடக்குமுறை மூலம் சிங்கூர் மற்றும் நந்திகிராமத்தில் சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைக்கத் துடித்தது தான், ஆட்சிக் கட்டிலில் இருந்து இடதுசாரிகளை தூக்கி வீசியது என்பதை கொள்ளைப்புறத்தின் வழியாக ஆட்சிக்கு வந்த அரசு மறந்து விடக்கூடாது. மக்கள் நலனில் பழனிச்சாமி அரசுக்கு அக்கறை இருந்தால் 8 வழிச் சாலைத் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தக் கூடாது என்று மத்திய அரசிடம் தெரிவிக்க வேண்டும்; இதன் மூலம் மக்கள் அச்சத்தை போக்க வேண்டும்" என்று ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Pmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment